Home அரசியல் சட்டமன்ற கூட்டத்தொடர்….சாதித்ததா, சறுக்கியதா த.வெ.க? – Kumudam

சட்டமன்ற கூட்டத்தொடர்….சாதித்ததா, சறுக்கியதா த.வெ.க? – Kumudam

0



தாரை இளமதி

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை தோற்கடித்த பிறகும் அக்கட்சி மீதான கோபம் முதல்வர் விஜய்க்கு குறையவே இல்லை என்பது 28 நாட்கள் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் வெளிப்பட்டிருக்கிறது. ஸ்டாலினை உருவகேலி செய்யும் விதமாக, விஜய் பேசியதை கம்யூனிஸ்ட் கட்சிகளும், சற்றே தாமதமாக திருமாவளவனும் கண்டித்திருப்பதன் மூலம் த.வெ.க. சட்டமன்றக் கூட்டத்தை சரியாக பயன்படுத்தவில்லையா என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது!

த.வெ.க. ஆட்சியின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் சாதனையா, சறுக்கலா? மூத்த அரசியல் ஆய்வாளர்கள் சிலரிடம் பேசினோம். “முதல்வர் விஜய்க்கு சட்டமன்றத்திற்கும் பொதுக்கூட்ட மேடைக்கும் உள்ள வேறுபாடு தெரியவில்லை என்பதுதான் கவலை தருகிறது. த.வெ.க அரசு அமைந்தவுடன் முதன்முறையாக கடந்த ஜுன் மாதம் 18ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது.

அதன்மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய விஜய், ‘அப்பாவை காணோம்’ என்றும், அதற்கு மேலாக கை சைகை செய்தும் ஸ்டாலினை விமர்சனம் செய்தது கடும் விமர்சனத்திற்குள்ளானது. அப்போதே அவரது அரசை ஆதரிக்கும் வி.சி.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையாக கண்டித்தன. தி.மு.க.வின் பிரதான எதிரியான எடப்பாடியும்கூட விஜய்யின் இந்த செயலை விமர்சனம் செய்தார். அதன் பிறகும் முதல்வரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படவில்லை.

விஜய் வழியிலேயே அமைச்சர்கள் ஆதவ், நிர்மல்குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் ஸ்டாலினையும் உதயநிதியையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசினார்கள். தொகுதி பிரச்னை குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசினாலும்கூட அவர்கள் துறை சம்பந்தபடாதபோதும் அடிக்கடி குறுக்கிட்டு தி.மு.கவை மூன்று அமைச்சர்களும் சீண்டினார்கள்.

முந்தைய தி.மு.க. ஆட்சியில் குற்றச்சாட்டுகளாக மட்டுமே உள்ள ஊழல் புகார்கள் குறித்து ஆவேசமாக பேசி மூவருமே சர்ச்சைக்கு வித்திட்டார்கள். இப்படி இரு கட்சிகளுக்கு இடையேயான வார்த்தை போரால் 28 நாட்கள் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. சட்டமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளை பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை.

சட்டமன்றத்தில் தி.மு.கவை சீண்டுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. ‘அவர் இல்லாத நேரங்களில் அவை நடவடிக்கைகள் அமைதியாக நடைபெறுகின்றன’ என பிரேமலதா சட்டமன்றத்திலேயே குற்றம்சாட்டினார். அவை மரபுக்கு மாறாக ஆதவ் அர்ஜுனா,நிர்மல் குமார் ஆகியோர் பேசியதையெல்லாம் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலையிட்டு, அவை குறிப்பிலிருந்து நீக்கியது எல்லாம் விஜய் அரசுக்குத்தான் இழுக்கு. தி.மு.க.வை வம்புக்கு இழுத்த ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகிய மூவருமே முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் குறித்து மூச்சே விடாதது சமூக ஊடகங்களில் கடும் விவாதமானது.

சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் மரியவில்சன், ‘தமிழ் வார்த்தைகளை சரியாக உச்சரிக்க வேண்டும்’ என தி.மு.க. எம்.எல்.ஏ அறிவுரையாக கூறியபோது, மரியவில்சன் கொந்தளித்தார். அவரைப்போலவே அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, ஸ்ரீநாத் ஆகியோரும்கூட தமிழில் சரியாக பேச முடியாமல் தடுமாறினார்கள். 75 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட சட்டமன்றத்தில் தமிழில் பேசவே அமைச்சர்கள் திணறுகிறார்கள். பள்ளி மாணவர்களுக்குரிய பொது அறிவுகூட இல்லாமல் இருக்கிறார்கள் என்பது குறித்து சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை பற்றியெல்லாம் விஜய் துளியளவும் கவலைபட்ட மாதிரி தெரியவில்லை.

இதன் உச்சமாக, கடந்த செப்டம்பர் 7ம் தேதி காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் விஜய்யின் ஒட்டுமொத்த பேச்சையுமே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும். வி.சி.க.வும் கடுமையாக கண்டித்திருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்திய சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளாக மட்டுமே பதிவு செய்திருந்த விஷயங்களை ஆக்ரோஷமாக விஜய் பேசியதும், மிசா காலத்தில் சிறைபடுத்தப்பட்ட ஸ்டாலின் அனுபவித்த சித்ரவதையை கிண்டலடிக்கும் வகையில் கை சைகை செய்ததையும் ஆளுங்கட்சியான த.வெ.க.வை தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்தது எல்லாம், தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அவலம், த.வெ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு பயனளிக்கும் வகையில், அவர்களின் செயல்பாடுகள் அமையவில்லை என்பதுதான் மிகப்பெரிய வருத்தம்” என்றார்.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் டி.வி.சோமுவிடம் பேசினோம். “சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் மோசம். குறிப்பாக காவல்துறை மானியக் கோரிக்கை மீது அவர் பேசியதும், உடல்மொழியும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதுவும் சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்து பேசியதும் மிசா காலக் கொடுமைகளை பற்றியெல்லாம் விஜய் கிண்டலடித்து பேசியதெல்லாம் கடும் கண்டனத்திற்குரியவை.

சட்டமன்றத்தின் மரபுகளை விஜய்யோ, அவரது அமைச்சர்களோ துளியும் மதிக்கவில்லை என்பதைத்தான் நடந்து முடிந்த சட்டமன்ற நிகழ்வுகள் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த போக்கு, தமிழக அரசியலுக்கு மிகப்பெரிய தீங்காக அமைந்துவிடும்” என்றார்.

நிறைவாக த.வெ.க. செய்தித் தொடர்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விஜயதாரணியிடம் பேசினோம். “முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியை ஜீரணித்துக்கொள்ள முடியாத தி.மு.க., த.வெ.க ஆட்சி மீது அவதூறுகளை கட்டவிழ்த்துவிடுகிறது. அவற்றை எல்லாம் முறியடித்து சிறப்பான ஆட்சியை முதல்வர் விஜய் தந்துகொண்டிருக்கிறார்.

சட்டமன்றத்தில் அவரது உரையும், அறிவிப்புகளும் பெருவாரியான மக்களை கவர்ந்திருக்கிறது. அவரது உடல்மொழி இயல்பான ஒன்றுதான். அதுகுறித்து அவரே விளக்கம் அளித்திருக்கிறார்” என்றார். மக்கள் கவனிக்கிறார்கள்..



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version