Home தமிழ்நாடு நெல் பணம் எப்போது? காத்திருக்கும் விவசாயிகள் – Kumudam

நெல் பணம் எப்போது? காத்திருக்கும் விவசாயிகள் – Kumudam

0



ஏனிந்த குமுறல்? தமிழக விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் ஆர்.சுபாஷிடம் கேட்டோம். தமிழக அரசு கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு அரிசி வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் மையங்கள் அமைத்து கொள்முதல் செய்கிறது. இதற்கான தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உடனடியாக வரவு வைக்கிறது. மத்திய அரசும் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசி (மோடி அரிசி) வழங்க என்.சி.சிபி எனும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் சங்கம் மூலம் நெல் கொள்முதல் செய்கிறது.

ஆனால், இந்நிறுவனம் தமிழக அரசுபோல நேரடியாக கொள்முதல் செய்யாமல் ஏஜென்ட் மூலம் கொள்முதல் செய்கிறது. இந்த தனியார் ஏஜென்ட்கள் டெல்டா பகுதி அல்லாத மற்ற மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைத்து கொள்முதல் செய்கின்றன. ஒரே மாவட்டத்தில் மத்திய அரசு மூலமும், மாநில அரசு மூலமும் தனித்தனியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில் பல விவசாயிகளுக்கு மத்திய அரசு கொள்முதல் நிலையம் எது, மாநில அரசு கொள்முதல் நிலையம் எது என தெரியாத நிலையே உள்ளது’ என்றவர்.

விவசாயிகள் நம்பிக்கையுடன் நெல்லை வழங்குகிறார்கள். ஆனால் அதற்கான தொகை விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு ஒவ்வொரு முறையும் காலதாமதமாகிறது. இதற்கு காரணம் தமிழக அரசு நெல்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்ட பிறகே அதை அரிசியாக்கிக்கொள்கிறது. ஆனால், மத்திய அரசு ஏஜென்ட்கள் நெல்லை கொள்முதல் செய்து அதை அரிசி ஆலைகளில் பதப்படுத்தி அரிசியாக்கி மத்திய அரசின் என்.சிசிபி நிறுவனத்திற்கு வழங்கிய பிறகுதான் அவர்கள் பணத்தை விடுவிக்கிறார்கள்.

இதன் உண்மையை நன்கு உணர்ந்த டெல்டா விவசாயிகள் ஒரு நெல் மணியைக்கூட இவர்களுக்கு இப்போது வழங்குவதில்லை. அவர்களும் பணம் கொடுக்க தாமதமானால் இவர்கள் போராட்டம் என தொல்லை கொடுப்பார்கள் என டெல்டாவில் இப்போது கொள்முதல் செய்வதில்லை. அதனால் இவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் செய்யாத வட மாவட்டங்களை குறிவைத்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்கிறார்கள். திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம். செங்கல்பட்டு, ராணிப்பேட்டை என இவர்களது கொள்முதல் விவகாரத்தில் பல நூறு கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 240 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது” என்றார்.

இந்த நிலையில், திருவண்ணா மலை மாவட்டம் வந்தவாசி பென்னாகரம் பகுதியில் மிகவும் பின்தங்கிய ஏழை சிறு விவசாயிகளிடம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு நெல் கொள்முதல் செய்து பல வாரங்கள் ஆகின்றன. அவர்கள் கடன் வாங்கியவர்களுக்கு வட்டிகூட கொடுக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். ஒருகட்டத்தில் நொந்துபோய் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்த, போலீஸார் தலையிட்டு சமாதானம் செய்ய முயன்றனர். தாசில்தார் ஜெயக்குமாரோ, ‘மத்திய அரசுக்கு நெல் கொடுத்துவிட்டு மாநில அரசு அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தால் என்ன செய்வது? என குழம்பிப்போய் ஒருவழியாக பேசி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

இதில் அதிகம் பாதிக்கப் பட்ட போளூர் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் குதிக்க தயாராக, விவகாரம் போளூர் தவெக எம்.எல்.ஏ அபிஷேக்கிற்கு தெரியவந்தது. உடனே விவசாயிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவரம், எவ்வளவு தொகை என்பதைக் கேட்டு அதிர்ந்துபோனார். இதுகுறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்க, ‘மத்திய அரசின் தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஏற்படுவது உண்மைதான். ஆனால், இதுவரை யாருக்கும் பணம் வழங்காமல் இருந்ததில்லை. தேர்தல் தேதி அறிவிப்பு, தேர்தல் ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் காலதாமதமாகிவிட்டது’ என்றனர். ஆனால், எம்.எல்.ஏ.விற்கு இந்த பதிலில் திருப்தி இல்லை.

நாம் த.வெக எம்.எல்.ஏ அபிஷேக்கிடம் இதுகுறித்துப் பேசினோம். “இது முந்தைய ஆட்சியில் நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம். எப்போது நடந்திருந்தாலும் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான். அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலுவைத் தொகை விவரங்களை தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து விவரங்களை சொன்னேன். அமைச்சர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக தொடர்புகொண்டு பேச, அதிகாரிகள் இன்னும் சில தினங்களில் பணப்பட்டுவாடா செய்வதாக சொல்லியிருக்கிறார்கள்” என்றார்.
இனிமேலாவது இழுத்தடிக்காம கொடுங்க!



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version