Home அரசியல் பரந்தூர் விமான நிலையம் ரத்து: வளர்ச்சியா… வீழ்ச்சியா? – Kumudam

பரந்தூர் விமான நிலையம் ரத்து: வளர்ச்சியா… வீழ்ச்சியா? – Kumudam

0



காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை விவகாரங்களில் மெத்தனமாக இருந்ததாக த.வெ.க அரசுமீது விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்து மண்ணின் மைந்தர்களான விவசாயிகள் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார் முதல்வர் விஜய். ஆனால், இது வளர்ச்சியா, வீழ்ச்சியா என்று எழுந்திருக்கும் பட்டிமன்றம்தான் தமிழகத்தின் அனல் பறக்கும் அரசியல்!

இதுகுறித்து பரந்தூர் புதிய விமான நிலைய எதிர்ப்பு போராட்டக்குழுவின் செயலாளர் கதிரேசனிடம் பேசினோம். ‘சென்னைக்கு அருகே இன்னொரு விமான நிலையம் அமைக்கவேண்டும் என்ற மத்திய, மாநில அரசுகளின் நோக்கத்தின் அடிப்படையில் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 19 கிராமங்களின் பெரும்பகுதிகள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் போராடிவந்தனர். ஆனால் அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் விமான நிலைய பணிகள் வேகமெடுத்தன.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு தேவைப்படுவதாக கூறப்படும் 5,846 ஏக்கர் நிலத்தில் 1802 ஏக்கர் நிலங்கள் மட்டும்தான் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளன. ஏகனாபுரம், காரை, தண்டலம், சிறுகூடல் ஆகிய பகுதிகளில் மக்கள் நிலத்தைக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தமிழக அரசின் விமான நிலைய திட்டம் ரத்து என்கிற அறிவிப்பால், பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக சிலர் கருத்துகளை பரப்பிவருகிறார்கள். இது தவறான கண்ணோட்டம். சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையமே குறை திறனோடுதான் இயக்கப்பட்டு வருகிறது. அதை முழுத்திறனுக்கு மாற்றி, சற்றே விரிவாக்கம் செய்தாலே கூடுதல் சேவைகளை தரமுடியும்.

திருச்சி, மதுரை, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்களை கூடுதல் விரிவாக்கம் செய்யலாம். சேலம், தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய 3 உள்நாட்டு விமான நிலையங்களையும் இன்னும் சற்று விரிவாக்கி, இதில் ஏதேனும் ஒன்றை சர்வதேச விமான நிலைய அந்தஸ்துக்கு உயர்த்தலாம். இப்படி மாற்று வழிகள் இருக்கின்றன.
பரந்தூர் திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும். பரந்தூரை பொறுத்தவரை நான்கு ஏரிகள் உள்ளன.

பெரிய ஏரியில் மழைநீர் நிரம்பி அடுத்து சிறிய ஏரிக்கு வரும். அப்படி வரும் மழைநீரை சேமித்து வைத்தே இங்கு விவசாயம் செய்யப்படுகிறது. ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சர்வதேச விமான நிலையங்கள் தேவைதான். மறுபுறம் விவசாய நிலங்கள், நீர்நிலைகள், சுற்றுச்சூழலை குலைத்து வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது எதிர்ப்பு கிளம்புவதும் அதற்காக திட்டங்கள் கைவிடப்படுவதும் புதிதல்ல.

இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் விவசாயிகளிடம் எழுந்திருக்கிறது. அரசுதான் இதற்கு பதில் தரவேண்டும். எங்களுக்காக குரல் எழுப்பிய சீமான், அன்புமணி ராமதாஸ், வேல்முருகன் உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார் உணர்ச்சி மேலிட சென்னையைப் பொறுத்தவரை விமானப் பயணிகளின் நெரிசல் பெரியளவில் இல்லை என்பதால் பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதேநேரம் ஒரு புதிய பசுமைக்கள விமான நிலையத்தை உருவாக்க 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும். நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதி, நிதி ஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்பு அமைத்தல் என பல கட்டங்களை தாண்ட வேண்டும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உற்பத்தித் துறைகள் வேகமாக வளர்ந்துவரும் நிலையில், விமான சரக்குப் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து வருவதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

‘பரந்தூருக்கு பதிலாக மாற்று இடத்தை தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டால், தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லக்கூடும்’ என ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்துறை கூட்டமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. தற்போது சென்னைக்கு போதுமான கால அவகாசம் இருந்தாலும், மாற்று இடத்தை விரைவாக கண்டறிந்து திட்டத்தைத் தொடங்குவதே நகரத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு ஏற்றதாக இருக்கும்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, பூந்தமல்லி – பரந்தூர் இடையிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் தூரம் குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ‘மெட்ரோ வழித்தடம் பரந்தூருக்கு பதிலாக சுங்குவார்சத்திரம் வரை மட்டுமே செயல்படுத்தப்படும்’ என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொழில் வளர்ச்சியும் விவசாயமும் நாட்டின் இரு கண்கள்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version