‘தி. மு.க. கூட்டணியிலிருந்து விலக வேண்டும். ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருவரும் பதவி விலக வேண்டும்’ என ம.தி.மு.க.வின் பொதுக்குழு கடந்த வாரம் முடிவெடுத்தது. ஆனால், பதவியைத் துறக்க மறுத்த இரு எம்.எல்.ஏ.க்களும், தி.மு.க. பக்கம் சாய்ந்து, வைகோவுக்கு ஷாக் கொடுத்துள்ளனர். ம.தி.மு.க.வில் என்னதான் நடக்கிறது என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தோம்.
உங்கள் முடிவை ஏற்று இரு எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனரே?
“தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்று கட்சி முடிவெடுத்த பிறகு, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதுதான் சரியானது என முடிவெடுத்தேன். இந்த முடிவுக்கு ஒரு எம்.எல்.ஏ. எந்த பதிலும் சொல்லவில்லை. மற்றொரு எம்.எல்.ஏ.வான ராஜேந்திரன், ‘தேர்தலில் போட்டியிட்டால் வெற்றிபெற முடியாது’ என சொல்லி ராஜினாமா செய்ய மறுத்தார். அண்ணா, காமராஜரே தோற்றிருக்கும்போது, நாம் தோற்றால் என்ன என்கிற எனது கருத்தை அவர் ஏற்கவில்லை.”
உங்கள் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொல்லி, த.வெ.க. ஆதரவுடன் போட்டியிட வைப்பது குதிரைபேர அரசியல் இல்லையா?
“எங்களது இரு எம்.எல்.ஏக்களை பொதுக்குழுவுக்கு வராமல் தடுத்த சக்தி எது, அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? நான் நேர்மையைப் பாதுகாத்து வருகிறேன். என் கரங்கள் களங்கம் படியாதவை. என் மரணம்வரை இந்த நேர்மையை கடைப்பிடிப்பேன்!”
‘ம.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தல் வந்தால், முதல்வர் விஜய் பிரசாரம் செய்து வெற்றிபெற வைப்பதாக உறுதி அளித்தார்’ என்று சொல்லியிருக்கிறீர்களே?
“அதாவது, ‘தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினால், தவெ.க. கூட்டணியில் சேர்ந்துதான் தேர்தலில் போட்டியிட வேண்டிவரும். அப்போது த.வெ.க. நமக்கு ஆதரவாக தேர்தல் பணி யாற்றும். முதல்வர் விஜய் நமக்காக பிரசாரம் செய்வார்’ என பொதுக்குழுவில் பேசினேன். ‘உங்கள் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். நான் வந்து பிரசாரம் செய்கிறேன்’ என்று முதல்வர் விஜய் என்னிடம் சொல்லவில்லை.”
தி.மு.க. ஆதரவுடன் எடப்பாடியை முதல்வராக்க முயற்சி நடந்தது உண்மையா?
“நூற்றுக்கு நூறு உண்மை. அதை வதந்தி என யாரும் மறுக்க முடியாது. இது ஒரு அரசியல் ஃபிராடு. நாங்கள் தி.மு.க. கூட்டணியைவிட்டு வெளியேற இதுதான் முக்கிய காரணம்.”
கூட்டணியில் இருந்தபோது அமைதி காத்துவிட்டு, தற்போது குற்றம்சாட்டுவது முரணாக உள்ளதே?
*சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டின்போது, அடிப்படை மரியாதைகூட தி.மு.கவிடம் இருந்து எங்களுக்கு கிடைக்கவில்லை. சகித்துக்கொண்டோம். தி.மு.க. ஆட்சியில் பல விஷயங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. கூட்டணியில் இருந்துகொண்டே அவர்களை விமர்சிப்பது நாகரிகம் அல்ல என அமைதி காத்து, கூட்டணி தர்மத்தை கடைபிடித்தோம்.”
அ.தி.மு.கவில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் தொடர்ச்சியாக ராஜினாமா செய்து வருகிறார்களே?
“அவர்களுக்கு அந்த கட்சியில் நீடிக்க விருப்பம் இல்லை. ராஜினாமா செய்கிறார்கள். அதற்கு கண், காது, மூக்கு வைத்து விமர்சிப்பது ஊடகங்களின் உரிமை.”
பா.ஜ.க.வை நோக்கி தி.மு.க நகர்கிறது என அமைச்சர் வன்னியரசு கூறியிருக்கிறாரே?
“அவர் இப்படி சொல்வதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கலாம். அவருக்கு அதுகுறித்து தெரிந்திருக்கலாம்.”
தமிழ்நாட்டில் இனி தனிக்கட்சி ஆட்சி கிடையாது, கூட்டணி ஆட்சிதான் என வன்னியரசு கூறியிருப்பது குறித்து?
“எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இனிமேல் ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும், தோழமைக் கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளும் நடைமுறை உருவாகும். அதுதான் எதிர்கால அரசியலாக இருக்கும்.”
இந்த மாற்றத்தை த.வெ.க.தான் கொண்டுவந்ததாக நினைக்கிறீர்களா?
“ஆம். தங்களுக்கு ஆதரவு தந்த கட்சிகளுக்கு அமைச்சரவையில் அவர்கள்தானே இடம் கொடுத் திருக்கிறார்கள். முன்பு, பெரும்பான்மை இல்லாமல் தி.மு.க. ஆட்சி நடந்தபோதுகூட, கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுக்கவில்லையே..”
த.வெ.க.வின் 50 நாள் ஆட்சி எப்படி?
கடந்த ஆட்சியில் இருந்த கமிஷன் கலாசாரத்தை வேரோடு பிடுங்க முயற்சிக்கிறார்கள். அதற்காக முதல்வரை பாராட்டுகிறேன். ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து, ஊழல், அதை ஒழிக்க முயற்சி நடக்கிறது. சகோதரர் விஜய் ஐந்தாண்டுகள் முதலமைச்சராக இருப்பார். அடுத்த தேர்தலிலும் அவரே வெற்றிபெறுவார்.”
இந்த ஆட்சியிலும் அமைச்சர்கள் செயல்பாட்டின் மீது குற்றச்சாட்டுகள் எழுகின்றனவே?
“த.வெ.சு அரசை வீழ்த்த வேண்டும் என முடிவு செய்தவர்கள், என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் எழுப்புவார்கள். ‘இந்த ஆட்சி’ ஆறு மாதத்திற்கும் மேல் நீடிக்காது’ என சிலர் சாபம் விடுகின்றனர். ஆனால், இந்த ஆட்சி நீடிக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் இந்த ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது.”
மேகதாது அணை விவகாரத்தில் த.வெ.க. அரசின் முடிவிற்கு கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளனவே?
“மேகதாது அணை பிரச்னையைத் தீர்க்க புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு, எந்த மேதாவி சொல்லிக் கொடுத்தார் எனத் தெரியவில்லை. அதை ஆழ்ந்து பரிசீலிக்காமல், முழுமையான பின்னணி தெரியாமல் முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த முடிவை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகளை கூட்டி முதல்வர் முடிவெடுக்க வேண்டும்.”
ஒரு முத்த அரசியல்வாதியாக முதல்வருக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?
“அதிகாரிகளை மட்டும் நம்பாமல், மக்களை நேரடியாக சந்தியுங்கள். அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வையுங்கள். அதுதான் நல்ல நிர்வாகத்திற்கு அடிப்படை இதை நான் முதல்வரிடமே தெரிவித்துள்ளேன். அதிகாரம் நிரந்தரமானதல்ல. நேர்மை, வெளிப்படைத்தன்மை, மக்கள் நலன் இவற்றை முன்னிறுத்தி செயல்பட்டால் மக்கள் என்றும் ஆதரிப்பார்கள்.”
