Home சினிமா டாக்சிக் விமர்சனம்: வித்தியாசமான விஷக்கடி! – Kumudam

டாக்சிக் விமர்சனம்: வித்தியாசமான விஷக்கடி! – Kumudam

0


ஒரு கதை… அதை விளக்க காட்சிகள்… சுவாரஸ்யப்படுத்த திருப்பங்களுடன் ஒரு திரைக்கதை… ஆச்சரியப்படுத்த ஒரு ஓப்பனிங் சீன், ஒரு இன்டர்வல் பிளாக்… எதிர்பாராத ஒரு கிளைமாக்ஸ்… பொழுதுபோக்கு சினிமாவின் எலும்புக்கூடு இதுதான்… ஆனால் எலும்பே இல்லாத ஒரு போன்லெஸ் சினிமாவை முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் கீது மோகன்தாஸ்… கொஞ்சம் காஸ்ட்லி எக்ஸ்பிரிமென்டேஷன்…   

அதிகாரம், பணம் இரண்டும் இருந்தால் உலகமே உன் காலடியில்… அதை வைத்து உன் மனம் அடைய நினைப்பது இரண்டே இரண்டு தான்… மது போதை, பெண் சுகம்…  இரண்டும் கிடைக்கும், நீ பயமில்லாதவனாக இருந்தால்…  பயம் இல்லாதவனாக இருக்க வேண்டும் என்றால் உன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் பயமுறுத்த வேண்டும்… வீரம் பயத்தில் இருந்து தான் பிறக்கிறது… பயமில்லாதவனின் உயிர் அவன் கையில் இல்லை… அவனது கடிகாரமும் தான்… சமூகத்தில் சரி, தவறெல்லாம் எதற்கு?

இயக்குநர் கீது மோகன்தாஸ் சொல்ல வந்தது இதுதான்… சொல்ல வந்த விதம் சம்பவங்களாகவோ, காட்சிகளாகவோ இல்லை… தோன்றி 
மறையும் பிம்பங்களாக… வாழ்க்கையில் தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள ஒன்றுமில்லை என்பதுபோல், தெளிவற்ற வாழ்க்கை பற்றி ஒரு தெளிவில்லாத மனநிலையை திரையில் உருவாக்க முயற்சித்திருக்கிறார்…  

வாழ்க்கை அப்படித்தான் ஆனால் சினிமா அப்படியல்ல,   அதீத மனநிலை பொது புத்தியோடு ஒத்துப்போவதில்லை… படம் பார்த்தவர்கள் கதையே இல்லைன்னு சகட்டு மேனிக்கு திட்டுகிறார்கள்… ஆனால் எதையோ கொன்று தணிந்த கோபம் கீது மோகன்தாஸ் திரைக்கதையில் தெரிகிறது… ஆண்களுக்கு விதவிதமான மரண தண்டனைகள்… 

நிஜ வாழ்க்கையில் சபலபுத்தி கொண்ட சப்பானிகளையே ஆண்களாக சந்தித்த ஒரு பெண் தன் மனத் திரையில் தான் சந்தித்திராத ஒரு ஆணை உருவாக்கியிருந்தால் அவன் தான் யாஷ்.  பாவம் யாஷ் மதம் கொண்ட யானையாக திரையில் வாழ்ந்து மரித்திருக்கிறார்… இந்த கேரக்டரை அவர் ஆயுளுக்கும் மறக்க மாட்டார். யாஷ் தவிர ஆண் கதாபாத்திரங்கள் அடையாளம் தெரியாத பிணங்கள்.

நயன்தாரா, ஹுமா குரேஷி, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா என பிரதான பெண் கதாபாத்திரங்கள் நன்கு சமைக்கப்பட்ட மாமிச துண்டுகள்… நயன்தாரா முதிர்ச்சியான தங்கையாக வந்து முக்கியமான காட்சிகளில் இருந்து தப்பித்துக் கொண்டார்… ஆனாலும் காஸ்ட்யூமர்கள் அவர்கள் பங்குக்கு கலக்கியிருக்கிறார்கள்…  

இருட்டுக்குள் வெளிச்சத்தை தேடும் ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு சிறப்பு… ஒரே விதமான காமிரா நகர்வுகள் சலிப்பு… ஆயிரம் டீசர், ட்ரெய்லர்களை கோர்த்து முழு படமாகியிருக்கிறார் எடிட்டர். இசை சிறப்பு ஒலி… பாடல் காட்சிகள் சங்கீத கொலைகள்… ஆக்‌ஷன் காட்சிகள் கடின உழைப்பு…  வசனங்கள் யூடியூப் ரீல்ஸ் தத்துவங்கள்…   

பின் பாதியில் யாஷின் மகனாக வரும் மாய பிம்பம் சராசரி ரசிகனுக்கு குழப்பம் என்றாலும், அது ஒன்றுதான் முழு படத்தில் மனதில் நிற்கிறது. கடைசி இருபது நிமிட படத்துடன் முதல் மூன்று மணி நேரப் படத்தை பொருத்திப் பார்க்க முடியாமல் ரசிகர்கள் புலம்புவது தவிர்க்க முடியாதது… படத்தில் வரும் காரணமில்லாத கொலைகளின் காரணங்களே புரியாத பொழுது, தனிமனித வன்முறையின் நீட்சியே போர்கள் என்று கிளைமேக்ஸில் கிளாஸ் எடுப்பதெல்லாம் யாருக்கு புரியும்.  

அகிரா குரசோவா, ஆண்ட்ரி தார்கோவஸ்கியின் வரிசையில் தன்னை அடையாளப்படுத்த நினைத்த கீது மோகன்தாஸை ரசிகர்கள் சிறுத்தை சிவா லிஸ்டில் சேர்த்திருப்பது பரிதாபத்துக்குரியது, தவிர்க்க முடியாதது…  . 
கோவாவிற்கு ஏன் சுதந்திரம் லேட்டாக வந்தது என்ற கேள்வியுடன் இந்தப் படம் ஏன் துவங்குகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி..?

டாக்சிக் – வித்தியாசமான விஷக்கடி

3 ஸ்டார் ***

– இளையரவி



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version