Home அரசியல் தவெகவுக்கு கிடைத்த அங்கீகாரம்…தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொன்ன விஜய்! – Kumudam

தவெகவுக்கு கிடைத்த அங்கீகாரம்…தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொன்ன விஜய்! – Kumudam

0



தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) மாநிலக் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளின் பட்டியலில் தவெகவும் இணைந்துள்ளது.

திமுக, அதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்ற 7-வது கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, 35 சதவீத வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில், மாநிலக் கட்சி அங்கீகாரத்துக்கான தேர்தல் ஆணைய விதிமுறைகளை அக்கட்சி பூர்த்தி செய்துள்ளது.

இதையடுத்து, தவெகவுக்கு மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பு அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தவெகவின் அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமாக ‘விசில்’ சின்னம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ள நிலையில், மக்களுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வாரி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.

எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம். மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள். 35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் பிடித்தீர்கள்.

உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம். மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப்பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது.

ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட்டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி! என்று தெரிவித்துள்ளார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version