Home அரசியல் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்எல்ஏக்கு நீதிமன்றம் தடை  – Kumudam

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்எல்ஏக்கு நீதிமன்றம் தடை  – Kumudam

0



நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பெரியகருப்பன் 83,364 வாக்குகளையும், தவெக சார்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் பெற்றனர். ஒரு வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரியகருப்பன் வழக்குத் தாக்கல் செய்தார். அவரது மனுவில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதிக்கு எனப் பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.எனவே, அந்த வாக்குகளை மீட்டு என்னுடைய தொகுதியின் கணக்கில் சேர்க்க வேண்டும். அதுவரை தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி, என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்றைய தினம் மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தரப்பில், மூத்த வழக்குரைஞர் ஜி.ராஜகோபாலன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தேர்தல் முடிவுக்கு எதிராக தேர்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகள், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.

தபால் வாக்குகள் தொகுதி மாறி அனுப்பி வைக்கப்பட்டது என்ற புகாருக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், ஒரு தொகுதியில் எண்ணப்பட்ட தபால் வாக்கை, வேறு தொகுதிக்கு அனுப்ப முடியாது. மேலும், வேறு தொகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட தபால் வாக்கைப் பெற்று மறு எண்ணிக்கை நடத்தக் கோரும் மனுக்கள் மீது முடிவெடுக்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை.

 

வழக்கமாக தபால் வாக்குகள் தொகுதி எண், பெயருடன்தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே, தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

 

பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ, தபால் வாக்கு வேறு தொகுதிக்கு சென்றிருப்பதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு. வாக்கு மாறி வந்தது தொடர்பாக தேர்தல் அதிகாரியே தெரிவித்திருக்கிறார். தபால் வாக்கு தொகுதி மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை.

 

தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தால், என்ன நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து சட்டத்தில் குறிப்பிடவில்லை என வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால் நாளை விஜய் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் திருப்பத்தூர் எம்எல்ஏ பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version