Home சினிமா படம் ஓடல… பாட்டு ஓஹோ! ‘கொட்டாம்பட்டி ரோட்டிலே’காலம் கடந்து நிற்கும் பாடல்! – Kumudam

படம் ஓடல… பாட்டு ஓஹோ! ‘கொட்டாம்பட்டி ரோட்டிலே’காலம் கடந்து நிற்கும் பாடல்! – Kumudam

0



படம் அவுட்டு… பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி

கர்நாடக சங்கீதத்தில், வயலினுக்கு தனியிடமும் உயரமும் சிம்மாசனமும் கொண்டவர்களில் மிக முக்கியமானவர் குன்னக்குடி வைத்தியநாதன். தன் வயலினைக் கொண்டு, கர்நாடக சங்கீதத்தை பட்டிதொட்டியெங்கும் பரவச் செய்ததிலும் எளிய மாந்தர்களுக்குள்ளே இசையைப் புகுத்தி,  அந்த ராக,கீத, ஆலாபனை,ஸ்வர சஞ்சாரம் தெரியாதவர்களைக் கூட, தலையசைக்க வைத்து ரசிக்கவைத்ததிலும் குன்னக்குடி வைத்தியநாதன், குன்றக்குடி மலையை விட உயர்ந்து நிற்கிறார்! .

சினிமாவுக்கு அடுத்தபடியாக பாட்டுக் கச்சேரிக்கு அப்போதெல்லாம் முக்கியத்துவம் உண்டு.  பாடல்களைக் கேட்பதிலும் முணுமுணுப்பதிலும் மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது; ஆர்வம் இருந்தது. எண்பதுகளில், இளையராஜாவின் இசை, எங்கு பார்த்தாலும் ஒலித்துக்கொண்டிருந்தது. ரிக்கார்டுகளும் கேசட்டுகளும் அவற்றின் அட்டைகளும் பார்த்தே குதுகாலமான ரசிகர்கள் உண்டு. வானொலிகளின் மீது மாறாக் காதல் கொண்டிருந்தார்கள் பெண்கள். ’ஆகாசவாணி மாநிலச் செய்திகள்… வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி’ என்பதை அப்பாக்கள் கேட்டார்கள்.

‘மனிதர்களே கவனியுங்கள்’ என்று பசுவின் வழியே மனிதனுக்குச் சொன்ன விவசாயத்தை விரும்பிக் கேட்ட விவசாயிகள் பலர் உண்டு. அண்ணன் கிரிக்கெட் ஸ்கோர் கேட்பான். அம்மா ‘ஒலிச்சித்திரம்’ என்று படத்தின் கதைவசனங்களை ஒலிபரப்புவார்கள். அதைக் கேட்பாள். ஆனால், பாட்டு அப்படியில்லை. போட்டாபோட்டியாக, வீடும் அக்கம்பக்கமும் களேபரமாகிவிடும்.

குறிப்பிட்ட நேரத்தில், பாடல் ஒலிபரப்புவார்கள். ஆனால், அந்த நேரத்துக்கும் முன்னதாகவே ரேடியோவுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு, அலைவரிசைகளை சரியாக வைத்துக்கொண்டு, தவம் கிடந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள். அப்படிக் கேட்ட பாடல்கள் பல்லாயிரம். அந்த ஆயிரத்தில் ஒரு பாடலாக… மறக்கவே முடியாத பாடலாக அமைந்ததுதான் ‘கொட்டாம்பட்டி ரோட்டிலே… ஹோ ஹோய்…’ என்கிற பாட்டு!

‘அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்னய்யா சம்பந்தம்’ என்பார்கள். ‘முழங்காலுக்கும் உச்சந்தலைக்கும் முடிச்சு போடுறியே…’ என்பார்கள். குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கொட்டாம்பட்டி ரோட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று யாரேனும் கேட்கலாம். தொடர்பு இருப்பதால்தான், இந்தப் பதிவு; இந்த எழுத்து!

பக்தி, சினிமா, சாஸ்திரிய சங்கீதம் என்று பாடல்களையெல்லாம் கோடு கிழித்து பிரித்துக் கொள்ளாமல், எல்லாமே இசைதான்  என்று உணர்ந்து வாழ்ந்தவர்; நமக்கு உணர்த்தி வாழவைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். அவர்தான் ‘கொட்டாம்பட்டி ரோட்டிலே’ பாடலுக்கு இசையமைத்தார். அதுமட்டுமா? ‘தோடி ராகம்’ என்று படத்துக்கு தலைப்புவைத்துவிட்டு, அட்டகாசமான கிராமத்துப் பாடலைப் பாடியவரும் இவர்தான்.படத்தை இயக்கியவரும் குன்னக்குடியார்தான்!

சிவாஜியின் ‘ராஜராஜ சோழன்’ படத்துக்கும் எம்ஜிஆரின் ‘நவரத்தினம்’ படத்துக்கும் இன்னபிற படங்களுக்கும் இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதனுக்கு படத்தை டைரக்ட் செய்யவேண்டும் என்று ஆசை, நெடுங்காலமாகவே இருந்தது. ஆரம்பமாக, கதையை யோசித்தார். கதாநாயகன் யார் என்று பலநாட்கள் யோசித்தார். இசைக்கதை என்பதால் இசைக்கு உரியவரே நடித்தால் நன்றாக இருக்கும் என ஒருவட்டத்தை முடிவு செய்தார். தேடினார்.

அரசியல் கட்சிகளுக்கு திருப்புமுனை தரும் ஊராகத் திருச்சியைச் சொல்லுவார்கள். ஒருமுறை, திருச்சிக்கு கச்சேரிக்காக வந்தார் குன்னக்குடி வைத்தியநாதன். கச்சேரி முடிந்ததும் காரில் சென்னைக்குக் கிளம்பினார். திருச்சி பேருந்து நிலையம் வழியே கார் வந்தது. அங்கே பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார் அவர். அவரும் கர்நாடக இசையுலகில் மறக்கமுடியாத மாமனிதர்தான். மதுரையில் இருந்து எக்ஸ்பிரஸ் பஸ் கிடைக்காமல், சாதாரண பஸ்சில் திருச்சி வரைக்கும் வந்தார். திருச்சியில் இருந்து எக்ஸ்பிரஸ் பஸ் கிடைக்குமா எனக் காத்திருந்தார். அவரைப் பார்த்ததும் காரை அருகில் சென்று எக்ஸ்பிரஸ் வேகத்தில் நிறுத்தச் சொன்னார் குன்னக்குடி வைத்தியநாதன்.

 
காரில் இருந்து இறங்கினார் குன்னக்குடியார் இருவரும் முகமன் சொல்லிக்கொண்டார்கள். முகம் மலரப் பேசிக்கொண்டார்கள். ‘சென்னைக்குப் போகணும். எக்ஸ்பிரஸ் பஸ் கிடைக்கல’ என்றார். ‘வாங்க நம்ம கார்லயே போகலாம்’ என்று அவரை குன்னக்குடிவைத்தியநாதன் ஏற்றிக்கொண்டார். இருவரும் காரில் பேசிக்கொண்டே வந்தார்கள். பேச்சு குடும்பம் குறித்தும் இசை குறித்தும் விரிந்தது. சினிமாவில் வந்து நின்றது. படமெடுக்கும் ஆசையைச் சொன்னார் குன்னக்குடி வைத்தியநாதன். ‘அட… கதையெல்லாம் ரெடியா?’ என்று சுவாரஸ்யமாகக் கேட்டார் அந்த மதுரைக்காரர்.

கதையைச் சொன்னார் குன்னக்குடியார். ‘ஆஹா… நல்லாருக்கே. யார் நடிக்கிறாங்க?’ என்று கேட்டார் அவர். ‘இன்னும் ஹீரோதான் கிடைக்கல. நீங்களே ஹீரோ மாதிரிதான் இருக்குறீங்க. மியூஸிக் சப்ஜெக்ட். நீங்களே நடிங்களேன்’ என்றார் குன்னக்குடி வைத்தியநாதன். கொஞ்சம் தயங்கி, கொஞ்சம் வெட்கப்பட்டு, கொஞ்சம் யோசித்து, ‘சரி… நடிச்சிட்டாப் போச்சு’ என்றார். சென்னைக்கு கார் வருவதற்குள் படத்துக்கு நாயகன் கிடைத்துவிட்ட திருப்தி குன்னக்குடி வைத்தியநாதனுக்கு! உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அவருக்கு நன்றி சொன்னார். ‘இது தெய்வ சங்கல்பம்.

இல்லேன்னா, இப்படியொரு சந்திப்பு நடந்திருக்குமா? எல்லாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரோட கட்டளை’ என்று சிலிர்த்துச் சொன்னார். குன்னக்குடி வைத்தியநாதன் இயக்கத்தில் வெளியான ‘தோடி ராகம்’ படத்தின் நாயகன் யார் தெரியுமா? இசையுலகில் தனி ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்த மதுரை டி என் சேஷகோபாலன் தான் அவர்! நடிகை நளினிதான் ஜோடி. ‘தொட்டு நடிக்கமாட்டேன், ஆட மாட்டேன்’ என்று ‘மணல்கயிறு’ எஸ்வி சேகர் போல், ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போட்டு, சம்மதித்த பிறகே நடித்தார் சேஷகோபாலன்!

‘தோடி ராகம் பாடினேன்’ என்பது உள்ளிட்ட எல்லாப் பாடல்களும் இசையின் உன்னதங்களை நமக்கு உணர்த்தின. குன்னக்குடி வைத்தியநாதனின் மேதமைக்கு இவையெல்லாம் சான்று. ஆனால் குன்னக்குடியாருக்கே உரிய குறும்பும் குசும்பும் கொண்ட பாடலாக அவர் அமைத்ததுதான் ‘கொட்டாம்பட்டி ரோட்டிலே’! ‘நான் ரொட்டியத்தான் திம்பேனா குட்டியத்தான் பாப்பேனா’ என்று குழைவார் குன்னக்குடி வைத்தியநாதன்.

கொட்டாம்பட்டி ரோட்டிலே
குட்டி போற ஷோக்கிலே
நான் ரொட்டியத்தான் தின்பேனா
குட்டியைத்தான் பாப்பேனா
என்று சொல்லிவிட்டு ‘ட்டுடுடுர்ர்ர்ர்ர்ர்ர்’ என மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டே இந்தப் பாடல்வரும். 

அந்தக் காலத்தில் குருவி ரொட்டி என்பது எங்களின் பெருங்கனவு. ஐந்துபைசாவுக்கு இரண்டு கை முழுக்கக் கடைக்கார அண்ணாச்சி மாமா (அப்படித்தான் கூப்பிடுவேன்) கொடுப்பார். டிராயரின் இரண்டு பாக்கெட்டுகளிலும் போட்டால் நிரம்பி வழியும் குருவி ரொட்டி. முந்திரித்தோப்புக்கு வந்தால் என் நண்பர்கள். ஆளுக்கு ரெண்டு கொடுப்பேன்.

எல்லோரும் இரண்டு கைகளிலும் குருவிரொட்டியை வைத்திருக்க, குட்டை என்கிற என் நண்பன், ‘ஸ்டார்ட்’ சொல்லுவான். உடனே, எல்லோரும் ‘நான் ரொட்டியைத்தான் திம்பேனா, குட்டியைத்தான் பாப்பேனா’ என்று சத்தமாகப் பாடுவோம். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் வருகிற தியாகராஜன் போலவே, ‘டேனியல் மாமா’ புல்லட்டில் வருவார். எங்களுக்கு அருகே வண்டியை நிறுத்தினால், தசரதன் ‘ஒன்னுக்கே’ போயிருவான். அந்தப் பாட்டு பாடிக்கொண்டிருக்கும்போது, ஆட்டமும்பாட்டமுமாக இருக்கும்போது, யதார்த்தமாக திரும்பிப்பார்த்தால், ராகவா லாரன்ஸ் படத்தில் முகத்துக்கு எதிரே பேய் வந்து க்ளோஸப்பில் பயமுறுத்துமே… அதுபோல் வந்து நின்றார். அவ்வளவுதான்! ‘என்னடா முளைச்சு மூணு இலை கூட விடலை, குட்டியைப் பாப்பீங்களா?’ என என் தலைமுடியைக் கொத்தாகப் பிடித்தார். கையில் குருவி ரொட்டியைப் பார்த்தார்.

அப்படியே அன்னை தெரசாவாக டேனியல் மாமா மாறினார். ‘பிஸ்கட்டை தின்னுட்டு, வீட்டுக்குப் போய் படிக்கிற வேலையை ஒழுங்காச் செய்யணும். இந்த குட்டிகிட்டினு பாடினீங்க… லைட்போஸ்ட்ல கட்டிப்போட்ருவேன்’ என்று செல்லமாக மிரட்டிச் சென்றார். ஆனாலும் அடுத்தடுத்த நாள்களில், எங்களை இவர் தாண்டிச் சென்ற பிறகு, ‘குட்டியத்தான் பாப்போம்டா குட்டியத்தான் பாப்போம்டா குட்டியத்தைப் பாப்போம்டா’ என்று பாடுவோம். அது எங்களுக்கே கேட்காது.

‘மீசை எனக்கிருக்கு
மோகம் நிறைஞ்சிருக்கு
சிங்காரத் தோப்பிருக்கு
சிவந்த பழம் அங்கிருக்கு
சிணுங்காம வந்து நின்னா
வெக்கப்படாம வாங்கிக்கலாம்
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹஹா… என்று வெளுத்து வாங்குவார் குன்னக்குடி வைத்தியநாதன்!

இளநீரு காய்ச்சிருக்கு
மரம் ஏற ஆளிருக்கு
தாகம் உனக்கிருந்தா
தணிய வைக்க நானிருக்கேன்
பரிசம் போடணும்னா
பக்கத்துலே வாடியம்மா
என்று சொல்லிவிட்டு, பாடிக்கொண்டிருக்கும்போதே சிரிப்பார்.

முகமோ சிவந்திருக்கு
மொழுமொழுன்னு உடம்பிருக்கு
இடையோ இளைச்சிருக்கு
இளவட்டம் தனிச்சிருக்கு
இருட்டுமுன்னே ஒட்டிக்கவா
விடியவிடிய கட்டிக்கவா

என்று நாட்டுப்புற பாடலாக, கிராமத்துப் பாடலாக, தெம்மாங்குப் பாடலாக, குத்தாட்டப் பாடலாக கொடுத்து அசத்தினார் குன்னக்குடி வைத்தியநாதன். இருநூறு விதமாக வயலினைப் பேசும் குன்னக்குடி வைத்தியநாதன், இந்த வரிகளுக்குள் வைத்ததெல்லாம் டபுள் மீனிங்!

1983ஆம் ஆண்டு, குன்னக்குடி வைத்தியநாதனின் ‘தோடி ராகம்’ வெளியானது. படத்தின் ரிசல்ட்டும் தோடியிலேயே முடிந்தது. ஒரு வாரத்திலேயே தியேட்டரை விட்டு ஓடியது.  அப்போதெல்லாம் செகண்ட் ரிலீஸ், தேர்டு ரிலீஸ் என்றெல்லாம் உண்டு. அந்த வரிசையில் கூட தேடியும் ‘தோடி’ வரவே இல்லை. கல்லாவும் கட்டவில்லை. ஆனாலும் இந்தப் பாடல் மட்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வானொலிகளில், டீக்கடைகளில், கல்யாண வீடுகளில், பாட்டுக் கச்சேரிகளில் என்று பட்டிதொட்டிசிட்டி பாரபட்சமில்லாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

இதேகாலகட்டத்தில், பழநிக்கு பாதயாத்திரைக்கு விரதம் இருந்து முதன்முதலாக காரைக்குடியில் இருந்து சென்றோம். வழியில் குன்றக்குடி வந்தது. வைத்தியநாதனைத் தேடினோம். திருப்பத்தூர், சிங்கம்புணரியெல்லாம் வந்தது. நத்தம் வந்தது. அடுத்து கொட்டாம்பட்டியும் வந்தது. சாலையோரத்தில், கொட்டையெழுத்தில் ‘கொட்டாம்பட்டி’ எனும் அறிவிப்பைப் பார்த்ததும், பாதயாத்திரையாகச் சென்ற நாங்கள், ‘கொட்டாம்பட்டி ரோட்டிலே ஹேஹே… குட்டி போற ஷோக்கிலே…’ என்று கோரஸாகப் பாட, என் சித்தி ‘சும்மா வாடா’ சும்மாச்சுக்கும் சொன்னாள். யாரோ ஒருவர், ‘யாரு முருகா சினிமாப்பாட்டைப் பாடுறது? முருகன் பாட்டைப் பாடிட்டு வாங்க முருகா’ என்று சொல்ல, ‘அலங்காரம் செய்திட்ட மயிலு வேல் வேல், நம்ம முருகனின் கையிலே சிங்காரவேலு வேல்வேல்’ என்று பாடியபடி வந்தோம்.

பின்னாளில், குன்னக்குடி வைத்தியநாதனை திருநெல்வேலி நெல்லையப்பர் விழாவில் பேட்டி எடுத்தபோது, இதையெல்லாம் சொன்னேன். ‘என் மனைவி ஒருவகையில் உங்களுக்குச் சொந்தமாம்’ என்றேன். ‘அட… அப்படியா?’ என்று கேட்டேன். ‘என்ன வேணும்டா…’ என்று கேட்டார். அந்த ‘கொட்டாம்பட்டி ரோட்டிலே’ பாடலை வாசிக்கணும் சார்’ என்றேன். வயலினை எடுத்தார். மோவாய்க்கட்டைக்குக் கீழே அணைத்துக்கொண்டார். இன்னொரு முனையை ஒரு குழந்தையைப் போல் மடியில் வைத்துக்கொண்டார். ஏதோ குழந்தைக்கு தலைவாருவதுபோல, வயிலின் நரம்புகளை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக இழுத்து, அழுத்தி, மெல்ல நகர்த்தி, வயலினுடன் விளையாடினார்.

‘நான் குட்டியைத்தான் பாப்பேனா, ரொட்டியைத்தான் திம்பேனா’ என்ற இடத்தில் வாசிக்கும்போது, என்னையும் அறியாமல் கைத்தட்டினேன். நெல்லையப்பரும் காந்திமதி அன்னையும் அந்த இசையைக் கேட்டு, சந்தோஷமாகச் சிரித்திருப்பார்கள் என்பதாகத்தான் உணருகிறேன்!



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version