back to top
19.3 C
London
Sunday, August 2, 2026
No menu items!
Homeஅரசியல்தனி மெஜாரிட்டிக்காக விஜய்யின் புதிய அரசியல் மூவா? - Kumudam

தனி மெஜாரிட்டிக்காக விஜய்யின் புதிய அரசியல் மூவா? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img


‘இடைத்தேர்தலுக்கு தடை எனும் உத்தரவால், தனி மெஜாரிட்டி தலைவலியை தணிக்க நினைத்ததற்கு ஸ்பீட் பிரேக் போட்டிருக்கிறது நீதிமன்றம். போதாக்குறைக்கு இடதுசாரிகள், வி.சி.க. ஆகிய கூட்டணிக் கட்சிகளின் தொடர் குடைச்சல்களால் அடுத்தடுத்த சிக்கல்களில் சிக்கித் தவிப்பதற்கு பதிலாக, ‘பேசாமல் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தேர்தலை எதிர்கொண்டால்தான் என்ன?’ என்கிற அளவுக்கு த.வெ.க. தலைமை யோசிக்கத் தொடங்கியிருப்பதாக கிசு கிசுக்கின்றன பனையூர் பட்சிகள். அதேநேரம், ‘இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?” எனும் மூடில் அடுக்கடுக்காக பெறப்பட்ட புகார்களையே கண்ணி வெடியாக மாற்றிவைத்து காத்திருக்கிறார் கவர்னர் என்பதுதான் லேட்டஸ்ட் பொலிடிகல் ஸ்கூப்!

இதுகுறித்து தவெக தலைமைக்கு நெருங்கிய வட்டாரத்தில் பேசினோம். என்னதான் முதல்வர் விஜய் கூட்டணி ஆட்சி அமைத்து, கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கினாலும் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து சலசலப்புகள் எழாமல் இல்லை. அவர்களின் செயல்பாடுகளும் சில நேரங்களில் தவெக தலைமைக்கு உவப்பாக இருப்பதில்லை

சீறும் இடதுசாரிகள்… அரைமனதுடன் சிறுத்தைகள்

குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சீனியர் லீடர் முத்தரசன் மற்றும் சுப்பராயன் எம்.பி. ஆகியோர் திமுகவுக்கு ஆதரவாக குடைபிடிக்க துவங்கியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், ‘தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் நடப்பது தடுக்கப்பட வேண்டும் குதிரை பேரத்தை தடுப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லது’ என சேம் சைட் கோல் போட்டிருக்கிறார். மேலும், ‘உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகளால் தனித்து நிற்க முடியும்’ என்றும் ஒரு குண்டை வீசியிருக்கிறார் வீரபாண்டியன் அதேபோல் வி.சி.கவும் அரைமனதுடன்தான் அமைச்சரவையில் பயணித்து வருவதாக தெரிகிறது.

துவக்கத்தில் வெளியிலிருந்து ஆதரவு என்ற மனநிலையுடன் தவெக பக்கம் கண் சிமிட்டிய வி.சி.க. பிறகு ஒருவழியாக அமைச்சரவையில் பங்கேற்றது. வன்னியரசு அமைச்சரானார். ஆனால் இப்போதோ, வேறு துறையை கேட்டு நெருக்குகிறதாம் விசிக இதைத்தாண்டி, ‘த.வெ.க. வெற்றிபெற்றது எப்படி மாற்றுக் கூட்டணியில் இருந்த வி.சி.கவுக்கு மகிழ்ச்சியை தரும்? என பொடி வைத்துப் பேசிய திருமா, திடீரென, ‘மதவாத சக்திகளை வீழ்த்த தி.மு.கவும், தவெ.கவும் ஓரணியில் இணைய வேண்டும்’ எனவும் பேசியிருப்பது, த.வெ.க. தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்னொரு பக்கம். காங்கிரஸும் தற்போது டிமாண்டை ஏற்றியிருக்கிறது. அதாவது தற்போது வழங்கப்பட்டிருக்கும் இரண்டு அமைச்சர்கள் பதவி இல்லாமல், கூடுதலாக ஒரு அமைச்சர் பதவி கேட்டு அக்கட்சி காய்களை நகர்த்த துவங்கியிருப்பதும் தலைமையை எரிச்சலாக்கியிருக்கிறது. தவிர, ‘எங்கள் கூட்டணிக் கட்சிகளை வைத்துதான் விஜய் ஆட்சி அமைத்திருக்கிறார் என தி.மு.க. ஒரு பக்கம் மார்தட்டுவதும், “ஸ்டாலின் எப்போது நினைக்கிறாரோ அப்போது தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும்’ என இன்னொரு பக்கம் அ.தி.மு.கவே தி.மு.கவுக்கு பில்டப் கொடுப்பதாலும் கடும் அப்செட்டில் இருக்கிறார் விஜய்

தனி மெஜாரிட்டி தலைவலி!

இதுபோன்ற செயல்பாடுகளால், இந்த சங்கடங்களை எப்படி தவிர்ப்பது என யோசித்திருக்கிறார் விஜய். இதையடுத்து உருவானதுதான் மறு தேர்தலை எதிர்கொள்ளும் திட்டம். த.வெ.க தலைமைக்கு நெருக்கமான மூவருடன் ஆலோசித்த விஜய், அமைச்சரவையை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகத்தில் மீண்டும் தேர்தலை சந்திப்பதில் உள்ள சட்ட நுணுக்கங்கள் குறித்து விவாதித்திருக்கிறார்.

ஆம் இதற்கான அச்சாரத்தை போட்டுக்கொடுத்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆட்சிக் கலைப்பு முடிவுக்கு உதாரணமாக அவரால் அடையாளம் காட்டப்பட்டவர், டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால். அதாவது, 2012ல் ஆத்மி கட்சியை தொடங்கி, 2013ல் டெல்லி முதலமைச்சராகப் பதவியேற்றார் கெஜ்ரிவால். அவர் முதல்வரானவுடன் ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கு ஆதரவைத் திரட்ட முடியாமல் தடுமாறினார்.

இதனால் 49 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்குப் பிறகு 2015ல் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்தார் கெஜ்ரிவால். அதே ஃபார்முலாவை தமிழகத்தில் அமல்படுத்தினால் மீண்டும் விஜய் முதல்வராவது உறுதி என்பதுதான் அந்த முன்னாள் மத்திய அமைச்சர் சொன்ன பாயின்ட் முன்னதாக, ‘சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவுடனேயேகூட இதை செய்யலாம். அதன்பிறகு வேறு யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாது’ என விஜய்க்கு ஷாட் ரூட்டில் அரசியல் பாடத்தை சொல்லிக்கொடுத்திருந்தார் அதே மாஜி அமைச்சர். ஆனால் இதுகுறித்து தாமதமாகத்தான் யோசிக்கத் துவங்கியிருக்கிறார் விஜய்.

200 தொகுதிகளில் வெற்றி?

இப்போது தவெகவுக்கு மட்டுமே 35 சதவிகித வாக்குகள் உள்ள நிலையில், கூட்டணியுடன் இணைந்து, தேர்தலை சந்திக்கும்போது 55 சதவிகிதம் வரை வாக்கு வங்கி உயரும் என்றும் அதன்மூலம் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவை எளிதில் வீழ்த்திவிடலாம் என்றும், என்னதான் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, குதிரை பேரம் என எதிர்க்கட்சிகள் எத்தகைய குற்றச்சாட்டுகளை வைத்தாலும், அவை மக்கள் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும், கூடாரம் காலியாவதால் அதிமு.க. வட்டாரமும், வழக்குகள் துரத்துவதால் தி.மு.க. வட்டாரமும் கலங்கிப்போய்தான் இருக்கிறது எனவும் அந்த கூட்டத்தில் விஜய்க்கு சொல்லப்பட்டிருக்கிறது.

சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் மறு தேர்தல் வந்தால் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் நாம் நிச்சயம் வெற்றிபெறலாம் என அந்த மூவரணி ஒரே வரியில் சொல்லி முடித்ததை விஜய் சீரியஸாக கவனித்திருக்கிறார்.

சாத்தியமாக்குவது எப்படி?

அதே சமயம், இந்த முயற்சியில் த.வெ.க. தரப்பிலும் ரிஸ்க் இல்லாமல் இல்லை.முதற்கட்டமாக தேர்தல் நேரத்தில் கொடுத்த பிரதான வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றி மக்கள் மத்தியில் அழுத்தமான முத்திரையை பதிக்க வேண்டுமென நினைக்கிறது த.வெ.க தலைமை.

ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளில், 200 யூனிட் மின்சாரம் இலவசம், தாய்மாமன் சீர் திட்டம் குறித்த அறிவிப்பு ஆகியவை வந்துள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதான தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உரிமைத் தொகையை ரூ 2,500 ஆக உயர்த்துதல், அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட சில முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அடுத்த சில மாதங்களில்… பெரும்பான்மை இல்லாததால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள இடர்பாடுகள், நிதிநிலை நெருக்கடி, கூட்டணிக் கட்சியினரின் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி முதல்வர் விஜய், தன் பதவியிலிருந்து விலகி, தேர்தலை சந்தித்தால், மக்களின் அனுதாப அலை மற்றும் ஆதரவு அலையால் நிச்சயம் 200 தொகுதிகளில் த.வெ.க. வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை முதல்வர் விஜய்யிடம் மூவரணி விதைத்திருக்கிறார்கள்.

ஒருவேளை அப்படி பதவி விலகினால், மீண்டும் எப்போது தேர்தல் நடக்கும், ஆட்சி அமைக்க ஆதரவு கிடைக்குமா என்கிற சந்தேகமும் விஜய்யிடம் இருந்தாலும், மூவரணி கொடுக்கும் அழுத்தத்தால் ராஜினாமா முடிவு குறித்து அவர் தீவிரமாக பரிசீலித்துவருவதாகவே சொல்லப்படுகிறது” என விரிவாக சொல்லி முடித்தனர்.

கண்ணி வெடியுடன் கவர்னர்!

த.வெ.க. தரப்பில் இப்படி ஒரு மூவ் நடந்துகொண்டிருக்கும் நிலையில், கவர்னர் மாளிகையில் அரசியல் காய் நகர்த்தல்கள் தீவிரமாகியுள்ளன. இப்போதுள்ள சூழலில், பிரதான எதிர்க்கட்சிகள் எல்லாமே, த.வெ.க. ஆட்சியை அகற்ற உதவும் சர்வரோக நிவாரணியாக கவர்னர் மாளிகையையே நம்பியுள்ளன. எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் தொடங்கி அமைச்சர் அல்லாதவர்கள் தமிழக அமைச்சரவை மற்றும் ரகசிய அதிகாரப்பூர்வ கூட்டங்களில் பங்கேற்ற விதிமீறல், சட்டம் ஒழுங்கு சீரழிவு என பல்வேறு விவகாரங்களை கவர்னரிடம் அளித்தபுகார் மனுவில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த மனுக்களின் அடிப்படையில் எத்தகைய ஆக்ஷனை ஆரம்பிக்கலாம் என்பதில் டெல்லி தலைமையோடு தீவிர ஆலோசனை நடத்திவருகிறது கவர்னர் மாளிகை.

இந்த சூழலில் அமைச்சரவை ராஜினாமா என்ற த.வெ.க. தனது அதிரடி திட்டத்தை செயல்படுத்துமானால் அதனை கவர்னர் மாளிகை எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கவர்னர் மாளிகையின் செயல்பாடுகளை அறிந்த சட்டவல்லுநர்களிடம் பேசியபோது, “அமைச்சரவை ராஜினாமா என்ற முடிவை த.வெ.க. எடுக்குமானால், அதை ஏற்றுக்கொள்வதில் கவர்னர் மாளிகைக்கு தயக்கம் இருக்காது.

ஏற்கெனவே, குதிரை பேர குற்றச்சாட்டுகள் கவர்னரிடம் புகாராக கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கலைக்கப்படுவதாக அறிவித்து, ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவருவதில் எவ்வித சிக்கலும் இருக்காது. ஆனால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் புதிய சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது சட்ட விதி.

ஆனால், மாநிலத்தின் அசாதாரண சூழ்நிலைகளைக் காரணம் காட்டி, மூன்று ஆண்டுகள் வரை அதிகபட்சமாக ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க வழிவகைகள் உள்ளன. இந்த விஷயத்தில் மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப சட்டவிதிமுறைகள் முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தங்களது லட்சியத்தை நிறைவேற்றும் துடிப்பில் உள்ள பா.ஜ.க., அதற்கேற்ற வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொண்டு, சட்டமன்ற மறு தேர்தலை தங்கள் விருப்பப்படி தள்ளிவைக்கவும் வாய்ப்புள்ளது.

அதாவது, எதிர்க்கட்சிகளின் புகார்களை வைத்து த.வெ.க. அரசை அதிரவைப்பதா அல்லது ராஜினாமா அஸ்திரத்தை தவெக எடுத்தால் அதை பயன்படுத்தி காலத்தை தள்ளிப்போட்டு தங்களுக்கு சாதகமான சூழல் வரை காத்திருப்பதா என்பதற்கு பா.ஜ.க. தலைமை தரும் சிக்னலுக்காக கவர்னர் மாளிகை காத்திருக்கிறது என்பதே நிதர்சனம்” என்றனர்.

மக்கள் முடிவுகளுக்கு மதிப்பளித்து, இப்படியே விஜய்யின் ஆட்சி தொடர்வதுதான் மாநில நலனுக்கு நல்லது!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here