2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்க்காத முடிவாகவே அமைந்தது. குறிப்பாக, திமுக Vs அதிமுக கான்சப்டையே அடித்து துவம்சம் செய்தது தவெக. அதாவது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியல் களத்தில் யாருமே அசைக்க முடியாத சக்திகளாக இருந்த இருபெரும் திராவிடக் கட்சிகளையும் ஒரே அணியில் அமரவைத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராகியுள்ளார் விஜய்.
கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி, திமுக அமைச்சரவையில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் தோல்வி, கோட்டையான சென்னையை இழந்தது என அடிக்கு மேல் அடி வாங்கியது திமுக. இருந்தும் ஏதோ சமாளித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டது. ஆனால், மறுபக்கம் அதிமுகவோ எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்ததோடு, கட்சி இரண்டாகப் பிளவுப்பட்டு, மீண்டும் கஷ்டப்பட்டு ஒன்றாகியுள்ளது. ஆனால் எடப்பாடியார் தலைமை மீது அதிருப்தியில் இருப்பவர்கள் தொடர்ந்து கட்சியில் நீடித்தாலும், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டுள்ள மாஜிக்கள் சிலர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகும் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெகவில் இணையும் பிரமாண்டமான இணைப்பு விழா இன்று(ஜூன் 06) நடைபெற்றது.
இதில் அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இந்த இணைப்பில் அதிகமாக இருந்தது அதிமுகவினர் தான். குறிப்பாக, அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர்களாகவும் முக்கிய நிர்வாகிகளாகவும் இருந்த கடலூர் மாவட்டத்தின் எம்.சி.சம்பத், திருப்பூர் மாவட்டத்தின் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் கடம்பூர் ராஜூ ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஒரே நேரத்தில் பனையூருக்கு விசிட் அடித்து தவெகவில் ஐக்கியமாகினர்.
செங்கோட்டையன் போட்ட பிள்ளையார்சுழி, இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். முன்னதாக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-வும் முன்னாள் டி.ஜி.பி-யுமான நட்ராஜ் ஆகியோர் தவெகவில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அதிமுக நடப்பு எம்.எல்.ஏ-க்களான இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், பி.சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருந்தனர்.
இத்தகையச் சூழலில், விஜய்பாஸ்கர், சிவி சண்முகம் போன்ற இன்னும் சில மாஜி அமைச்சர்கள் தவெக இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக மட்டுமல்ல திமுகவைச் சேர்ந்த சில முக்கிய தலைகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
