Home தமிழ்நாடு “வரலாறு உங்கள மன்னிக்காது அண்ணே..” வன்னி அரசு சொல்வது பொய்யா? கொந்தளிக்கும் மலேசியா மாணவர்! –...

“வரலாறு உங்கள மன்னிக்காது அண்ணே..” வன்னி அரசு சொல்வது பொய்யா? கொந்தளிக்கும் மலேசியா மாணவர்! – Kumudam

0



தனக்கு வழங்க வேண்டிய ஆராய்ச்சி செலவுக்கான நிதி குறித்து பலமுறை விண்ணப்பித்தும் பதில் கிடைக்கவில்லை என மாணவர் பாரதிதாசன் குற்றம்சாட்டிய நிலையில், அவரது குற்றச்சாட்டுகளுக்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு விளக்கம் அளித்திருந்தார்.

அரசின் விளக்கத்தில், மாணவர் பாரதிதாசனுக்கு ஏற்கனவே கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, இதுவரை ரூ.48.22 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான செலவின ஆவணங்களை மாணவர் முறையாக சமர்ப்பிக்கவில்லை என்றும் அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது. மேலும், ஆவணங்களை சமர்ப்பிக்காமல் கூடுதல் நிதி கோருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சரின் விளக்கத்திற்கு மறுப்பு தெரிவித்து மாணவர் பாரதிதாசன் மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அரசு வழங்கிய நிதி தொடர்பான விஷயத்தில் தாம் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்றும், தற்போது தாம் கேட்பது இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள், ஆய்வுப் பொருட்கள் மற்றும் புத்தகங்களுக்கான செலவின நிதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது ஆராய்ச்சிக்கான தேவைகள் குறித்து பல்கலைக்கழக பேராசிரியர் தரப்பில் இருந்து 2026 மார்ச் மாதத்திலேயே தகவல் அனுப்பப்பட்டதாக மாணவர் கூறியுள்ளார். அதன்பின்னர் ரசீதுகள், தேவையான ஆவணங்கள் மற்றும் கொட்டேஷன்கள் உள்ளிட்டவற்றை அரசுத் தரப்புக்கு அனுப்பியதாகவும், தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டும் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தனது கோரிக்கை தொடர்பாக மீண்டும் மனுக்கள் அனுப்பப்பட்டதாகவும், தனது சார்பில் சிலர் அமைச்சர் வன்னி அரசை நேரில் சந்திக்க முயன்றதாகவும் பாரதிதாசன் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும், ஆராய்ச்சி செலவுக்கான நிதி தொடர்பாக இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு.

தனது ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்ற அமைச்சர் தரப்பின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள மாணவர், தான் அனுப்பிய மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்களுக்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் தனது பிரச்சினையை தெரிவித்த பிறகு, தன்னிடம் நேரடியாக விசாரிக்காமல் அரசு தரப்பில் விளக்கம் வெளியிடப்பட்டதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

“பாதிக்கப்பட்ட மாணவர் மீது வேறு ஒரு கருத்தை உருவாக்குவது வருத்தமாக உள்ளது. என்னுடைய பிரச்சினை என்ன என்பதை என்னிடம் நேரடியாக கேட்டிருக்க வேண்டும். நான் தொடர்ந்து மின்னஞ்சல்கள் அனுப்பியும் பதில் கிடைக்கவில்லை” என பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக நீதி தொடர்பான பொறுப்பில் இருக்கும் அமைச்சர் தன்னிடம் நேரடியாக பேசி பிரச்சினையை கேட்டறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தனது கோரிக்கைக்கான ஆவணங்கள் ஏற்கனவே அரசிடம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவை சமர்ப்பிக்கப்படவில்லை என கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும் மாணவர் தெரிவித்துள்ளார்.

“நான் பில் எல்லாம் ஏற்கனவே அனுப்பிவிட்டேன். அமைச்சர் சொல்வது முற்றிலும் பொய்” எனக் கூறியுள்ள பாரதிதாசன், தனது கோரிக்கை தொடர்பாக தொடர்ந்து அரசுத் தரப்பை அணுகி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், ”பாதிக்கப்பட்ட பையன் மேலேயே ஒரு நெரெட்டிவ்-வை செட் செய்து இவன் இப்படித்தான்னு நீங்க செட் பண்றீங்களே… இது ரொம்ப வருத்தமா இருக்குண்ணே. அண்ணே, நீங்க வந்து ஒரு ஒடுக்கப்பட்ட குடும்பத்துல இருந்துதான் வந்துருக்கீங்க. இத பண்ண உங்களுக்கு மனசாட்சி இல்லையாண்ணே? நீங்க இப்படி செய்தால் உங்க வரலாறு வந்து உங்களை மன்னிக்கவே மன்னிக்காது” என்று மாணவர் பாரதிதாசன் தெரிவித்துள்ளார். 

இதனால், அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை விவகாரத்தில் அரசு தரப்பின் விளக்கமும், மாணவர் முன்வைக்கும் ஆவணங்கள் சார்ந்த குற்றச்சாட்டுகளும் தற்போது எதிரெதிராக உள்ளன. இருதரப்பிலும் கூறப்படும் தகவல்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு உரிய ஆவணங்களுடன் அரசு தரப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version