Home தமிழ்நாடு ஆஸ்தான ஒளிப்பதிவாளருக்கு அரசு பதவி? விளக்கம் அளித்த விஜய்! – Kumudam

ஆஸ்தான ஒளிப்பதிவாளருக்கு அரசு பதவி? விளக்கம் அளித்த விஜய்! – Kumudam

0


தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. திமுக மற்றும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்த நிலையில், முதலமைச்சர் விஜயின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்து அரசியல் விவாதங்களை கிளப்பி வருகின்றன. அவரது ஆட்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கருத்துகள் நிலவி வரும் சூழலில், சமீபத்திய நியமனம் ஒன்று புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

முன்னதாக, தனது ஜோதிடருக்கு அரசு பொறுப்பு வழங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது தனது நெருங்கிய ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சாவுக்கு முக்கிய அரசுப் பதவி வழங்கியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்கும் அவர், முதலமைச்சர் விஜய் நடித்த நண்பன், பீஸ்ட், லியோ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவர். மேலும், விஜயுடன் நெருக்கமான தொழில்முறை உறவு கொண்டவராகவும் அறியப்படுகிறார்.

அதுமட்டுமின்றி, விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள மனோஜ் பரமஹம்சா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னட திரைப்படங்களிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இதனுடன், எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் 2026-27 கல்வியாண்டுக்கான இளங்கலை காட்சிக்கலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை தேர்வுக்குழுவிற்கும் பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இயக்குநர்கள் வெற்றிமாறன், லிங்குசாமி, பேரரசு ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். மேலும் ஒளிப்பதிவாளர்கள் வேல்ராஜ், விஜய் மில்டன், படத்தொகுப்பாளர்கள் ஸ்ரீகர் பிரசாத், ராமர், வண்ண வடிவமைப்பாளர் பாலாஜி, கலை இயக்குநர் முத்துராஜ், ஒலி பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

எனினும், மனோஜ் பரமஹம்சா முதலமைச்சர் விஜயுடன் நீண்டகாலமாக நெருக்கமாக பணியாற்றியவர் என்பதால், அவரது நியமனம் அரசியல் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதை சுட்டிக்காட்டி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், “முதல்வரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளதுஎன்று விமர்சித்து வருகின்றன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள், எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் என்பது திரைப்படத் துறையுடன் தொடர்புடைய கல்வி நிறுவனம் என்பதால், அந்தத் துறையில் அனுபவம் மற்றும் சாதனை படைத்தவர்களே தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவது இயல்பான நடைமுறை என வாதிடுகின்றனர். மேலும், ஒவ்வொரு நியமனத்திலும் அரசியல் நோக்கத்தைக் காண்பது தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனால், மனோஜ் பரமஹம்சாவின் நியமனம் திறமையின் அடிப்படையிலானதா அல்லது நெருக்கத்தின் அடிப்படையிலானதா என்ற விவாதம் தற்போது தமிழக அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

 

 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version