back to top
19.2 C
London
Tuesday, September 15, 2026
No menu items!
Homeசினிமா’மயிலே மயிலே உன் தோகை இங்கே!’ ஜென்ஸி, எஸ்பிபி, இளையராஜா கூட்டணிப் பாட்டு! - Kumudam

’மயிலே மயிலே உன் தோகை இங்கே!’ ஜென்ஸி, எஸ்பிபி, இளையராஜா கூட்டணிப் பாட்டு! – Kumudam

Date:

Related stories

காங்கிரஸ், பாஜகவுக்கு செக்? மூன்றாவது அணிக்கு அச்சாரம் போடும் திமுக?

திமுக தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் முயற்சி தீவிரமடைந்துள்ள நிலையில்,...

விநாயகர் சதுர்த்தியில் வெளியான ராமாயணா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல்...

“அவையை எப்படி நடத்தணும்னு எனக்குத் தெரியும்!” – சபாநாயகர் விளாசல் !

சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்திய சில விவகாரங்கள் குறித்து சபாநாயகர் ஜே.சி.டி....
spot_imgspot_img



வி.ராம்ஜி

‘படம் தோத்துட்டாலும் பாட்டு நின்னு பேசும்’ என்றொரு பட்டியல் போட்டால், ‘அட இந்தப் படமா?’ என்போம். ‘இப்படியொரு படம் வந்துச்சா?’ என்று புருவம் உயர்த்துவோம். அப்படியான படங்களையும் அந்தப் படங்களையும் இன்றைக்கும் ஞாபகம் வைத்திருக்க உதவுகிற பாடல்களும் ஏராளம்! அந்த வகையில் வாலிபக்கவிஞர் வாலியின் பாடல் ஒன்று நான் அடிக்கடி முணுமுணுக்கிற பாடல் இது! ‘மயிலே மயிலே உன் தோகை இங்கே!’

1976ம் ஆண்டு மத்திமமான மாதமான மே மாதத்தில் ‘அன்னக்கிளி’ தந்த கானமாக, ராகமாக, தேவகானமாக, இளையராஜா நமக்குக் கிடைத்தார். அன்று தொடங்கி இன்றுவரைக்கும் பெயருக்கேற்றார் போலவே, இசையில் இளமை ஆர்ப்பரிக்கிற ராஜாவாகவே திகழ்கிறார் இளையராஜா.

என்றும் மார்க்கண்டேயன் என்று கொண்டாப்படும் மரியாதைக்கு உரிய சிவகுமார், ஒருவகையில் கொடுத்த வைத்த மவராசன். இளையராஜாவின் முதல் படத்தின் நாயகன் என்பது சிவகுமாருக்கு கூடுதல் பெருமை; சரித்திரப் பதிவு! அதுமட்டுமா? அப்போதுதான் கமல், ரஜினி என இரண்டு புயல்கள் மையம் கொள்ளத் தொடங்கின. மினிமம் பட்ஜெட், பாந்தமான கதை என்றால் முதல் உரிமை, முதல் போன் சிவகுமாருக்குத்தான்! அந்த வகையில் சிவகுமார், சுமித்ரா ஜோடி போட்ட திரைப்படம்தான் ‘கடவுள் அமைத்த மேடை!’

கே.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் பாடல்களில் ஒன்றான ‘கடவுள் அமைத்த மேடை’ என்ற பாடலின் வரியே படத்தின் தலைப்பானது. எஸ்பி முத்துராமன் இயக்கிய இந்தப் படத்துக்கு இளையராஜாதான் இசை!

தமிழகத்தின் மசாலாப் படங்களுக்கு மன்னன் எஸ்பி முத்துராமன் என்றாலும் அழகான, அட்டகாசமான குடும்பப் படங்களிலும் முத்திரை பதித்து, மனம் தொட்ட இயக்குநர் எஸ்பி முத்துராமனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. தயாரிப்பாளர்களின் இயக்குநர் இவர். பத்து லட்சத்தில் படம் எடுப்பதாக பட்ஜெட் சொல்லிவிட்டு, பதினெட்டு லட்சத்துக்கு இழுத்துவிடுகிறவர்களுக்கு நடுவே,ஏழெட்டு லட்சத்தில் முடித்துக்கொடுத்துவிட்டு ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக இருப்பார் எஸ்பிஎம்.
ஆக, சிவகுமார், சுமித்ரா நடிப்பில், இளையராஜா இசையில், எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 79ம் ஆண்டு வெளியானது ‘கடவுள் அமைத்த மேடை’. இரட்டை வேடம் என்றால் பெரும்பாலும் ஹீரோவுக்குதான் இந்த வாய்ப்பு இருப்பதாக ‘கதை’விடுவார்கள். ‘இதயக்கமலம்’, ‘புதிய பறவை’, ‘வந்தாளே மகராசி’, ‘வாணிராணி’ போல இந்த படத்திலும் சுமித்ரா டபுள் ஆக்ட்! இந்த வரிசையில் நயன்தாரா கூட இரட்டை வேடத்தில் அசத்தியிருக்கிறார் (ஐரா).

பாடல்களை வாலி எழுதினார். பாடல்கள் மட்டுமா? இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்து, வசனங்கள் எழுதி, பாடல்களையும் இயற்றினார் வாலி. பல பாடல்கள் இருந்தாலும் ‘மயிலே மயிலே’ பாட்டுதான் மயிலிறகு பாட்டு!

ஸ்வீட் நெய் சேர்ப்பார்கள். சர்க்கரையைக் கலப்பார்கள். முந்திரியையும் திராட்சையையும் கலப்பார்கள். வாலியின் எழுத்து நெய். இளையராஜாவின் இசை சர்க்கரை. எஸ்பிபி முந்திரி. ஜென்ஸி திராட்சை. அந்தப் பாட்டுதான் மயிலே மயிலே’ பாடல்.

மயிலே மயிலே உன் தோகை  இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிருடல் தொடலாமோ மயிலே ..மயிலே…என்று ‘குளிர்காலம்’ என்ற சொல்லுக்கு ஒருநடுக்கத்தையும் ‘தளிருடல் தொடலாமோ’ என்பதில் கெஞ்சலையும் தந்திருப்பார் எஸ்பிபி.

மயிலே மயிலே உன் தோகை எங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே
 ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ  
நினைவுகள் மலராதோ மயிலே மயிலே …’ என்று சொந்தத்தையும் உறவுப் பிணைப்பையும் நினைவில் கொண்டிருப்பதாக ஏங்குவார் ஜென்ஸி.

பாடலுக்கு ரம்மியம் மிருதங்கள். புல்லாங்குழலும் கிடாரும் கூடவே வந்து காதல் உணர்வை உரசி உரசி காதலையும் காமத்தையும் தூண்டிக்கொண்டே இருக்கும்!
‘தொடலாமா’ என்றோம். ‘தனிமை’ என்கிறோம். அவளும் சொந்தம், உறவு என்றெல்லாம் சொல்கிறாள். ஆகவே நாயகனுக்கு இப்போது தைரியம் வந்துவிட்டது.

’தென்றல் தாலாட்ட தென்னை இருக்க அது தன்னை மறக்க
 நீ அணைக்க நான் இருக்க நாள் முழுக்க தேன் அளக்க’ என்று சொல்ல யாருக்குத்தான் தைரியம் பிறக்காது?  
பனிவாய் மலரே …பல நாள் நினைவே
 வரவா தரவா பெறவா நான் தொடவா’ என்று ‘இதுதான் எனக்கு வேணும்’ என்று மனம் திறக்கிறான் காதலன்.

அதிலும் ‘வரவா தரவா பெறவா நான் தொடவா’ என்று எஸ்பிபியின் குரலைக் கேட்டு காதலைச் சொன்ன ரசிகர்கள் அன்றைக்கு எக்கச்சக்கம். ஆனாலும் நாயகி, கவனமானவள். கண்ணியம் மிக்கவள். ‘உன்னைப் புரிஞ்சிகிட்டேன். உன்னை விரும்புறேன். எல்லாம் சரிதான். ஆனால்… என்று ஜென்ஸி தன் குரல் வழியே பட்டியலைச் சொல்லி, பாரம்பரியம் காப்பார்.

மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க கெட்டி  மேளம் முழங்க என்று கல்யாணத்தைச் சொல்லி, ‘அமைதியோ அமைதி’ என்பார் ஜென்ஸி.
பூங்குழலி தேனருவி தோளிரண்டும் நான் தழுவி என விடாப்பிடியாக இருப்பார் சிவகுமார். உடனே சுமித்ரா,  ஒரு நாள் ஒரு நாள் அது தான் திருநாள்
 உறவாய் உயிராய் நிழலாய் வருவேன் என்று ‘ஓகே ஓகே… கல்யாணத்துக்கு அப்புறம்தான் எல்லாமே!’ என்று சம்மதித்து, காமத்தில் இருந்து விடுபட்டு காதலுக்கு வருவார்.

இளையராஜாவின் இசையில் பிடித்த பாடல்கள் என்று யார் வேண்டுமானாலும் லிஸ்ட் போடாலம். சிவகுமார் நடிப்பில் பாடல், சுமித்ரா நடிப்பில் பாடல், வாலியின் பாட்டு, எஸ்பிமுத்துராமன் படத்தின் பாட்டு, தமிழ் சினிமாப்பாட்டு என்று எந்த ரூட்டில் பாட்டு போட்டாலும் அங்கே… இந்த ‘மயிலே மயிலே’ வந்துவிடும்.

ஆறாவது படிக்கும்போது, இந்தப் படத்தைப் பார்த்து, பத்துபைசாவுக்கு பாட்டுப்புத்தகம் வாங்கி, வகுப்பில் இந்தப் பாடலை நான் பாடினேன். நண்பர்கள் டெஸ்க்கில் தாளம் தட்டினார்கள். ‘பெரிய எஸ்பிபி இவரு’ என வகுப்புப் பெண்கள் கேலி செய்தார்கள். ஆனால் செவிகளுக்கு இரவல் தந்திருந்தார்கள். ‘மயிலே மயிலே’ பாடலைத் தொடங்கி முடிக்கும்போது, எங்கள் ஜெயலட்சுமி டீச்சர், அதுவரை ஒட்டுக்கேட்டு பாட்டுக்கொண்டிருந்தவர், ‘மயில் வேணுமா உனக்கு. வா இங்கே வாடா’ என்று காது திருகி, கையை திருப்பச் சொல்லி, ஸ்கேலால் அடித்த போது நினைக்கவில்லை. ஆனால் அந்த ஸ்கேல் புல்லாங்குழல் மாதிரி இருந்துச்சு டீச்சர் என்று பள்ளியை விட்டு வந்த பிறகு, அந்தப் பள்ளிவிழாவில் சிறப்பு விருந்தினராக பேசச் சென்றபோது சொன்னேன். என் கைகுலுக்கி, வருடிவிட்ட ஜெயலட்சுமி டீச்சர்,  எனக்கு இளையராஜாவாகவே தெரிந்தார்.

இந்தப் படம் ஓடவில்லை. செகண்ட் ரிலீஸ், தேர்ட் ரிலீஸ், ஐந்து வருட உரிமை,புத்தம்புதிய காப்பி எனறு பல ரவுண்டுகள் கடக்கவில்லை.

காலங்கள் ஓடிவிட்டன. ஆனால் இந்தப் பாட்டு மனதில் அப்படியே! சில வருடங்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் ஊஞ்சல் இருந்தது. மர ஊஞ்சல். ஒரேசமயத்தில் மூவர் அமரலாம். என் மகள் நான்காவது படித்துக்கொண்டிருந்தாள். அவளை ஊஞ்சலில் நிற்கவைத்து பிடித்துக்கொள்வேன். அவள் என்னை ஒருகையிலும் இரும்புச்சங்கிலியை இன்னொரு கையிலும் பிடித்துக்கொள்ள, ‘மயிலே மயிலே உன் ஊஞ்சல் எங்கே’ என்று நான் பாடுவேன். பட்டென்று என் தலையில் தட்டி, ‘இங்கேதானே இருக்கு. அதுலதானே உக்கார்ந்திருக்கோம்’ என்பாள் அதட்டலாகவும் கொஞ்சலாகவும்!

மயிலும் அழகு. குயிலின் குரலும் ஆனந்தம். ராஜாவின் இசையும் எஸ்பிபியின் குரலும் ஜென்ஸியின் வசீகரக் குரலும் பேரானந்தம். மகளும்தான்!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here