back to top
34.1 C
London
Wednesday, July 8, 2026
No menu items!
Homeஅரசியல்கரூர் பயணத்தை மையமாக்கி சூடுபிடிக்கும் அரசியல்... செந்தில் பாலாஜி கைது நடக்குமா? - Kumudam

கரூர் பயணத்தை மையமாக்கி சூடுபிடிக்கும் அரசியல்… செந்தில் பாலாஜி கைது நடக்குமா? – Kumudam

Date:

Related stories

spot_imgspot_img



ஆட்சியைத் தக்கவைக்க த.வெ.க.வும், ஆட்சியைக் கவிழ்க்க தி.மு.க.வும் ஆடும் அரசியல் ஆட்டம் சூடுபிடித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவை பர்சேஸ் செய்ய நடந்த பேரமும், அதன் பின்னணியில் செந்தில்பாலாஜியும் அவரின் சகோதரர் அசோக்குமாரும் உள்ளதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு தி.மு.க. முகாமை திகிலடையச் செய்திருக்கிறது. இந்த பரபர சூழலுக்கு நடுவே, முதல்வர் விஜய் கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதும், அவர் கரூரில் காலடி எடுத்துவைக்கும் முன்பு கரூர் பிரதர்ஸை கைது செய்திருக்கவேண்டும் என்கிற வியூகமும்தான் இன்றைய தேதியில் படு ஹாட் அரசியல் டாபிக்!

இதுகுறித்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் வட்டாரத்தில் பேசினோம். “கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் இளையராஜா. இவர், தன்னை அணுகிய யூடியூபர் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகியோர் சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க ரூ.35 கோடி வரை தருவதாக பேரம் பேசியதாக, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி போலீஸார், ஊழல் தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கான அதிரடி திட்டங்களும், அதற்கென 180 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளதும் அம்பலமானது. மேலும், செந்தில்பாலாஜியின் சகோதரரர் அசோக்குமாருக்கு பேர விவகாரத்தில் தொடர்புள்ளது என்றும் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

பர்சேஸ் பிளானில் கரூர் டீம்!

உடனே கரூர் விரைந்த ஸ்பெஷல் டீம், செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவரும், தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி பிரமுகருமான சக்தி மெஸ் கார்த்தி, ஃபைனான்ஸ் தொழில் நடத்திவரும் அதிபன் ரமேஷ் ஆகியோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தது. இந்த விசாரணையில்தான் த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க போடப்பட்ட ‘பர்சேஸ் ப்ளான் தொடர்பான முழு விவரங்களும் தெரியவந்திருக்கின்றன. இதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரின் சகோதரர் அசோக்குமார் ஆகியோரும் இருப்பது தெரியவர அவர்களையும் நேரடியாக வழக்கிற்குள் கொண்டுவந்துள்ளது ஸ்பெஷல் டீம். மேலும், ஜூலை 6ம் தேதி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென, கரூரில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டில் இருந்த அவரின் பெற்றோரிடம் சம்மன் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிரடி அரசியல் செய்யும் கரூர் கம்பெனி டீம் ஆடிப்போயுள்ளது.

வழக்கை வலுவாக்க உத்தரவு!

எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் நடத்தி ஆட்சியைக் கவிழ்க்க நடந்த சதி தொடர்பான விவரங்கள், முதல்வர் விஜய்யின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், ‘இந்த வழக்கில் செந்தில்பாலாஜி உட்பட ஒருவரையும் தப்ப விடக்கூடாது. வழக்கை வலுவாக்க எல்லா சாட்சிகளையும், ஆவணங்களையும் தயார் செய்ய வேண்டும்’ என்ற உத்தரவு பறந்துள்ளது. அதோடு, ஊந்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜா தவிர, பேர வலையில் சிக்கிய எம்.எல்.ஏ.க்கள் குறித்தும் முழு விசாரணை அறிக்கை முதல்வர் கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக்குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார். கடந்த ஜூலை 5 அன்று மதியம் நிலவரப்படி, அசோக்குமார் மட்டும் முன்ஜாமினுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், செந்தில்பாலாஜி தரப்பில் கைதில் இருந்து தப்பிக்க சட்டரீதியான வாய்ப்புகளைத் தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர். ‘இதுவரை இந்த வழக்கில் கைதான எட்டு பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செந்தில்பாலாஜிக்கும் அசோக்குமாருக்கும் எம்.எல்.ஏ.விடம் நடந்த பேரத்தில் நேரடி தொடர்புள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்யாவிட்டால், சாட்சிகளை கலைத்துவிடுவார்கள்’ என்ற ரூட்டில் நீதிமன்றத்தை அணுகி கைதுக்கான தடையை நீக்கவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை,பெங்களூரு அபார்ட்மென்ட் பதுங்கல்!

சட்டரீதியான இந்த விவகாரங்கள் ஒருபுறம் தொடரும் நிலையில், செந்தில்பாலாஜியும், அசோக் குமாரும் தலைமறைவாகியுள்ளனர். இவர்களை பொறி வைத்துப் பிடிக்க தயார் நிலையில் உள்ளது தனிப்படை சென்னையில் உள்ள சில பெய்டு அபார்ட்மென்ட்கள், பெங்களூருவில் வட்டி தொழில் நடத்தும் சில தொழிலதிபர்களின் வீடுகள், கோவை, திருச்சி உள்ளிட்ட சில இடங்களை இந்தத் தனிப்படை குறிவைத்துள்ளது. கடந்த சில நாட்களாக செந்தில்பாலாஜியை சந்திக்க வந்தவர்கள், அசோக் பயணப்பட்ட இடங்கள் குறித்த முழு விவரங்களையும் சேகரித்துள்ள காவல்துறை, ஒவ்வொரு ஸ்பாட்டிலும் தனி, தனி டீமை அலெர்ட் நிலையில் வைத்துள்ளது. மேலும் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி விடாதபடி லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்தும் பிடியை இறுக்கியுள்ளது காவல்துறை” என்று சொல்லி முடித்தனர்.

பாலாஜிக்கு தி.மு.க. ஆதரவில்லையா?

ஸ்பெஷல் டீமில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளோ, “சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறைக்கு ‘அல்வா’ கொடுத்துவிட்டு இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்து, சாகசம் செய்த வரலாறு அசோக்குமாருக்கு உண்டு. ஆனால், இந்த ஆட்சியில் அந்த வேலை நடக்காது. அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு பலமாக குரல் கொடுத்த தி.மு.க. தலைமை, செந்தில்பாலாஜி விஷயத்தில் ஆர்.எஸ்.பாரதி, பரந்தாமன் ஆகியோரை வைத்து எதிர்வினையாற்றுவது கரூர் கம்பெனியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கெனவே, டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமாருக்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுக்க, அவசர பிரஸ்மீட் வைத்த செந்தில்பாலாஜி, இந்த வழக்கின் சீரியஸ் தன்மையை உணர்ந்துள்ளதால், பதில் பேச முடியாமல் பதுங்கியுள்ளார்” என்கின்றனர்.

முதல்வர் கரூர் பிளான்!

இப்படியாக, ‘கரூர் பிரதர்ஸ்’ கைது படலத்திற்கான காட்சிகள் ஒருபுறம் தொடர, வரும் ஜூலை 10ம் தேதி முதல்வர் விஜய்யின் கரூர் விசிட் தொடர்பான ஏற்பாடுகளும் தீவிரமாகியுள்ளன. இதுகுறித்து தவெ.க. வட்டாரத்தில் பேசியபோது, “கரூர் தேர்தல் பிரசாரத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தளபதியின் மனதில் ஆறாத ரணமாக உள்ளது. அதோடு கரூர் சம்பவத்தின்போது தி.மு.க. நடத்திய அரசியலும், தன் மீது பழிபோட அவர்கள் மேற்கொண்ட யுக்திகளும் இன்று வரை அவர் மனதில் தகித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வரும் ஜூலை 10ம் தேதி கரூர் சென்று நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை முதல்வர் நேரில் சந்திக்கவுள்ளார். உயிரிழந்த 41 பேரின் வீடுகளுக்கும் செல்ல அவர் விரும்புவதால், பயணத்திட்டம் இரு நாட்களாக மாறியுள்ளது.

இதில், நெரிசலில் உயிரிழந்த கரூரைச் சேர்ந்த 33 பேரின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கவும், திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேரின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான அரசாணையை முதல்வர் கொடுக்க இருப்பதாகவும் ஒரு தகவல் உலாவருகிறது.

ஏற்கெனவே, நீட் தேர்வினை எதிர்த்து மறைந்த அனிதா, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த ஸ்னோலின் ஆகியோரின் வீடுகளுக்கு எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல்தான் அவர் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதே பாணியில்தான் இந்த பயணமும் இருக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், தனியார் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் பங்கேற்கவும் முதல்வர் நேரம் ஒதுக்க வேண்டுமெனவும் அதிகாரிகள் தரப்பில் ப்ரபோசல் அனுப்பப்பட்டுள்ளது” என்றனர்.

கணக்கு தீர்ப்பாரா விஜய்?

இதற்கிடையே, சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கிறது. அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம்’ என ஆவேசமாக பேசினார். இந்த விவகாரத்தை கையில் எடுத்த தி.மு.க., உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. ‘கரூர் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை நடந்துவரும் நிலையில், அதை திசைதிருப்புவதுபோல் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். மேலும், முதல்வர் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவும், அவர்களுக்கு அரசுப் பணிக்கான ஆணைகளை வழங்கவும் தடை விதிக்க வேண்டும்’ எனவும் முறையிட்டுள்ளது.

இன்னொரு பக்கம், ஜூன் 5ம் தேதி ஆளுநரை சந்தித்த, ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான தி.மு.க. குழு, ’50 கோடி ரூபாய், அமைச்சரவையில் இடம் என டீல் பேசி, தி.மு.க எம்.எ.ஏ.க்களை த.வெ.க.வினர் வளைக்கப் பார்க்கிறார்கள்’ என புகார் அளித்திருப்பதும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து த.வெ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டுவிடம் பேசினோம், “தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ‘விரைவில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும், தேர்தலை சந்திக்க தயாராகுங்கள்’ என்று பேசிவருவதன் தொடர்ச்சியாகத்தான், எம்.எல்.ஏ.வை வளைக்க பேரம் நடந்துள்ளது. எம்.எல்.ஏ. இளையராஜாவின் புகார், அதன்பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணை, கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரின் சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு இந்த பேரத்தில் தொடர்புள்ளது என்பது தெரியவந்ததால், அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நேர்மையானவர்கள், குற்றமற்றவர்கள் என்றால் விசாரணையைச் சந்திக்க வேண்டியதுதானே. அதை விடுத்து முன்ஜாமினுக்கு முயற்சிக்கும்போதுதான் சந்தேகம் ஊர்ஜிதமாகிறது. சட்டம் தன் கடைமையைச் செய்கிறது. தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் உத்தரவு. இதில் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை” என்றார்.

இதுகுறித்து தி.மு.க. எம்.பி. கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசியபோது, ‘எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாக கைதானவர்கள் என்ன வாக்குமூலம் கொடுத்தார்கள், என்ன ஆதாரங்களை போலீஸார் கைப்பற்றினர் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களுக்கும் செந்தில்பாலாஜி, அசோக்குமார் ஆகியோருக்கும் என்ன தொடர்பு என்பதும் தெளிவாக்கப்படவில்லை.

முதல்வர் விஜய் கரூர் செல்லும்போது, இவர்கள் இருவரையும் கைது செய்ய திட்டமிடுவது பழிவாங்கும் நடவடிக்கை. கரூரில் 41 பேர் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கணக்கு தீர்க்க வேண்டும் என ஒரு ரவுடிபோல் பேசியுள்ளார்” என்றார்.

கரூரில் கால் பதிக்கும் முன் கரூர் பிரதர்ஸை கைது செய்து கணக்கு தீர்க்க வேண்டும் என்ற முதல்வரின் சபதம் நிறைவேறுமா அல்லது அவரை கரூருக்கே செல்லவிடாமல் தடுக்கும் தி.மு.க.வின் சட்டப்போராட்டம் வெல்லுமா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பு!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here