Home அரசியல் ஈ.பி.எஸ். மீது ஆத்திரம் … சி.வி.எஸ். கைவசம் மூன்று பிளான்கள்..  – Kumudam

ஈ.பி.எஸ். மீது ஆத்திரம் … சி.வி.எஸ். கைவசம் மூன்று பிளான்கள்..  – Kumudam

0


நான் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. என்கிற இயக்கம் எத்தனை ஆண்டுகளானாலும் இயங்கும்’ என்று சட்டசபையில் முழங்கியவர் ஜெயலலிதா. ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு சுக்குநூறாக சிதறி கிடக்கிறது அக்கட்சி. மழைவிட்டும் தூவானம் நிற்காததுபோல அ.தி.மு.க. தலைமைக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கிறார் சி.வி.சண்முகம். அவரது திட்டம்தான் என்ன?

இதுகுறித்த விவரமறிந்த அதிமு.க. நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். 2026 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக மீண்டும் தள்ளாட துவங்கியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் சேரும்வரை நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என கட்சிக்கு தொடர்ந்து சட்டரீதியான சிக்கல்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தார். இப்போது அந்தப் பணியை கையில் எடுத்திருக்கிறார் சிவி.சண்முகம். எடப்பாடி தொடர்ந்து கட்சித் தலைமையில் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் சண்முகம் காரணம், அவருடைய மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதுதான்.

விழுப்புரம் மாவட்டத்தை பிரிக்கவிடாமல், ஒருங்கிணைந்த மாவட்டமாக தனது கையில் வைத்து அரசியல் செய்தவர் சண்முகம். விழுப்புரம் என்றாலே சண்முகமும் அவரின் அண்ணன் ராதாகிருஷ்ணனின் ஆதிக்கம்தான் என்பது அ.தி.மு.க.வில் எழுதப்படாத விதி. அப்படிப்பட்டவரின் மாவட்டச் செயலாளர் பதவியை ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பறித்திருக்கிறார்.

இதனால்தான் எடப்பாடிக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் தீவிர முனைப்பு காட்டுகிறார் சண்முகம். இதற்காக மூன்று பிளான்களை அவர் வைத்திருக்கிறார். அதாவது, அ.தி.மு.க. கடந்த தேர்தலில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த நேரத்திலேயே 25 எம்.எல்.ஏக்களை தன் பக்கம் வைத்திருந்தார் சண்முகம். ஆனால், இப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆறு பேர் ராஜினாமா செய்துவிட்டதால், கட்சியின் பலம் 41 மட்டுமே. இதில் 30 பேரையாவது தன் பக்கம் கொண்டு வர காய்களை நகர்த்த துவங்கி இருக்கிறார் சண்முகம் அது நடந்தால், ‘அ.தி.மு.க. 1’ என்ற அங்கீகாரம் தமிழக சட்டசபையில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்.

இதன்பிறகு தலைமை மீது அதிருப்தியில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அவர்களின் சுட்டுப்பாட்டில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை கொத்தாக தூக்கிவிட்டால். கட்சி பொதுக்குழுவில் எடப்பாடி மீண்டும் பொதுச்செயலாளர் ஆவதற்கு மெஜாரிட்டி கிடைக்காது என கணக்கு போடுகிறார். கட்சி விதிப்படி வருடத்துக்கு ஒரு முறை.. அதாவது, வரும் டிசம்பர் மாதம் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். ஆனால், அதற்குள் சிறப்பு பொதுக்குழுவை கூட்ட வலியுறுத்தி கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தேர்தல் கமிஷனில் புகார் என பல வழிகளில் எடப்பாடிக்கு நெருக்கடியை உருவாக்க திட்டம் வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து எடப்பாடி மீது கடும் அதிருப்தியில் உள்ள டெல்லி பாஜக தலைமை இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் தேர்தல் ஆணையத்தின் மூலம் முடக்கும் எனவும் எதிர்பார்க்கிறார் சண்முகம் இது முதல் பிளான்.

இரண்டாவதாக, வட மாவட்டங்களில் உள்ள வன்னியர்களை கவரும் வகையில், வன்னியர்களுக்கான அமைப்பு அல்லது கட்சியை உருவாக்குவது குறித்து ஆலோசித்துவருகிறார். ‘புதிய கட்சி என்ற ஃபார்முலா எந்தக் காலத்திலும் நமக்கு ஒத்துவராது என அதற்கு துவக்கத்திலேயே அவரின் அண்ணன் ராதாகிருஷ்ணன் தடை விதித்துவிட்டார். இறுதியாக, அவர் கையில் வைத்திருக்கும் அஸ்திரம் பா.ஜ.க.தான். எதுவும் ஒத்துவரவில்லை என்றால் பா.ஜ.கவில் ஐக்கியமாக முடிவு செய்திருக்கிறார். இதனால்தான் திமுக தரப்பில் இருந்து பல ஆஃபர்களை கொடுத்த பிறகும்கூட அவர் பிடி கொடுக்கவில்லை. திமு.க மற்றும் தவெகவைவிட பாஜகவில் சுதந்திரமாக இருக்கலாம் எனவும், விரைவில் உயர் பதவிகளை கைப்பற்றி மேலே வரலாம் எனவும் நினைக்கிறார்.

தனது மூன்று அதிரடி முடிவுகள் குறித்து அண்ணன் ராதாகிருஷ்ணன் மற்றும் நெருங்கிய ஆதரவாளர்களுடன் சென்னையில் தொடர் ஆலோசனை நடத்திவருகிறார் சண்முகம். இவருக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயார் நிலையில் இருக்கிறார் மாஜி அமைச்சர் வேலுமணி என்பதுதான் எடப்பாடி தரப்பை கலக்கத்தில் தள்ளி இருக்கிறது” என முடித்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர் சங்கராபுரம் எம்.எல்.ஏ ராகேஷ், “தேர்தல் முடிவுகள் வந்தபோது வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் சொன்னதை கேட்டு தவெகவுக்கு அ.தி.மு.க. ஆதரவளித்து இருந்தால் இன்றைக்கு கட்சிக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்காது. கூட்டணிக் கட்சிகள் உட்பட அனைவரையும் எடப்பாடி அரவணைத்து செல்ல வேண்டும். அப்படி சென்றால் த.வெ.கவுக்கும் அ.தி.மு.க.வுக்கும்தான் போட்டியாக இருக்கும். கிரவுண்ட் லெவலில் இன்னும் அதிமுக நன்றாக இருக்கிறது” என்றார்.

நிறைவாக நம்மிடம் பேசிய சி.வி.சண்முகம், “நான் அ.தி.மு.க.வைவிட்டு எந்த கட்சிக்கும் செல்வதாக இல்லை. விலகுவதாகவும் இல்லை என ஒற்றை வரியில் முடித்துக்கொண்டார்.

– குமுதம் செய்திகளுக்காக கு.கணேஷ்குமார்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version