தமிழக அரசியலில் தேர்தலுக்குப் பின்னரும் சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய், அவரது தாயார் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாக கூறப்படும் கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற ‘ஒரே நாடு 2.0’ மாத இதழ் மற்றும் டிஜிட்டல் பதிப்பு வெளியீட்டு விழாவில் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, சட்டப்பேரவையில் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் ‘அப்பா எங்கே?’ என பேசியதை குறிப்பிட்டு, அவரது குடும்பத்தை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், தவெகவினர் மற்றும் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, முதலமைச்சர் மற்றும் அவரது தாயார் குறித்து தனிப்பட்ட முறையில் பேசுவது அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது என அவர்கள் விமர்சித்துள்ளனர்.
இதனிடையே, அமைச்சர் ராஜ்மோகனும் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் மறைமுக அரசியல் உறவுகள் வெளிப்படும் காலம் இது என்றும், திமுக–பாஜக இடையேயான உறவு விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக பேசியதாக கூறி, நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வர்த்தினி அளித்துள்ள புகாரில், நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், நயினார் நாகேந்திரனின் பேச்சு தொடர்பான அரசியல் சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது.
