‘அரசியல் மாற்றத்திற்கு அச்சாரமிட்ட வைகோ, இன்று எங்கள் தலைவர் விஜய்யின் காலடியில் விழுந்து கிடக்கிறார்’ என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை கடுமையாக விமர்சித்திருக்கிறார் த.வெ.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.கவில் நீண்டகாலம் பயணித்த நாஞ்சில் சம்பத் இன்று வைகோவை இப்படி விமர்சித்திருப்பதை தி.மு.க.வினர் ‘ட்ரோல்’ செய்துவரும் நிலையில், நமது கேள்விகளுக்கும் காரம் குறையாமலே பதிலளித்தார் நாஞ்சில்
சம்பத்!
த.வெ.க. ஆட்சியில் லாக் அப் மரணங்கள் அதிகரித்திருக்கின்றனவே… ஆனால், முதல்வர் இதுகுறித்து எதுவும் பேசவில்லையே?
“சமீபத்தில் நாகர்கோவிலில் நடந்த லாக் அப் மரணம் மக்களை மிகவும் பாதித்திருக்கிறது. இனி அதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதில் த.வெ.க. அரசு உறுதியாக இருக்கிறது. முதல்வர் சொல்லித்தான் அந்த குடும்பத்துக்கு அனைத்து நிவாரணங்களும் வழங்கப்பட்டன. எனவே இதில் முதல்வர் பேச வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை.”
தமிழக அமைச்சர்களின்ஆய்வு ரீல்ஸ் சர்ச்சையாகிறதே… முதலமைச்சரும் கண்டித்துள்ளார் என்கிறார்களே?
“இன்றைய ஊடக யுகத்தில் இவை எல்லாம் சாதாரணம். ஓர் அமைச்சர் தனது நடவடிக்கைகளை ஏதாவது ஒரு வடிவத்தில் வெளிப்படுத்தும்போது, ரீல்ஸ் என முத்திரை குத்தி காலி செய்வது நியாயம் இல்லை. ஏன், தி.மு.க.வினர் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லையா? மக்கள் பணத்தை அள்ளி ஊதாரித்தனமாக செலவு செய்த தி.மு.க.வினரே விளம்பரம் தேடிக்கொள்ளும்போது மக்களுக்காக பணியாற்றும் தவெ.க. அமைச்சர்கள் ரீல்ஸ் போடுவதில் எந்த தவறும் இல்லை.”
‘ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் த.வெ.க. அரசை கவிழ்த்துவிடுவார்’ என்கிறாரே அ.தி.மு.க. மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி?
“ராஜேந்திர பாலாஜி சொல்வதையெல்லாம் நான் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அவர் ஒரு உளறுவாயர். ஏதாவது உளறிக்கொண்டே இருப்பார். ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் சுவரில் போய் முட்டிக்கொள்ள வேண்டியதுதானே. த.வெ.க. ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை.”
எதிர்க்கட்சி தலைவராக உதயநிதியின் செயல்பாடுகள் எப்படி?
“மிகப்பெரிய ஆளுமைகள் எதிர்க்கட்சி தலைவர்களாக இருந்த சிம்மாசனத்தில் எந்த தரவும் இல்லாமல், தர்க்கம் செய்ய தெரியாத ஞானசூன்யர் உட்கார்ந்திருக்கிறார். ஆளும்கட்சி பெரும்பான்மை இழந்துவிடுமானால், நிழல் அமைச்சரவைக்கு தலைமை தாங்க எதிர்க்கட்சித் தலைவரைத்தான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார். அவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கவேண்டியவர் தரம் தாழ்ந்து பேசுவது கண்டிக்கத்தக்கது.”
த.வெ.க கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுமா?
“த.வெ.க கூட்டணிக்குள் பா.ம.க வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் விடுதலை சிறுத்தைகளுக்கு இடையூறு ஏற்படும் என சொல்வது தவறான கருத்து. பா.ம.க. மீது திருமாவளவனுக்கு கோபம் இருந்திருக்கலாம். அதே கோபம் தொடரவேண்டும் என நினைப்பது நியாயமா? பா.ம.கவும் கூட்டணிக்குள் வரலாம். அதேசமயம், பா.மகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அக்கட்சியுடன் இணக்கமாக இருக்கிறோம்.”
ஊழல் வழக்குகளில் தொடர்புடைய அ.தி.மு.க. மாஜி அமைச்சர்களை த.வெ.க.வில் சேர்ப்பது ஏன்?
“எடப்பாடியால் அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியவில்லை. எனவே எடப்பாடி தலைமையை ஏற்பதைவிட, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய த.வெ.க.வில் சேர்ந்திருக்கிறார்கள். ஜனநாயகத்தில் எண்ணம் முக்கியம் என்பதைவிட எண்ணிக்கை மிக முக்கியம். எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறதே தவிர அவர்கள் குற்றவாளிகள் அல்ல.”
மதவாத சக்திகளை எதிர்ப்பதில் தி.மு.க.வுடன், த.வெ.க சேரவேண்டும் என்கிறாரே திருமாவளவன்?
“த.வெ.க மற்றும் தி.மு.க. ஒரே கூட்டணியில் இருக்கவே முடியாது. முதல் எதிரி தி.மு.க. என அறிவித்துவிட்டுத்தான் இந்த வெற்றியை பெற்றிருக்கிறோம். பிறகு அக்கட்சியுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம்”
இண்டியா கூட்டணியில் த.வெ.க. இடம்பெறுமா?
“ராகுல் எங்களுடன் தோழமையாகவே இருக்கிறார். எங்களுக்கு ஒரு ஆபத்து வந்தபோது காங்கிரஸ்தான் துணை நின்றது. எனவே, தேசிய அரசியலில் ராகுலின் தலைமையை ஏற்கும் முடிவில்தான் முதல்வர் விஜய் இருக்கிறார். எனவே இண்டியா கூட்டணியில் இணைவது குறித்து விஜய் விரைவில் முடிவு செய்வார். காங்கிரஸோடு சேர்ந்து பயணிப்பதால் இண்டியா கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது.”
அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ இயக்கம் பொதுமக்கள் மத்தியில் ‘ரீச்’ ஆகுமா?
“அடுத்த தேர்தலில் அண்ணாமலைக்கும், விஜய்க்கும்தான் போட்டி இருக்கும். தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தமிழக அரசியலில் இனி இடமில்லை. அதேசமயத்தில் எங்களை எதிர்த்துப் போட்டியிட்டு அண்ணாமலையால் ஜெயிக்க முடியாது. ஏனெனில் யாருக்கும். எந்த தலைவருக்கும் இல்லாத மாஸ் விஜய்க்கு இருக்கிறது. அண்ணாமலை, விஜய்க்கு ஒரு கருத்தியல் ரீதியான எதிரியாக இருப்பார். ஆனால், அவரால் வென்று ஆட்சி அமைக்க முடியாது.”
நீட் தேர்வு ரத்துக்காக இளைஞர்கள் போராடும் நேரத்தில், ‘ஜனநாயகன்’ கொண்டாட்டம் தேவையா?
“நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தன்னிடம் இருப்பதாக சொல்லி மக்களை ஏமாற்றி, ஆட்சியைப் பிடித்து ஊழல் மேல் ஊழல் செய்து தமிழகத்தை கபளீகரம் செய்தது தி.மு.க. தி.மு.கவைப்போல், த.வெ.க பொய்யான வாக்குறுதிகள் எதையும் கொடுத்து மக்களை ஏமாற்றவில்லை. நீட் தேர்வை சட்டரீதியாக அப்புறப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடும். இதற்கும் ‘ஜனநாயகன்’ ரிலீஸுக்கும் என்ன சம்பந்தம்? பல காரணங்களை சொல்லி அந்த படத்தை முடக்கி வைத்திருந்தார்களே, அப்போது யாராவது கேள்வி எழுப்பினார்களா? தடைகளைத் தாண்டி ரிலீஸ் ஆகியிருப்பதால், விஜய் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு ஏன் வயிறு எரிகிறது?”
காவிரி நீர் திறப்பில் தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறதே?
“காவிரி விவகாரத்தில், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வைத்து மற்ற கட்சிகளைப்போல் அரசியல் செய்ய த.வெ.க விரும்பவில்லை. கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து நமது முதல்வர் விஜய் பேசும்போது இதற்கான தீர்வை ஏற்படுத்துவார்”





