Home அரசியல் கடைசி நேர ட்விஸ்ட்: அதிமுகவுக்கு டாடா..! அறிவாலயத்துடன் கை கோர்த்த தேமுதிக – Kumudam

கடைசி நேர ட்விஸ்ட்: அதிமுகவுக்கு டாடா..! அறிவாலயத்துடன் கை கோர்த்த தேமுதிக – Kumudam

0


மாநிலங்களவை (Rajya Sabha) இட ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் தேமுதிக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தேமுதிக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணியை உறுதிப்படுத்தினார். 2005-ல் தொடங்கப்பட்ட தேமுதிக, தனது 20 ஆண்டு கால அரசியல் பயணத்தில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வருடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “மாவட்டச் செயலாளர்களின் விருப்பத்திற்கு இணங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2016-லேயே அமைய வேண்டிய இந்தக் கூட்டணி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இணைந்துள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தனிக் குழு அமைக்கப்படும்; ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து முதல்வர் முறைப்படி அறிவிப்பார். இந்தக் கூட்டணிக்குத் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.

கடந்த 2011-ல் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்த தேமுதிக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தது. தற்போது ஆளுங்கட்சி கூட்டணியில் இணைந்துள்ளதால், தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version