Home தமிழ்நாடு கொளுத்திப்போட்ட ஆஸ்டின்… செங்க்ஸ் உடன் மோதிய இபிஎஸ்.. குறுக்கிட்ட சபாநாயகர்..! – Kumudam

கொளுத்திப்போட்ட ஆஸ்டின்… செங்க்ஸ் உடன் மோதிய இபிஎஸ்.. குறுக்கிட்ட சபாநாயகர்..! – Kumudam

0


6 எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் ராஜினாமா செய்துவிட்டதால், அந்தத் தொகுதி மக்களின் குரல் சட்டசபையில் இல்லாமல் போய்விட்டதாக ஆஸ்டின் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விதிமுறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என்றும் கூறினார்.

இதையடுத்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, அந்த 6 தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் பிரச்சினைகள் அவர்களின் கண்காணிப்பில் தீர்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆனால், முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஒரு தொகுதியில் மக்களின் பிரச்சினைகளை முழுமையாக அறிந்து அரசின் கவனத்துக்கு கொண்டு வர சட்டமன்ற உறுப்பினர் அவசியம் என்று வாதிட்டார்.

அப்போது அமைச்சர் செங்கோட்டையன், 6 தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்றும், அந்தத் தேர்தலில் தாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் கூறினார். இதனால் அவையில் விவாதம் மேலும் சூடுபிடித்தது.

தொடர்ந்து, ஒரு கட்சியில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் சேருவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேச முயன்றபோது, அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் குறுக்கிட்டார்.

இதற்கிடையே அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அருண் வாபஸ் பெற்றதாகவும், பின்னர் அவரை கட்சியில் சேர்த்தது குறித்து கேள்வி எழுப்பியும், “குதிரை பேரம்” என்ற விமர்சனத்தை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அருண் வேட்பு மனு முறையாக தாக்கல் செய்யப்படாததால் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். தொடர்ந்து கட்சி மாறுதல், ராஜினாமா உள்ளிட்ட விவகாரங்களை அவர் பேசத் தொடங்கிய நிலையில், சபாநாயகர் மீண்டும் குறுக்கிட்டார்.

“இது என்ன பொதுக்கூட்டமா?” எனக் கடுமையாகக் கூறிய சபாநாயகர், அவையின் மாண்பை காக்குமாறு உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். நீதிமன்றத்தில் உள்ள விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு விவாதிக்க அனுமதியில்லை என்றும் தெரிவித்தார்.

இதனால் தமிழ்நாடு சட்டசபையில் ஆஸ்டின் எழுப்பிய விவகாரம், அமைச்சர் செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இடையிலான காரசாரமான வாக்குவாதமாக மாறி, சபாநாயகர் பலமுறை குறுக்கிட்டு விவாதத்தை முடித்து வைத்தார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version