சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘ஜெயிலர்’ படத்தின் அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர் 2’ தொடர்பான ஒவ்வொரு தகவலும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
இப்படத்தில் உள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் ஒவ்வொன்றாக நேற்று (செப்.,18) முதல் வெளியிட்டு வருகிறது படக்குழு. படம் அக்டோபர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் ஒன்று உலா வருகிறது. ‘ஜெயிலர் 2’வில் அதிகளவில் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், இதனால் படத்துக்கு ’ஏ’ சர்டிஃபிகேட் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தனது சமீபத்திய படமான ‘கூலி’க்கு ஏ சர்டிஃபிகேட் கிடைத்திருந்த நிலையில், அதனால் குடும்ப ரசிகர்கள் மத்தியில் படத்தின் வரவேற்பு மற்றும் வசூலில் பாதிப்பு ஏற்பட்டதாக ரஜினி கருதுவதாகவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.
இதனால், ‘ஜெயிலர் 2’ விஷயத்தில் அதே நிலை மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதில் ரஜினி கவனமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சென்சார் தொடர்பான சில விஷயங்களை அவர் நேரடியாகக் கவனித்து வருவதாகவும் தகவல்.
ஆனால், இதுதான் தற்போது இயக்குநர் நெல்சனுக்கு புதிய தலைவலியாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் வன்முறை காட்சிகள் உள்ளிட்ட சில கிரியேட்டிவ் அம்சங்களில் மாற்றம் ஏற்பட்டால், தனது இயக்குநர் பாணி பாதிக்கப்படுமோ என்ற கவலை நெல்சனுக்கு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி–நெல்சன் கூட்டணியில் உருவாகும் ‘ஜெயிலர் 2’வில், சென்சார் vs கிரியேட்டிவிட்டி என்ற இந்த புதிய பிரச்சினை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்.
