Home தமிழ்நாடு இனி ரேஷன் கடைகளில் வெங்காயம்! விலை உயர்வால் அரசு அதிரடி! – Kumudam

இனி ரேஷன் கடைகளில் வெங்காயம்! விலை உயர்வால் அரசு அதிரடி! – Kumudam

0



தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு :

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (செப்டம்பர் 1) நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் வெங்கட்ரமணன், மக்கள் நலன் மற்றும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், சந்தை நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

விலை கண்காணிப்பு குழு மூலம் தொடர்ந்து ஆய்வு :

அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விலை கண்காணிப்பு குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, விலை நிலவரங்களை ஆய்வு செய்யும் குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஆலோசனை நடத்தும் என்றும், தேவைப்படும் நேரங்களில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம் தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என்ன? :

தற்போது வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை ரூ.56 முதல் ரூ.60 வரை உயர்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் அவர் விளக்கினார். குறிப்பாக, சர்வதேச சூழல் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு, அதன் மூலம் அதிகரித்த போக்குவரத்து செலவுகள், அண்டை மாநிலங்களில் நிலவும் மாறுபட்ட காலநிலை மற்றும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட முக்கிய வெங்காய உற்பத்தி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்தது ஆகியவை விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

வெங்காயம் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை :

வெங்காய விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.

இதற்காக தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் முதற்கட்டமாக “1,000 மெட்ரிக் டன்” வெங்காயம் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த வெங்காயம் “ஒரு கிலோ ரூ.35” என்ற விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.

ரேஷன் கடைகளில் விற்பனை தொடக்கம் :

முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் 8,739 நியாயவிலை கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம் சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளதாகவும், இது தமிழ்நாட்டில் உள்ள மொத்த குடும்ப அட்டைகளில் சுமார் 35 சதவீதம் எனவும் அவர் கூறினார்.

வரும் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் நகர்ப்புற ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வீதம் வெங்காயம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் வெங்கட்ரமணன் சட்டமன்றத்தில் அறிவித்தார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version