
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தோல்விக்கான காரணங்கள், கட்சியின் நிர்வாக கட்டமைப்பு மற்றும் மாவட்ட அளவிலான செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தன.
அதன் அடிப்படையில் பெறப்பட்ட கருத்துகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையில் கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க.வில் தற்போது அமைப்பு ரீதியாக 78 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இவர்களில் சரியாக செயல்படாத சிலரின் பதவிகள் பறிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும், தற்போதுள்ள மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, புதிய மாவட்டங்களை உருவாக்கி அதற்குப் புதிய மாவட்ட செயலாளர்களை நியமிப்பது, மாற்றுக் கட்சிகளில் இருந்து தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்குவது உள்ளிட்டவை குறித்தும் 22-ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைத் தொடர்ந்து, தி.மு.க.வில் நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி மாற்றங்களும், நடவடிக்கைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஒரே பதவியில் மூன்று முறைக்கு மேல் தொடர்ந்து இருப்பவர்களும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான நிர்வாகிகளுக்கு 60 வயது வரை மட்டுமே பதவியில் இருக்கலாம் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சில மூத்த நிர்வாகிகளின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் மூத்த மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் தலைமை நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. துணைப் பொதுச்செயலாளர்கள், வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், அரசியல் விவகாரக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளில் அவர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கட்சியின் மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக 40-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்றும், இதற்கான ஒப்புதல் வருகிற 22-ந்தேதி நடைபெறும் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பெறப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
செயற்குழு கூட்டம்
இதனிடையே, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் என்பதாலும், கட்சியின் நிர்வாகத்தில் பல்வேறு புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்பதாலும், இந்தக் கூட்டம் தி.மு.க.வினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



