Home அரசியல் இன்று அனல் பறக்குமா சட்டசபை விவாதங்கள்? முதல்வரின் மாஸ்டர் பிளான்! – Kumudam

இன்று அனல் பறக்குமா சட்டசபை விவாதங்கள்? முதல்வரின் மாஸ்டர் பிளான்! – Kumudam

0



சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய், தமிழை சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார். இதனுடன், முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறுகிறது.

சட்டசபையில் இன்று முக்கிய நிகழ்வுகள் :

2026-2027ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. ஆகஸ்டு 5ம் தேதி பொது பட்ஜெட்டும், 6ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.

தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்ற நிலையில், ஆகஸ்ட் 17ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை 43 துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கை விவாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான விவாதம் நடைபெறுகிறது.

முதலமைச்சர் விஜய் கொண்டு வரும் தீர்மானம் :

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், முதலமைச்சர் விஜய் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிய உள்ளார்.

இந்த தீர்மானத்தில், சென்னை ஐகோர்ட்டின் முதன்மையான நீதிமன்ற மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட உள்ளது.

மேலும், தமிழில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், வழக்கு ஆவணங்கள் மற்றும் வாதங்களுக்கு உரிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும், ஐகோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை தமிழிலும் வழங்கும் வகையில் தேவையான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.

தமிழை நீதிமன்ற மொழியாக நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் இந்த தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் :

முதலமைச்சர் விஜய் கொண்டு வரும் இந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்வார்கள்.

இதனைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவல் துறை மானியக் கோரிக்கை : 

இன்று நடைபெறும் காவல் துறை மானியக் கோரிக்கை விவாதம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

காவல் துறை முதலமைச்சர் விஜய் வசம் உள்ள முக்கிய துறையாக இருப்பதால், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.

இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேச உள்ளனர்.

காவல் துறை செயல்பாடுகள், குற்றச்சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜய் பதில் உரை :

சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து முதலமைச்சர் விஜய் பேச உள்ளார்.

மேலும், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட வாய்ப்பு உள்ளது.

நாளை அரசு விடுமுறை நாள் என்பதாலும், தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் சட்டசபை நிகழ்வுகள் நடைபெறாது.

இதையடுத்து, வரும் (செப்டம்பர் 7) திங்கட்கிழமை சட்டசபை மீண்டும் கூடும் நிலையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதில் உரை வழங்க உள்ளார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version