படம் அவுட்டு… பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி
காதலுக்கு எல்லைகள் உண்டு. எல்லை கடந்தால், அது எல்லை கடந்த பயங்கரவாதமாக, காமமாகச் சொல்லப்படுகிறது. காமத்துக்கு கொஞ்சம் வர்ணங்களைப் பூசிவிட்டால், அதை காதலாக, ‘அரசாங்க கெஜட்டில்’ பதிவிட்டு பெயர் மாற்றுவது போல, காதல் என்று சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால், காதலுக்கும் காமத்துக்கும் நடுவே திருமணம் வந்துவிடுகிறது. காமத்துக்கு, காதல், கல்யாண எடைமிஷின்கள் இருப்பதில்லை. இதிலும் காதலாகி கசிந்துருகுவதும் காமத்தில் திளைத்து விரகநெருப்பில் எரிவதும் ஆணா பெண்ணா என்கிற கேள்விகள், ஆதியில் இருந்தே பிரித்துப் பகுத்து, வகுத்துக்கிழித்து, ஒருவட்டத்துக்குள் இருக்கவைக்கின்றன.
‘அவன் ஆம்பள’ என்று சொல்லுவார்கள். பொம்பளை எல்லையைத் தாண்டினா பூமி தாங்காது என்று கண்ணாம்பா காலத்து வசனம் சொல்லுவார்கள். ‘முள்ளுல சேலை பட்டாலும் சேலைல முள்ளுபட்டாலும்’ என்று வசனம் பேசுவார்கள். மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள நோயாளியாக இருக்கும் கணவன் போராட்டத்தை ‘சாரதா’ எனும் திரைப்படம் சொல்லியது.
அக்காவுக்கு முன்னமே திருமணம் செய்துகொண்டு, கணவனை இழந்தவளுக்குள் நிகழ்கிற காம உணர்வுகளை அடக்குவதற்கு, நள்ளிரவில் குளித்துவிட்டு வருகிற ‘அவள் ஒரு தொடர்கதை’ ஸ்ரீப்ரியாவின் வலியை நம்மால் உணரமுடிகிறதுதானே! அதேபடத்தில், டீன் ஏஜ் மகளிருக்க, அழகும் இளமையும் இருக்கிற விதவை அம்மா, ‘ஸ்லிப்’ ஆகிற கதாபாத்திரத்தின் உள்ளுணர்வையும் நாம் உறைந்துபோய் பார்த்தோம்தானே! செக்ஸ் வைத்துக்கொள்ள அழைக்கிற பாக்யராஜின் நாயகிகள், அத்தனைப் பெண்களுக்காகவும் உரிமைக்குரல் கொடுத்தவர்களாகத்தான் நான் பார்த்தேன். இளம் விதவையான ஜெயசித்ரா, வாய்விட்டுக் கேட்காமல், கண்களாலேயே, கமலஹாசனை அழைப்பார். அங்கே… இளமை ஊஞ்சலாடியது!
சபலம், சரசம் என்கிற சாமான்ய வார்த்தைகளுக்குள் சிக்காத வலிகள்தான் ஆசாபாசங்கள். காம எண்ணங்கள். அந்த உணர்வுகளை, ரத்தமும் வலியுமாக, சதையும் கண்ணீருமாகச் சொன்ன பாடல்களில், ‘பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’ என்ற பாட்டு, மனசைப் போட்டு பிசைந்தெடுத்த பாட்டு!
இங்கிலீஷில் பேசிவிட்டு, அடுத்து அதற்கு தமிழ் அர்த்தமும் சொல்லி வசனம் பேசுபவர் என்று மேஜர் சுந்தர்ராஜனை நினைத்துக்கொண்டிருந்தால், அது தவறு. மகா நடிகர் அவர். ஏராளமான நாடகங்களை மேடையேற்றிவர். படங்களைத் தயாரித்து டைரக்ட் செய்தவர் மேஜர் சுந்தர்ராஜன்.
‘இவர் இப்படித்தான் படம் எடுப்பார்’ என்று பலரையும் முத்திரை குத்துகிற மாதிரியில்லாமல், தான் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவிதமாக எடுத்தார் மேஜர். அதில் அவரின் தீராத கலைத்தாகம் தெரியும். கமலை வைத்து ‘அந்த ஒரு நிமிடம்’ மாதிரி ஆக்ஷன் படம் எடுத்தவர்தான், சிவகுமாரை வைத்து ‘இன்று நீ நாளை நான்’ எடுத்தார்.
நாவலைப் படமாக்கினார் மேஜர் சுந்தர்ராஜன். சிவகுமார், ஜெய்சங்கர், லட்சுமி, சுலக்ஷணா முதலானோர் நடித்தார்கள். முதிர்கன்னியாக இருக்கும் லட்சுமிக்கு திருமணமே ஆகாது. அதையும் தாண்டி ஜெய்சங்கருடன் திருமணமாகும்போது, முதலிரவே நடக்காது. பிறகு ஜெய்சங்கரும் இறந்துவிட, ஜெய்சங்கரின் தம்பி சிவகுமார், தூக்கத்தில் தன் மனைவி சுலக்ஷணாவை நினைத்துக் கொண்டு, லட்சுமியிடம் கொஞ்சிப் பேச, கைதொட்டு இழுக்க, அடுத்தடுத்த நாளில், சிவகுமாரும் லட்சுமியும் சங்கமிப்பார்கள் என்று போகிற கதையில், ‘போகிற கதை’யாக மட்டுமே பார்த்தார்கள் ரசிகர்கள்.
ஆனால் போகிற போக்கில் பாடலைத் தரவில்லை இளையராஜா. லட்சுமி கதாபாத்திரத்தின் மொத்த வேதனைகளையும் உள்வாங்கிக்கொண்டு இசைஞானி, காம உணர்வுகளின் பாழந்த பங்களாவுக்கு வெளிச்சப்பாய் வீசினார். அதற்கு சாமர வரிகளையும் இளைப்பாறலுக்கான கிளைகளையும் உருவாக்கினார் கவியரசு வைரமுத்து. காதல், களியாட்டம், குத்தாட்டம், இழப்பு, தாய்மை, பெண்மை, விரகம், வில்லங்கம் என எல்லா உணர்வுகளுக்கும் பொருந்துகிற ஜானகியம்மாவின் குரல், இந்தப் பாடலுக்கு ஜீவன், உயிர், நாடி எல்லாமே!
சில பாடலை வரிகளுடன் ஆரம்பிப்பார் இளையராஜா. இசையின் பயணங்களுக்குப் பிறகு வரிகளைத் தொடங்குவார். சில தருணங்களில், ஹம்மிங்கில் மொத்த பாரத்தையும், தாகத்தையும் சொல்லிவிடுவார். இவையெல்லாம் இளையராஜா ‘ரூம் போட்டு’ யோசிப்பதில்லை. ஆர்மோனியத்தில் கைவைக்கும் போது, அவரின் ஆத்மா சொல்லும். அதை அப்படியே இளையராஜா நோட்ஸாக்கிவிடுவார்!
இடி, மின்னல், மழை, காற்று. இங்கிருந்து கொஞ்சமாக இசை தொடங்கும். அப்படியே ‘ஆஆஆஆஆஆஆஆ…’ என்கிற ஆலாபனையில் ஹம்மிங் பாடுவார் ஜானகியம்மா. மிருதங்கமெல்லாம் ‘தடங் தடங்’ என்று நம் நெஞ்சில் அறையும்.
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அந்தக் கேரக்டருக்கே தெரிகிறது. ‘எண்ணம் மீறுகிறோம்’ என்று! ‘வெள்ளை’யில் இருந்து வண்ணத்துக்கு மாறுகிற சிந்தனை கண்களின் ஓரத்தில் எட்டிப்பார்க்கிறது. கவியரசு வைரமுத்து லேசாக மழையில் நனைந்திருப்பார். பிறகு அந்த நாயகி வேறு, வைரமுத்து வேறு என்றில்லாமல் உருமாறுவார். பாலினம் மாறுவார்!
மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
காம மழையில் நனையும் பூக்கள் ஒதுங்கிக்கொள்ள இடம் பார்க்கிறதாம். பூக்களெல்லாம் அம்புகள் போல் உயிர் வரை வந்து தாக்குகின்றனவாம்! என்னவொரு உவமை. இத்துடன் விட்டாரா வைரமுத்து?
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
கோளாறு, பாலாறு, காதல் ஆசை, காமன் பூஜை, ஜோடி வண்டுகள், கோடு தாண்டுமா? என்று காமம் தருகிற பேரானந்தத்தை, வரிகளில் சொல்ல, ’புருஷன் அழைத்தால்தான் காமம்’ என்றிருக்கும் உலகத்துப் பெண்களையும் உசுப்பிவிட்டு, கண்ணீர் கசியச் செய்யும்!
தங்கத் தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ
என்று வைரமுத்து எழுத, இளையராஜாவின் இசையும் ஜானகியம்மாவின் உச்சரிப்பும் அந்த ஏக்கத்தை நாம் உணரச்செய்யும்.
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
மலர்க்கணை பாயாதோ மதுக்குடம் சாயாதோ
என்ற வரிகளில், காமத்துக்கும் கண்ணியம் சேர்த்திருப்பார். கிரீடம் சூட்டியிருப்பார் வைரமுத்து!
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானம்மா
மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
இளையராஜா எத்தனையோ மெலடிப் பாட்டுகளைப் போட்டிருக்கிறார்.
சொல்ல முடிந்த காமம், சொல்லமுடியாத காமம், சொல்லியும் தீராத காமம் என்றெல்லாம் இசைத்துத் தந்திருக்கிறார். அப்போது விவிதபாரதியில் இந்தப் பாடலை அடிக்கடி ஒலிபரப்புவார்கள். விரும்பிக்கேட்ட நேயர்களின் பெயர்களையும் சொல்லுவார்கள். அந்தப் பெயர்கள் பெரும்பாலும் பெண்களின் பெயர்களாகத்தான் இருக்கும். தப்பித்தவறி ஆண்கள் பெயரும் அந்தப் பட்டியலில் இருந்தால், ஒன்று… அந்த ஆண் பெயரை வைத்துக்கொண்டு, அத்தையோ சித்தியோ அக்காவோ பாடலைக்கேட்க விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று அர்த்தம்!
இன்னொன்று… இந்தப் பாடலைக் கேட்டால் அழுகிற ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!
