Home தமிழ்நாடு காவேரி கூக்குரல் உணவுக்காடு வளர்ப்பு கருத்தரங்கு: 6 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பு  – Kumudam

காவேரி கூக்குரல் உணவுக்காடு வளர்ப்பு கருத்தரங்கு: 6 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பு  – Kumudam

0


“விவசாயிகளின் வருமானமும் மக்களின் ஆரோக்கியமும் மேம்பட உணவுக்காடு வளர்ப்பும் மரம் சார்ந்த விவசாயமுமே நிலையானத் தீர்வு” என சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்க கருத்தரங்கில் விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் வலியுறுத்திப் பேசினர். இக்கருத்தரங்கில் 6000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். 

சத்குருவின் ‘மண் காப்போம் – காவேரி கூக்குரல்’ இயக்கம் சார்பில் “உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா” என்ற தலைப்பிலான மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, திருச்சி எஸ்.ஆர்.எம் பல்கலை. வளாகத்தில் கடந்த 14-ம் தேதி  நடைபெற்றது. இவ்விழாவில் காவேரி கூக்குரல் இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில், “சத்குரு தொடங்கிய காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒரு பகுதியாக அவர் மேற்கொண்ட விழிப்புணர்வு பேரணிக்குப் பின், விவசாயிகளிடம் ‘மரம் சார்ந்த விவசாயம்’ குறித்த விழிப்புணர்வு பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால், எங்களது நர்சரிகளில் மரக்கன்றுகளுக்கான தேவை உயர்ந்து, உற்பத்தியை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இம்முறை மூலம் மண் வளம், மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறன், நதிநீர் வளம் ஆகியவை மேம்படுவதுடன், விவசாயிகளின் வருமானமும் கணிசமாக உயர்கிறது.

சமீபத்தில் ஓசூரில் நடைபெற்ற வேளாண் கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அவர்களிடம், ‘வேளாண் காடுகள்’ என்ற பெயரை ‘மரம் சார்ந்த விவசாயம்’ என மாற்றக் கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்று, பெயர் மாற்றம் செய்யப்படும் என அவரும் அறிவித்துள்ளார். இது மரம் சார்ந்த விவசாயத்திற்கு விவசாயிகள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் கிடைத்துள்ள அங்கீகாரம் மற்றும் வரவேற்பைக் காட்டுகிறது” என்றார்.

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் செல்வராஜன் பேசுகையில், “1970-களில் ஒரு கிலோ யூரியா பயன்படுத்தி 30 கிலோ கோதுமை மகசூல் கிடைத்தது. ஆனால், இன்று அதே ஒரு கிலோவிற்கு 5 கிலோ மட்டுமே கிடைக்கிறது. அளவுக்கு அதிகமான ரசாயன உரப் பயன்பாட்டினால் மண்ணின் கரிமச் சத்து பெருமளவு குறைந்து, மண் வளம் சீர்கெட்டுள்ளது. மண்ணின் வளம் இழந்த பிறகு, நாம் எவ்வளவு உரங்களைக் கொட்டினாலும் மகசூலை அதிகரிக்க முடியாது. இந்தச் சூழலில் மரம் சார்ந்த விவசாயம் மிகவும் அவசியமாகிறது. 

நமது ஆராய்ச்சி நிலையம் கடந்த 30 ஆண்டுகளில் 9 புதிய வாழை ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது ‘காவேரி’ என்ற புதிய வாழை ரகத்தைக் கண்டறிந்துள்ளோம். இதில் சுக்ரோஸ் இல்லாததால், சர்க்கரை நோயாளிகளும் இதனை உட்கொள்ளலாம். வாழையிலிருந்து 40-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரித்து, விவசாயிகள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும்.” எனக் கூறினார். 

தென்னைக்குள் உணவுக்காடு அமைப்பது குறித்து முனைவர் பாலமோகன் பேசுகையில், “ஒரு ஏக்கர் தென்னைத் தோட்டத்தில் பெரும்பாலான பரப்பளவு பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த இடத்தில் உணவுக்காடு மற்றும் பல அடுக்கு பலபயிர் சாகுபடி செய்யலாம். இந்த முறையால் சூரிய ஒளியை முழுமையாகப் பயன்படுத்த முடிவதோடு, இலைகள் மற்றும் தாவரக் கழிவுகளை மூடாக்காக பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது. மேலும், மண்ணில் கரிமக் கார்பன் அளவு அதிகரித்து, பயனுள்ள நுண்ணுயிர்கள் வளர்ச்சியடைகின்றன. வேர் சுற்றுப்பகுதியில் உள்ள வளங்களும் திறமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, தென்னைக்குள் உணவுக்காடு அமைப்பது விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை உறுதிசெய்யும்” எனத் தெரிவித்தார். 

ஐநா விருது வென்ற விவசாயி வள்ளுவன் பேசுகையில், “தென்னை என்ற ஒற்றைப் பயிர் சாகுபடி செய்து வந்த என்னிடம், சத்குருவின் மண் காப்போம் இயக்கம் மரம் சார்ந்த விவசாயத்தை அறிமுகப்படுத்தியபோது பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் மண்ணில் உள்ள கரிமச் சத்தின் முக்கியத்துவத்தை புரியவைத்து, அதை மேம்படுத்தும் வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்தனர். அவர்களின் வழிகாட்டுதலில் மா, பலா, வாழை, சப்போட்டா, ஜாதிக்காய், மிளகு உள்ளிட்ட 14 வகையான பயிர்களை தென்னைக்குள் சாகுபடி செய்து வருகிறேன். இன்று கோவையில் இருந்த ஒரு சாதாரண விவசாயியான என்னை ஐநா வரை கொண்டு சென்ற ஈஷாவிற்கும் சத்குருவிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் உட்பட 4 வேளாண் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மா, பலா மற்றும் அவகாடோ சாகுபடியின் தொழில்நுட்பங்கள், சந்தை வாய்ப்புகள் மற்றும் பராமரிப்பு முறைகள் விளக்கமளித்தனர். பழ வகைகளை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தும் தொழில்நுட்பங்களைத் தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு நிறுவன விஞ்ஞானிகள் எடுத்துரைத்தனர்.

இதனுடன் 5 மாநில முன்னோடி விவசாயிகளும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஆந்திராவின் அனந்தபூரில் வெற்றிகரமாக ஆப்பிள் சாகுபடி செய்து வரும் விவசாயி ரமணா ரெட்டி, சமவெளியிலும் ஆப்பிள் சாகுபடி குறித்த தகவல்களைப் பகிர்ந்தார். பப்பாளியில் லாபம் ஈட்டுவது குறித்த தொழில்நுட்பங்களை வேளாண் விஞ்ஞானி சரவணன், 100-க்கும் மேற்பட்ட பலா வகைகளைக் காட்சிப்படுத்தி, அவற்றின் சிறப்புகளை முன்னாள் வேளாண்மைத்துறை துணை இயக்குநர் ஹரிதாஸ் ஆகியோர் விளக்கினர். 

குறிப்பாக, ஒரே மரத்தில் 300 மாம்பழ வகைகளை உருவாக்கிச் சாதனை படைத்த இந்தியாவின் ‘மேங்கோ மேன்’ பத்மஸ்ரீ கலீம் உல்லா கான், மாம்பழ சாகுபடியில் தனது நீண்டகால அனுபவங்களையும் வெற்றி ரகசியங்களையும் பகிர்ந்து கொண்டார். இவ்விழாவின் முக்கிய அம்சமாக நடைபெற்ற கண்காட்சியில், 60-க்கும் மேற்பட்ட வாழை ரகங்களும், 100-க்கும் மேற்பட்ட மா மற்றும் பலா ரகங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், மா, பலா, அவகேடோ, ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு பழ மரக்கன்றுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவற்றை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version