Home தமிழ்நாடு கிடுகிடுவென உயர்ந்த சிலிண்டர் விலை! ஹோட்டல்களில் விலை உயர்வு அபாயம்! – Kumudam

கிடுகிடுவென உயர்ந்த சிலிண்டர் விலை! ஹோட்டல்களில் விலை உயர்வு அபாயம்! – Kumudam

0



மாதத்தின் முதல் நாளான இன்று, சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கான புதிய விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.10.50 அதிகரித்துள்ளது.

ரூ.2,916.50-க்கு விற்பனை :

விலை உயர்வைத் தொடர்ந்து, சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு கியாஸ் சிலிண்டர் தற்போது ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பு இருந்த விலையுடன் ஒப்பிடும்போது ரூ.10.50 அதிகரித்துள்ளது.

வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலை உயர்வு, ஓட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்களுக்கு கூடுதல் செலவினத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை :

அதே நேரத்தில், வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் தொடர்ந்து ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாதந்தோறும் முதல் தேதியில் விலை மாற்றம் :

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன.

குறிப்பாக, வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலை பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் மறுஆய்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறது.

வணிகர்களுக்கு கூடுதல் சுமை :

தற்போது வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், ஏற்கனவே மூலப்பொருட்கள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டல்கள் மற்றும் சிறு வணிக நிறுவனங்களுக்கு இது மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வின் தாக்கம் உணவுப் பொருட்களின் விலை மற்றும் வணிகச் செலவுகளில் எதிரொலிக்குமா என்ற கவலையும் வணிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமா? :

இதற்கு, முன்னதாகவே அமெரிக்கா – ஈரான் போரின்போது சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான ஹோட்டல்கள் உணவுகளின் விலைகளை உயர்த்தியிருந்தது. அதன்பின், சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைத்த பின்னரும் ஏற்றிய விலைகளை ஹோட்டல்கள் குறைக்கவில்லை. 

அப்படியிருக்கையில், இந்த வணிக சிலிண்டர் விலை உயர்வு நேரடியாக ஹோட்டல்களை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், மீண்டும் உணவுகளின் விலை உயர்ந்து மறைமுகமாக பொது மக்களையும் பாதிக்குமா என்ற கேள்வி எழுகிறது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version