back to top
20 C
London
Monday, August 10, 2026
No menu items!
Homeஅரசியல்“அடுத்த முதலமைச்சர் அன்புமணி” – போட்டுடைத்த திலகபாமா! - Kumudam

“அடுத்த முதலமைச்சர் அன்புமணி” – போட்டுடைத்த திலகபாமா! – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


பா.ம.க.வில் ஒன்றரை வருடங்களாக நடந்த களேபரங்களுக்குப் பிறகு, ராமதாஸும் அன்புமணியும் இணைந்துள்ளனர். ராமதாஸ் ஆசியுடன் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி யின் தீவிர ஆதரவாளரான திலகபாமா மீண்டும் கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கட்சிப் பணிகளில் பரபரப்பாக இருந்த அவர், நமது கேள்வி களுக்கு நிதானமாக பதிலளித்தார்.

திடீர் பிரிவு, திடீர் உறவு பா.ம.க.வில் என்னதான் நடக்கிறது?

“அது முடிந்துபோன கதை அரசியலில் அடுத்தது என்ன என்பதுதான் முக்கியம். அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். எதிலும் பின்னோக்கி பார்ப்பதை நான் விரும்பவில்லை. எங்கள் கட்சி நிறுவனருக்கும். கட்சியை தலைமை தாங்கி நடத்திச் சென்றவருக்கும் திடீர் பிளவு, அது இப்போது சரியாகிவிட்டது.”

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே ராமதாஸ் – அன்புமணி இணைந்திருந்தால், பா.ம.க கூடுதல் இடங்களை பெற்றிருக்குமே?

“கட்சிக்குள் நடந்த சில முரண்கள் எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. விசில் அலையில் அனைத்துக் கட்சிகளும் காணாமல் போனபோது பா.ம.க. தாக்குப்பிடித்திருக்கிறது. எனவே, ராமதாஸ் எது செய்தாலும் அது கட்சிக்கும், மக்களுக்கும் நல்லதாகவே அமையும். அம்மா அடித்தால் அது பிள்ளைகளுக்கு நல்லதுதானே. அப்படித்தான் இந்த நகர்வும் அமைந்திருக்கிறது. எனவே இதையெல்லாம் நினைத்து நாங்கள் கவலைப்படவில்லை.”

ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தி தற்போது ஓரங்கட்டப் பட்டிருப்பது உண்மையா?

“மக்கள் பணி குறித்து மட்டுமே பதிலளிக்க விரும்புகிறேன். இது கட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்டது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குடும்ப விவகாரங்களில் நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது.”

பா.ம.க.வில் ஏற்பட்ட மோதல்களால் அதிருப்தியில் இருப்பவர்கள் என்.ஆர். காங்கிரஸை நோக்கிச் செல்வது பற்றி?

“யார் யார் செல்லப்போகிறார்கள் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. யார் அங்கு செல்கிறார்கள் என்பது தெரிந்தபிறகுதான் எதையும் சொல்ல முடியும். எனவே இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இதுபோன்ற வதந்திகள் நீண்ட காலம் நிலைப்பதில்லை.”

தி.மு.க. தலைவர் கருணாநிதி 80 வயதை கடந்த பிறகும்கூட தனது அரசியலை தொடர்ந்தார். ஆனால் ராமதாஸ் திடீரென அரசியலில் இருந்து விலகிவிட்டாரே?

“தி.மு.க.வில் கருணாநிதி தலைவராக இருந்தபோது ஒரு சிஸ்டம் இருந்தது. கருணாநிதி தனது இறுதிக் காலம் வரை தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு வழங்கவில்லை. ஸ்டாலின் முதல்வராக இருந்தபோதே, உதயநிதியை துணை முதல்வராக கொண்டு வந்தார். ராமதாஸ் எடுத்தது சூழ்நிலைக்கேற்ற முடிவு, தி.மு.க.வில் இப்படி செய்தார்கள். அதேபோல் நானும் இருக்கவேண்டும் என ராமதாஸ் அடம் பிடிக்கவில்லையே. அதுவே நல்ல விஷயம்தானே.”

‘அன்புமணியை முதல்வராக்க வேண்டும்’ என்ற கோஷம் மீண்டும் பா.ம.க.வில் கேட்கிறதே?

“பா.ம.கவைப் பொறுத்தவரை நாங்கள் ஆட்சி செய்யவேண்டும் என்றுதானே எப்போதும் ஆசைப்படுவோம். பா.ம.க. மட்டுமல்ல, புதிதாக கட்சி தொடங்கும் ஒவ்வொருவருக்கும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அரசியல் அதிகாரத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருப்பது இயல்புதானே. அன்புமணி முதல்வர் பதவிக்கு தகுதியானவர். தமிழர்கள் நலனுக்காக தரமான அரசியலையும், நல்ல நிர்வாகத்தையும் அவரால் தரமுடியும். எனவே, அவரை முதல்வராக்க வேண்டும் என்ற கோஷம் இப்போதல்ல, பல்லாண்டுகளாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.”

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பா.ம.க. வெளியேறப்போவதாக சொல்லப்படுகிறதே?

“அன்புமணியை மத்திய அமைச்சரவையில் சேர்த்திருக்கலாம் என்பது கட்சியில் இருக்கும் சாதாரண தொண்டனுக்கும் உள்ள ஆசை. ஆனால், அன்புமணி நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராக இருப்பதைவிட, தமிழகத்தின் வளர்ச்சிக்காக அவரது நிர்வாக அறிவுத்திறன் முழுமையாக பயன்பட வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து. ‘காங்கிரஸ் ஆளுகின்ற கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் ராகுல் உறுதியாக இருந்தால், நானும் உங்கள் பக்கம் வருகிறேன்’ என்றுதான் அன்புமணி சொன்னாரே தவிர, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன் என ஒருபோதும் சொல்லவில்லை.”

தமிழக காங்கிரஸை திடீரென கடுமையாக விமர்சிக்கிறதே பா.ம.க?      

“தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தேவையில்லாமல் அன்புமணியை விமர்சிக்கிறார். இதை நாங்கள் கை கட்டி வேடிக்கைப் பார்க்க முடியுமா? மாணிக்கம் தாகூர் பேசுவதற்கு நாங்கள் பதிலடி கொடுக்கத்தானே வேண்டும். எங்கள் தலைவரை பற்றி கேள்வி கேட்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? ‘அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடக்க வேண்டும் என கர்நாடகத்துக்கு சொல்லக்கூட மாணிக்கம் தாகூருக்கு மனமில்லை. இவரெல்லாம் ஒரு தலைவரா? தொடர்ந்து இதுபோல் அவர் பேசிக்கொண்டிருந்தால் எங்களால் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பதிலடி கொடுப்போம்.”

த.வெ.க. கூட்டணியில் பா.ம.க. உடம்பெறப்போவதாக சொல்லப்படுகிறதே?

“இப்படிப்பட்ட வதந்திகளை மீடியாக்கள்தான் உயிருடன் வைத்திருக்கின்றன. கூட்டணி குறித்து எங்கள் கட்சித் தலைவர் சொல்வதுதான் அதிகாரப்பூர்வமான செய்தி. இப்போது த.வெ.க.வுடன் கூட்டணி செல்ல வேண்டிய எந்த அவசியமும் பா.ம.க.வுக்கு இல்லை. அது மட்டுமல்ல, இப்போதைக்கு பொதுத்தேர்தல் எதுவும் வரப்போவதில்லை. எனவே கூட்டணி குறித்து யோசிக்க வேண்டியதில்லை. தற்போது பா.ம.க. சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.”

ஆந்திராவில் பா.ம.க.வை தொடங்க என்ன காரணம்?

“அங்கிருக்கும் வன்னியர்கள், ‘நாங்களும் பா.ம.க.வில் இணைய ஆர்வமாக இருக்கிறோம். அரசியல் அமைப்பு எங்களுக்கும் வேண்டும்’ என நினைக்கிறார்கள். எனவே ஆந்திராவில் கட்சி தொடங்குகிறோம். அங்கு நடைபெறும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் பா.ம.க.வுக்கு ஆதரவு இருக்கிறதா, இல்லையா என்பது தெரியவரும். ஆதரவு என்பதைவிட மக்கள் பணி என்பதையே நல்ல அரசியலாக நாங்கள் பார்க்கிறோம்.”



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here