சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை துணை மேயர் மகேஷ்குமாரை சந்தித்தோம். மாநகராட்சியின் நிதிநிலை, வார்டு மேம்பாட்டு நிதி, சொத்துவரி உயர்வு, மழைநீர் வடிகால் பணிகள், பருவமழை முன்னெச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மகேஷ்குமார் கடுமையான விமர்சனங்களை நம்மிடையே முன்வைத்தார்.
மாநகராட்சி மாதாந்திர மாமன்றக் கூட்டத்தில் கருப்புச் சட்டை ஏன்?
கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் வேகவேகமாக மேற்கொள்ளப்பட்டன. மக்கள் குறைகள் கேட்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் புதிய அரசு பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் மாநகராட்சிப் பணிகள் மந்தமாகியுள்ளன. வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கான பணம் வழங்கப்படவில்லை. மக்கள் நலத் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதைக் கண்டித்தே திமு.க. கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தோம்.”
வார்டு நிதிப் பகிர்வில் சிக்கல் இருக்கிறதா?
கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிய இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. ஒரு திட்டத்தை செயல்படுத்த திட்ட மதிப்பீடு, குழு ஒப்புதல், மாமன்ற அனுமதி, டெண்டர் என குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். மீதமுள்ள மூன்று மாதங்களில் பணிகளை முடிப்பது சிரமம். எனவே 2026-27ம் ஆண்டுக்கான வார்டு மேம்பாட்டு நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என சிறப்பு தீர்மானம் மூலம் அரசை வலியுறுத்தியுள்ளோம்.
மாநகராட்சியின் நிதிநிலையும் மோசமடைந்துள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் சுமார் ரூ.3,400 கோடி நிலுவை தரவேண்டி இருக்கிறது. முடிக்கப்பட்ட பணிகளுக்காக சுமார் ரூ.2,100 கோடியும், நடைபெற்று வரும் பணிகளுக்காக ரூ1,300 கோடியும் தேவைப்படுகிறது. மாநகராட்சியின் உண்மையான நிதிநிலை குறித்து அரசு முழுமையாக அறிந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆய்வுக் கூட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்திருந்தால், மாநகராட்சியின் நிதி நிலைமையை நேரடியாக எடுத்துச் சொல்லியிருப்போம்”
சென்னையில் 3.49 லட்சம் பேருக்கு மூன்று முதல் ஆறு மடங்கு வரை சொத்து வரி உயர்வு தொடர்பான நோட்டீஸ் வழங்கப்பட்டது சர்ச்சை ஆகியிருக்கிறதே?
மேயர், துணை மேயர், மாமன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட குழுக்களிடம் ஆலோசனை நடத்திய பின்னரே இதுபோன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் எந்தவிதமான ஆலோசனையும் இல்லாமல் சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். பின்னர் அரசு அதைத் திரும்பப் பெற்றது. இனிமேல் சொத்து வரி நிர்ணயம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்.”
வேளச்சேரி மேம்பாலம் ஏன் முடங்கியது?
“வேளச்சேரியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டுதான் அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு லட்சம் பேர் திரண்டபோது அந்தப் பகுதியில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக பட்டது. இது போன்ற கொண்டுதான் உள்கட்டமைப்பு திட்டமிடப்படுகிறது. ஆட்சி மாறினாலும் நல்ல திட்டங்கள்
தொடர வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கப்படக் கூடாது.
தற்போதைய நிலையில் பெருமழை வந்தால் சென்னை தாக்குப்பிடிக்குமா?
“வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக இருப்பதாக அரசு கூறிவரும் நிலையில், பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிதியின்றி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. போரூர், நந்தம்பாக்கம், முகலிவாக்கம். ஆற்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் தொய்வடைந்துள்ளன. ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படாமல் பணிகளை எவ்வாறு முடிக்க முடியும்? ஓட்டேரி நல்லான் கால்வாய் தூர்வாரும் பணியிலும் முறைகேடு நடந்துள்ளது. நான்கு மீட்டர் ஆழத்துக்கு தூர்வார வேண்டிய நிலையில் ஒரு மீட்டர் மட்டுமே தூர்வாரப் பட்டதாக கூறப்படும் புகார் குறித்து குழு அமைத்து முழுமையான ஆய்வு நடத்த வேண்டும்.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் போன்றவற்றிற்கு மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளையும் அரசு அழைத்து ஆலோசிக்க வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் சென்னையை மழை பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்”
தமிழக அரசிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
“சென்னையின் அடுத்த பத்து ஆண்டுகால வளர்ச்சியை கருத்தில்கொண்டு மேம்பாலங்கள், நடைபாதைகள், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளுக்கான நீண்டகால திட்டம் அவசியம். அதோடு, போக்குவரத்து சிக்னல்களில் குழந்தைகளை வைத்து யாசகம் பெறுவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தக் குழந்தைகளை மீட்டு காப்பகங்களில் வைத்து முறையாக பராமரிக்க வேண்டும். மாநகராட்சிக்கு தேவையான நிதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும். மக்கள் நலத் திட்டங்களை முடக்காமல், அரசியல் பாகுபாடின்றி தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்”
சென்னை உள்ளிட்ட தமிழக மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைத்து சிறப்பு அதிகாரிகளை நியமிக்க த.வெ.க., அரசு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறதே…
இதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. கடந்த நான்கு மாதங்களாக எங்களுக்கு எந்தவிதமான அழைப்பும் இல்லை. எங்களிடம் கருத்தும் கேட்கப்படுவதில்லை. பதவியில் இருந்தும் இல்லாத நிலையால் முன்கூட்டியே மாநகராட்சியைக் கலைப் பதால் பாதிப்பில்லை”
சென்னை மாநகராட்சியில் 4000 கோடி ரூபாய் மதிப்பிலான மழைநீர் வடிகால் திட்டத்தில் ஊழல் என த.வெ.க. அரசு குற்றம்சாட்டுகிறதே..?
இதில் ஊழல் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று முன்னாள் அமைச்சர் கேஎன்.நேரு தெரிவித்துள்ளார். எங்களது நிலைப்பாடும் அதேதான். மேலும் மழைநீர் வடிகால் பணிகள் திட்டமிடல், நிதி ஒதுக்கியது அனைத்துமே அதிகாரிகள்தான். எங்களது பங்கு இதில் எதுவும் இல்லை.”
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?
தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். பொதுத்தேர்தலில் தவறாக த.வெ.க.வை தேர்வுசெய்துவிட்டோம் என மக்களுக்கு மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகையால்
தி.மு.கவின் வெற்றி உறுதி”
(அ.ராமச்சந்திரன்)





