Home அரசியல் “ஆட்சியில் பங்கு… கனவை நனவாக்கிய விசிக! மனம் திறந்த வன்னியரசு” – Kumudam

“ஆட்சியில் பங்கு… கனவை நனவாக்கிய விசிக! மனம் திறந்த வன்னியரசு” – Kumudam

0



த.வெ.க. அமைச்சரவையில் பங்கேற்று, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கனவை நனவாக்கியிருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. கோட்டையில் இருக்கும் அக்கட்சியின் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசுவின் அலுவலகத்தில் விளிம்பு நிலை மக்கள் ஏராளமானோர் குவிந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் வரவேற்று அவர்களின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்துக்கொண்டிருந்த அமைச்சர், குறுகிய இடைவெளியில் நமது கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார்.

ஒரு களப் போராளியாக பயணத்தை தொடங்கிய நீங்கள், இன்று அமைச்சராகி இருக்கிறீர்கள். இதை எதிர்பார்த்தீர்களா?

தலைவர் திருமா, ‘சாதி ஒழிப்பே தமிழ்த் தேசிய விடுதலை’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். அந்த கொள்கையை ஏற்கெனவே நான் உள்வாங்கி இருந்ததால், திருமா என்ற இளைஞரை தலைவராக்கி அவர் பின்னால் நடைபோட்டு வந்தோம். அங்கிருந்துதான் இந்த இடத்திற்கும் வந்திருக்கிறோம். புதிய அமைச்சரவையில் வி.சி.க. இடம்பெற்றிருப்பது சாதாரண விஷயம் அல்ல. இது சமூகத்தில் ஏற்பட்டிருக்கின்ற புரட்சி!”

‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்ற வி.சி.க.வின் நிலைப்பாடு நிறைவேறியது. இந்த அதிகாரப் பகிர்வின் மூலம் பட்டியல், பழங்குடியின மக்களின் கனவை நிறைவேற்றிட முடியும் என வி.சி.க. நம்புகிறதா?

“இதுதான் தொடக்கம். இனி யார் வந்தாலும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற நிலை மாறாது. யாரும் தனியே ஆட்சி அமைக்க முடியாது. மக்களுக்கு பணியாற்றக்கூடிய ஒரு வாய்ப்பாகத்தான் அமைச்சர் பொறுப்பை பார்க்கிறோம். முதல்கட்டமாக மனைப்பட்டா, சுடுகாடு பிரச்னையை தீர்த்து வைப்பதோடு, வரும் காலங்களில் யாராவது இந்த துறைக்கு அமைச்சராக வந்தால், ‘வன்னியரசு போல இருக்கவேண்டும்’ என நினைக்கும் அளவுக்கு ரோல்மாடலாக இருக்க விரும்புகிறேன்.”

‘விஜய் ஒரு மதச்சார்பற்ற சக்தி’ என்ற அடிப்படையில் அவருக்கு ஆதரவளித்ததாக திருமா சொல்கிறார். அவர் மதச்சார்பற்றவர்தான் என்பதற்கான அவரது செயல்பாடுகளை கூற முடியுமா?

“த.வெ.க. ஆட்சியமைக்க அவர்களுக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருந்தபோதும், இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பற்ற சக்திகளோடு இணைந்து செயல்பட விரும்பி எங்களை நாடி வருகிறார். பா.ஜ.க., ஆர்.எஸ். எஸ்., சனாதன எதிர்ப்பில் உறுதியாக உள்ள வி.சி.க., இடதுசாரிகளை விரும்பி ஏற்கிறார். திரும்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடித்தது கடந்தகால தி.மு.க அரசு. அதே நிலைப்பாட்டை விஜய்யும் எடுத்திருக்கிறார். மதச்சார்பற்ற ஆட்சி என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் வேண்டும்?” 

வி.சி.க.. இடதுசாரிகள், ஐ.யு.எம்.எல் போன்ற கட்சிகளை தனக்கான மதச்சார்பற்ற முகமுடியாக விஜய் பயன்படுத்துகிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா?
“எங்கள் முகமே மதச்சார்பின்மைதான் எனும்போது, இந்த முகமூடி என்ற வார்த்தை எங்களை காயப்படுத்தக்கூடியது. பா.ஜ.க. எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு என்பதே எங்கள் முகமாக இருக்கும்போது, அது மூடியாக இருக்க முடியாது. அதனால் இந்த கருத்து ஏற்புடையதல்ல.”

தி.மு.க. கூட்டணியை பா.ஜ.க. உடைக்க நினைக்கிறது. அதை நடக்க விடமாட்டோம்’ என தேர்தலுக்கு முன்பு பேசினார் திருமா. தேர்தலுக்குப் பின் தி.மு.க. கூட்டணி உடைந்தால் சரியா? அமைச்சர் பதவிக்காக அந்த நிலைப்பாட்டில் சமரசம் செய்துகொண்டீர்களா? 

“அப்படியல்ல… 2006ல் நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு இரு இடங்களில் வென்றோம். அப்போது தி.மு.க. ஆட்சியமைக்க ஆதரவளித்தோம். அதே நிலைபாட்டைத்தான் இன்றும் நாங்கள் எடுத்திருக்கிறோம். அ.தி.மு.க. கூட்டணியில் வென்று திமுகவுக்கு ஆதரவளித்ததை தவறு என அன்று கலைஞர் சொல்லவில்லையே! ‘ஜனநாயக மாண்பை பாதுகாக்கவே தம்பி திருமா இம்முடிவை எடுத்தார்’ என்று சொன்னார். அப்படித்தானே இதையும் பார்க்க வேண்டும். பா.ஜ.க. பின்வாசல் வழியாக ஆளுநர் ஆட்சியை கொண்டுவந்திட கூடாதென ஆதரவு அளித்தோமே தவிர, அமைச்சர் பதவிக்காக ஆதரவு தரவில்லை.” 

திருமாவளவன் முதல்வராகும் வாய்ப்புகூட இருந்ததே …. அதைவிடுத்து அமைச்சர் பதவியை தேர்ந்தெடுத்தது ஏன்?

திருமாவுக்கு “தலைவர் முதல்வராகும் வாய்ப்பு இருந்தும்கூட, அரசியலில் மாண்பு, அறம், நேர்மை மிக முக்கியம் என நினைத்து வேண்டாம் என்ற முடிவை தியாகத்தோடு எடுத்திருக்கிறார். அதனால்தான் அவரை ‘கிங் மேக்கர்’ என்கிறோம். எங்கள் தலைவர் பதவிக்கோ, அதிகாரத்துக்கோ ஆசைப்படுபவரில்லை. 2001ல் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து எம்.எல்.ஏ. ஆனபோது இரண்டே வருடங்களில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர். இன்று அவருக்கு முதல்வர் வாய்ப்பு வந்தபோதும், அதை தூக்கிப் போட்டுவிட்டு எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கச் செய்யும் முடிவை எடுத்திருக்கிறார். மக்கள் கொடுத்த வாய்ப்பை அமைச்சரவையிலிருந்து தொடங்கலாம் என்பதாகக்கூட அவரின் முடிவு இருக்கலாம்.”

தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சிகள் குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்களை எப்படி பார்க்கிறீர்கள்? ‘வி.சி.க.வை தி.மு.க உடைக்க நினைக்கிறது’ என்கிறாரே ஆதவ்?

*வி.சி.க வெளியேறிய பிறகு, ‘அவர்கள் இருந்தபோது நமக்கு ஒரு வலிமை இருந்தது. அவர்கள் போய்விட்டனர். இனி நாம் என்னசெய்ய முடியும்’ என்ற ஆற்றாமையில், ராசா அவதூறு பரப்புகிறார். அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. அவர் பேசவில்லை. அவர் பின்னாலிருந்து யார் பேசுகிறார்கள் என்பதை காலம் ஒருநாள் வெளிப்படுத்தும். இருக்கிற சூழல்படி பார்த்தால், இனி தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் நடக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆதவ்வின் பேச்சு, வி.சி.க. மீதான அக்கறையால் விளைந்தது.”

த.வெ.க.வுடன் சென்றதால், வி.சி.க.வில் சிலர் வெளியேறுகிறார்களே..?

“வி.சி.க. கோட்பாட்டு கற்களால் கட்டப்பட்ட வலிமையான பேரியக்கம். இது ஒரு விடுதலை இயக்கம். எங்கள் இலக்கு இந்த மக்களுக்கான விடுதலை, தமிழ்த் தேசிய விடுதலைதான். போகிறவர்கள் பதவிக்காக நிற்பவர்கள். கொள்கைப் பிடிப்புள்ள இளைஞர்கள், சாதி, மத வேறுபாடு பாராமல் சாரை சாரையாக வி.சி.க.வை நோக்கி அணிவகுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இயக்கத்தின் அடிப்படை கொள்கை, கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் யாரும் போகமாட்டார்கள்.”



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version