back to top
20.8 C
London
Saturday, September 19, 2026
No menu items!
Homeதமிழ்நாடுநாளை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்ட்ரைக்... மதுபிரியர்களின் நிலை என்ன? - Kumudam

நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்ட்ரைக்… மதுபிரியர்களின் நிலை என்ன? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


தமிழ்நாட்டில் ஏற்கனவே தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது டாஸ்மாக் ஊழியர்களும் போராட்டக் களத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளனர். தங்களது நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் வழக்கம்போல் செயல்படுமா? மது விற்பனை பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

டாஸ்மாக் விவகாரத்தில் அரசின் அதிரடி:

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளிலும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக கூறப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள 717 மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மது விற்பனைக்கு தடை:

இதனுடன், 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியை டாஸ்மாக் ஊழியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. விதிமீறல்களை தடுக்கத் தவறும் உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொந்தளிக்கும் டாஸ்மாக் ஊழியர்கள்:

இந்த நடவடிக்கைகள் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மதுபானங்களை ஏற்றி இறக்கும் கூலி, கடை வாடகை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் தொடர்பான பிரச்சினைகள் தங்கள்மீது சுமத்தப்படுவதாகவும், ஆனால் மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதாக கூறி ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெறும் தவறுகளுக்கு அடிமட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலிகடா ஆக்கப்படுவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

பணி நிரந்தரம் முக்கிய கோரிக்கை:

பல ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு இதுவரை பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை என்பதும் தொழிற்சங்கங்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.

இதுதொடர்பாக பல ஆண்டுகளாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் முந்தைய அதிமுக மற்றும் திமுக ஆட்சிகளில் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய அரசு டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு வரும் நிலையில், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஈரோட்டில் ஆயத்த மாநாடு:

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் ஆயத்த மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது. இதில் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு போராட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் மது விற்பனை பாதிக்கப்படுமா?

இந்த நிலையில், நாளை காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

போராட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பங்கேற்றால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை வழக்கம்போல் திறந்து நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் மதுபான விற்பனையும் பாதிக்கப்படும் சூழல் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், அனைத்து டாஸ்மாக் கடைகளும் முழுமையாக மூடப்படுமா அல்லது சில பகுதிகளில் மட்டும் விற்பனை பாதிக்கப்படுமா என்பது போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் நிர்வாகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும்.

இதனால் “நாளை முதல் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் இயங்குமா? மது விற்பனை வழக்கம்போல் நடைபெறுமா?” என்ற எதிர்பார்ப்பு மதுபான நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here