அரசியல் என்பதே ஆடுபுலி ஆட்டமாகிவிட்டது. ஆடுகள்தான் மக்கள், புலிகள் அரசியல்வாதிகள். இதுகூடப் புரியாமல் மக்களாகிய ஆடுகள் புலிகளிடம் அன்பையும், ஆதரவையும், பாதுகாப்பையும் எதிர்பார்த்துக் காத்திருப்பதைப் பார்க்க கரப்ஸுக்கு காமெடியாகத் தெரிந்தாலும், மனதுக்குள் பரிதாபமாக இருந்தது. வீட்டுக்குள்ள புலிய வுட்டுட்டு இப்படி கரப்பான் பூச்சிக்கு மருந்தடிச்சிட்டிருக்காங்களே, இவிங்கள என்ன செய்யறதுங்கிற கவலையில் அந்தப் புலிகளின் வேஷத்தைக் கலைக்கத் தயாரானார் பூச்சியார்…
விரைவில் டாஸ்மாக்கைத் தனியாருக்குத் தாரைவார்க்க இருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் நல்லா கல்லா கட்டும் கடைகளைத் தேடிப்பிடித்து இப்போதே துண்டு போட்டு வைப்போம் என்ற முடிவுக்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வந்திருக்கிறார்களாம்.
சும்மாவே வாய் குழறுது, கையும் நடுங்குனா எப்படிக் கையெழுத்து போடறது? சரக்கு ஈஸியா கிடைச்சா வேலையும் வேகமா நடக்குமுல்ல…!
தமிழக நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் மத்திய அரசு நிதிப்பகிர்வில் பாரபட்சம் காட்டுகிறது என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல், தமிழகத்தைவிட முதன்மை மாநிலங்களாக குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்றவை இருக்கின்றன என்று திறந்த மனதோடு குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போதைக்கு மத்திய அரசுடன் எந்த முட்டல் பஞ்சாயத்தும் வேண்டாம்: முடிந்தவரை அவர்களுடன் சமாதானமாகச் சென்று, ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம் என்ற அணுகு முறைதான் இதில் தெரிகிறது.
பொண்டாட்டி மேல கோபம் வந்தா, அத மாமியார்கிட்ட காட்ட முடியுமா?
அடங்கிப் போகாட்டாலும் அட்ஜஸ்ட் பண்ணிப் போனாதான ஆத்திர அவசரத்துக்கு உதவி கிடைக்கும். அ.தி.மு.க. வினருக்கு ‘வாங்க வாங்க’ என்று த.வெ.க. சிவப்புக் கம்பளம் விரித்தாலும், வருபவர்களுக்கு இதுவரை எந்தக் கட்சிப் பொறுப்பும் வழங்கவில்லை. அவசரப்பட வேண்டாம்’ என்று செங்கோட்டையனே பிரேக் போடுகிறாரோ என்றுகூட ஒரு சந்தேகம் இருக்கிறதாம்.
பந்தியில உட்கார்ந்தாச்சி; பாயசத்துல முந்திரி இல்லன்னு எந்திரிச்சா போக முடியும்?
அரசு வழக்கறிஞர்கள் பதவிக்கு காங்கிரஸ் கட்சியிலிருந்து 200-க்கும் அதிகமானவர்கள் கொண்ட பெயர் பட்டியலை தமிழக வெற்றிக் கழகத் தலைமையிடம் காங்கிரஸ் கட்சி கொடுத்திருக்கிறது. டென்ஷன் ஆன விஜய், ‘தி.மு.க-வுடன் கூட்டணி இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எத்தனை பேருக்கு அரசு வழக்கறிஞர் வாய்ப்பு கிடைத்தது?’ என்று கேட்டாராம். பத்துப் பதினைந்து பேருக்கு கிடைத்திருக்கிறது என்று தெரியவர, ‘அப்படியானால் நாம் ஐந்து பேருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கலாம்’ என்று ஷார்ப்பா சொல் விட்டாராம்.
கொழுந்தி யாளுக்குப் போடலாம், கொலவ விட்டவங்களுக் கெல்லாம் கொலுசு போட முடியுமா?
நாங்கள் நேற்றும் தி.மு.க. இன்றும் தி.மு.க. நாளையும் தி.மு.க. என்றும் எங்கள் உறவு தொடரும்…” என்று பேசிக்கொண்டிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அமைச்சரவையில் விஜய் இடம் கொடுத்த பிறகு, மொத்தமாக மாறிப்போய்விட்டார்கள். அமைச்சர் ஷாஜகான், ‘தி.மு.க. துடைத்தெறியப்படும்’ என்று பேசுகிற அளவுக்கு அவர்களை த.வெ.க. மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறது. இது திமுக-வுக்கு பெரிய ஷாக்! அன்னிக்கு அந்த அணில் கதையைச் சொல்லாம இருந்திருக்கலாம்… இனிமே ஷாக்குக்கு மேல ஷாக்குதான்..! ஆதவ் அர்ஜுனா வைகோவை சந்தித்தார். மறுநாள் கோட்டையில் வைகோ – விஜய் சந்திப்பு நடந்தது. ஸ்டெர்லைட் பிரச்னை பற்றிப் பேச வைகோவின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு டெல்லி வரும்படி விஜய்யை அழைக்க இந்தச் சந்திப்புகள் என்று ம.தி.மு.க. சொன்னாலும், தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.மு.க-வும் விலகப் போவது கிட்டத்தட்ட உறுதி என்கிறார்கள். கோயில் எதுவானால் என்ன, பிரசாதம் வேணும்னா முண்டியடிச்சுக்கிட்டுதான் போகணும்..!
முதலில் தமிழ் மாநில காங்கிரஸ், தொடர்ந்து பா.ஜ.க என பழைய வெற்றிக் கூட்டணியை மீண்டும் அமைக்க தி.மு.க-வில் முயற்சி நடக்கிறதாம். தமிழ் மாநில காங்கிரஸ் மறுபடி தி.மு.க. பக்கம் வரும்போது அந்தக் கூட்டணி உறுதியாகிவிடுமாம். தி.மு.க-வும் இவர்களை வரவேற்கத் தயாராகிறதாம்.
ஸ்கூல் ரீயூனியனில் பழைய காதலி கிடைக்காவிட்டாலும் பையனுக்கு ஒரு பொண்ணு கிடைக்கலாமில்லையா?
ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியில் நம் முதல் எதிரி என்ற முடிவுக்கு வந்துவிட்டார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அதனால்தான் முரசொலியில் பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி கண்ணடித்தார் அப்படிப் பண்ணினார், இப்படிப் பண்ணினார் என்று தனிப்பட்ட முறையில் அவரை விமர்சனம் செய்யும் வேலையில் தி.மு.க இறங்கி இருக்கிறது. போன வருடத்துக்கும் இந்த வருடத்துக்கும் ராகுல் காந்தியின் பிறந்தநாளுக்கு ஸ்டாலின் வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்தில் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தாலே இது புரியும் என்கிறார்கள்.
கூட்டமா இருந்தா கோஷம் போடலாம்… கட்சியில அவர் மட்டும்தான் இருக்கார்…. தனியா இருக்கிறவரைத் தனிப்பட்ட முறையிலதான கவனிக்கமுடியும்..?
ஜோதிடர் சொன்ன யோசனையின் பேரில்தான் டெல்லியில் இருந்து நேராக சென்னைக்குத் திரும்பாமல் மூகாம்பிகை கோயிலுக்கு விஜயம் செய்தாராம் முதல்வர் விஜய்.முன்பு எம்.பி. தேர்தலில் பெரும் சரிவு ஏற்பட்டபோது எம்.ஜி.ஆர். மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றுதான் மீண்டும் முழு பவருடன் முதல்வர் ஆனார் என்று ஜோதிடர் சுட்டிக்காட்டினா ராம்.
கோயிலுக்கு எம்.ஜி.ஆர். தங்க வாள் கொடுத்தார். விஜய் ஒரு வெள்ளி வாள் கொடுத்தாராம். கொடுத்துவிட்டுத் திரும்பும் நேரத்தில், கர்நாடகத்தில் இவரைப் பற்றி மோசமாக பேசிக்கொண்டிருந்த நடிகர் பிரகாஷ்ராஜ், தர்மஸ்தலா சர்ச்சை விவகாரத்தில் வசமாக மாட்டிக் கொண்டார். அதை ஜோதிடர் இப்போது உற்சாகமாகச் சுட்டிக் காட்டுகிறாராம். ‘கில்லி’யில் வில்லனா நடிச்சபோதே வேண்டி மிருக்கலாம்… பூச்சியாருக்குத் தெரிஞ்சு விஜய்க்குப் பெரிய எதிரி யாரும் இல்லையோ! பூச்சியாருக்கு மட்டும் எவ்வளவு எதிரி இருந்தாலும் போதாது போல. புது எதிரிகளைத் தேடிப் பறந்தார் பூச்சியார்.
