Home அரசியல் தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல – வெறும் ‘0’தான்: எடப்பாடி ஆரூடம் – Kumudam

தேர்தலில் ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல – வெறும் ‘0’தான்: எடப்பாடி ஆரூடம் – Kumudam

0



அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆனைக்கு அறம்’ என்றால் ‘குதிரைக்கு குர்ரம்’ என்று சொல்வதையும், ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்–கொட்டைப் பாக்கின் விலை சொல்வதையும்’ வாடிக்கையாகக் கொண்ட தமிழகத்தின் ‘பொம்மை முதலமைச்சர்’ மு.க.ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில்தான் ஸ்டிக்கர் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால், அரசியல் ரீதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும் கார்பன் காப்பி அடிக்கத் தொடங்கியிருப்பது, விலா நோக சிரிக்க வைக்கிறது.

2021 தேர்தல் நேரத்தில் திமுக சார்பில் ஸ்டாலின் அளித்த 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றவில்லை என்ற உண்மையை, மக்களுக்கு நாங்கள் நாள்தோறும் சொல்லி வருகிறோம். கவர்ச்சிகரமாக பல பெயர்களை வைத்து மக்களை ஏமாற்றும் இந்த விடியா அரசின் செயலை விளக்கும் வகையில், கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் ‘திமுக-வின் உருட்டுக்கடை அல்வா’ ஒன்றை தமிழக மக்களிடம் வழங்கினோம்.

மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ, இணக்கமாகப் பேசியோ, தமிழக மக்களுக்குத் தேவையான எந்தவொரு நல்ல திட்டங்களையும் கொண்டுவர வக்கற்ற ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற அரசு, மத்திய அரசு கேட்டதைத் தரவில்லை என்று வாய்ஜாலம் காட்டிக்கொண்டிருக்கிறது.

* கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு முறையாக திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கத் தவறிய திராணியற்ற ஸ்டாலின் தலைமையிலான அரசு, தங்களுடைய இயலாமையை, தோல்வியை மறைக்க, மத்திய அரசு போதிய நிதியை தமிழகத்திற்கு தரவில்லை; ரெயில்வே திட்டங்கள் வரவில்லை என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு மக்களுக்கு நிஜமாக அல்வா கொடுக்கும் பம்மாத்து வேலையை அரங்கேற்றி வருகிறது.

* ஏமாற்று மாடல் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாளை எதிர்பார்த்து தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; திமுக-வின் 2.0 ஆட்சியில் தமிழகம் சுபிட்சம் பெறும் என்றெல்லாம் மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வருகிறார் ஸ்டாலின்.

* ‘பேஸ்மென்ட் வீக் – பில்டிங் ஸ்டிராங்’ என்று ஒரு படத்தில் வரும் நகைச்சுவை காட்சியைப் போல, இவருடைய ஆட்சியே ஆட்டம் கண்டு இன்றோ, நாளையோ என்று ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், காலையில் எழுந்தவுடன் மேக்கப் போட்டுக்கொண்டு, கண்ணாடி முன் நின்று வெற்றி, வெற்றி என்று இம்சை அரசின் 23ம் புலிகேசி போல் ஸ்டாலின் கூக்குரல் இட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, தமிழக மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார். அதன் விளைவு, அரசியல் ரீதியாக, தர்க்க ரீதியாக, நாகரீகமாக களத்தில் எதிர்த்து நிற்கும் அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசுவதும், ஒருவரை அசிங்கப்படுத்திவிட்டால், அவர்கள் மானத்திற்கு பயந்து களத்தில் இருந்து ஓடிவிடுவார்கள் என்று அல்பத்தனமாக கருதுவதும் ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது.

கடந்த ஐந்தாண்டுகால விடியா திமுக ஆட்சியில், ஒருசில மக்களின் நாக்கில் தேன் தடவும் வேலையைத் தவிர, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளீர்கள் என்பதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து, ஓட்டு கேட்க ஸ்டாலின் தயாரா? அப்படி அவர் களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல – வெறும் ‘0’தான் என கூறியுள்ளார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version