Home அரசியல் கடலூர் திமுகவில் ‘குடும்ப அரசியல்’ சர்ச்சை…பன்னீர்செல்வத்துக்கு எதிராக வெடித்த மோதல்! – Kumudam

கடலூர் திமுகவில் ‘குடும்ப அரசியல்’ சர்ச்சை…பன்னீர்செல்வத்துக்கு எதிராக வெடித்த மோதல்! – Kumudam

0



கடலூர் தி.மு.க. முகமான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கு எதிராக புகார் கொடுத்த கிள்ளை பேரூர் செயலாளர் ரவீந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது அம்மாவட்ட உடன்பிறப்புகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரனிடம் பேசினோம். “பள்ளிப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவன் நான். காட்டுமன்னார் கோயில் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இருந்தபோது, நான் அதன் துணை அமைப்பாளராக இருந்தவன். ஆனால், என்னால் அதே ஒன்றியத்துக்கு உட்பட்ட கிள்ளை பேரூர் கழகச் செயலாளர் பதவியைத் தாண்டிப்போக முடியவில்லை.

இன்றைக்கு ஆட்சியை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் கட்சி இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் கட்சியைக் காப்பாற்ற, அனைவரையும் அரவணைத்து செல்லும் நபராக பன்னீர்செல்வம் இருக்க வேண்டும். மாற்றுக்கட்சியிலிருந்து வருபவர்களை துரிதமாக செயல்பட்டு இழுக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் அவர் குடும்ப அரசியலை முன்னெடுக்கிறார்.

தற்போது கட்சியில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்கிறார்கள். அப்போது கடலூர் மாவட்டத்தின் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று பார்த்தால் நான்கு மாவட்டச் செயலாளர் பதவிகளைப் போடவேண்டி வரும். அப்போது பன்னீர்செல்வத்திற்கு பதிலாக அவர் குடும்பத்தைச் சேர்ந்த அவரின் மகனையோ அவரின் உறவினர்களையோ போடாமல், கட்சிக்காரர்கள் யாரையாவது போடுங்கள் என்று மனு கொடுத்தோம்.

ஆனால், அதை பரிசீலிக்காமல் என்னை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருப்பது என்ன நியாயம்? ஆதரவாளர்கள் என்ன முடிவெடுக்க சொல்கிறார்களோ அதன்படி நடந்துகொள்வேன். கட்சியிலிருந்து என்னை நீக்கினால் கட்சிக்குத்தான் நஷ்டம், எனக்கு இல்லை.” என்றார் காட்டமாக.

இதுகுறித்து கேட்க எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை தொடர்புகொண்டோம், அவரின் உதவியாளரோ, “சட்டமன்ற கூட்டத் தொடரில் இருக்கிறார்” என்றார். கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கிள்ளை பிரபுவிடம் பேசினோம், 15 வருடங்களாக கிள்ளை பேரூர் கழகச் செயலாளராக ரவீந்திரன் இருந்துவருகிறார்.

நானும் அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவன்தான். ஆனாலும், நான் வளர்ந்துவிடக் கூடாது என்று நான் பணிபுரிந்துவந்த தனியார் வங்கியில், ‘இவன் தி.மு.க.வில் இருக்கிறான். இவனுக்கு எப்படி வேலை கொடுத்தீர்கள்?’ என்று வங்கி என் வேலையை இழக்கச் செய்தார். தி.மு.க. கவுன்சிலர் சிவப்பிரகாசத்தை பேரூராட்சி ஊழியர்களை விட்டு அடிக்கவைத்தார். தி.மு.க. ஐடி.விங் நிர்வாகி கந்தனின் மனைவி அமலாவையும் தாக்கினார்கள்.

ரவீந்திரனுக்கு ஐந்து ஏக்கர் நிலத்துக்கு நடுவில் பங்களா வீடு இரண்டு உள்ளன. இதன் மதிப்பே பல கோடி வரும். வஃக்பு போர்டு நிலம் இங்கே 300 ஏக்கர் உள்ளது. அதில் 20 ஏக்கரை இவர் வைத்திருக்கிறார். இவ்வளவு சொத்துகளை கட்சியிலிருந்துதான் சம்பாதித்தார். ஆனால், இன்றைக்கு கட்சி மாவட்டச் செயலாளருக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்படுவது எதைக் காட்டுகிறது என்பது இங்குள்ள மக்களுக்கே நன்கு தெரியும்” என்றார்.
ஆக, தி.மு.க. உட்கட்சித் தேர்தலில் கோஷ்டிப் பூசல் தொடங்கிவிட்டது!

– பி. கோவிந்தராஜூ 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version