படம் அவுட்டு… பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி
’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்போம். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்லுவோம். ‘கடவுள் அமைத்துவைத்த மேடை’ என்று பாட்டு கூட ரொம்பப் பிரபலம்தான்! இல்லறத்தையும் மனைவியையும் கொண்டாடுகிற பாடல்களும் படங்களும் எத்தனையெத்தனையோ வந்துவிட்டாலும் சில பாடல்கள் நம்மை என்னவோ செய்யும். ‘எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்து பார்த்தவன் நான்.
எனவே, இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கியதை எனக்கு உண்டு’ என்று கவியரசு கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். ‘மன்மத லீலை’யின் நாயகனும் கிட்டத்தட்ட அந்த வகைதான். ‘மன்மதலீலையை வென்றார் உண்டோ?’ என்று பாகவதர் காலத்து பாடலை, வாழ்க்கையே வரித்துக்கொண்டு, பார்க்கிற பெண்களிடமெல்லாம் வழிந்து, அவர்களை வரித்துவிடப்பார்க்கிற காமாந்தகன் தான் ‘மன்மத லீலை’ படத்தின் ஹீரோ!
இதோ… இந்தப் பாடலைக் கூட தன் மனைவிக்காகப் பாடாமல், பிறன்மனை நோக்கிப் பாடுகிறான், இந்தப் பாடலை. ஆனாலும் பாடலின் பொருளால், உள்ளர்த்தத்தால், ‘காமாலைக்காரனுக்கு பாக்கறதெல்லாம் மஞ்சளாத் தெரியும். இவனும் அப்படித்தான்யா’ என்று அவனை மன்னித்து, கதைக்குள் வருகிற பாடலையும் கவியரசு கண்ணதாசனையும் வேதமாக எடுத்துக்கொண்டுவிட்டோம்!
இயக்குநர் சிகரம் பாலசந்தரின் படைப்பு ‘மன்மதலீலை’. அவரின் உன்னத படைப்பான கமல், இதன் நாயகன். 1976ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு மெல்லிசை மன்னர்தான் இசை. அத்தனை பாடல்களையும் கவியரசு கண்ணதாசன் எழுதினார். ‘படத்தோட டைட்டில் ‘ஒருமாதிரி’ இருக்கே’ என்று சிலர் புறந்தள்ளினார்கள். போஸ்டர்களும் அப்படியே பறைசாற்றின.
‘அழகா பொண்டாட்டி இருக்கா.நல்லபடியா குடித்தனம் பண்ணப்படாதோ. இதென்ன லோலோனு பாக்கற லேடீஸையெல்லாம் தின்பண்டமா நினைச்சு, கொத்திண்டே இருக்கான்’ என்று என் அத்தை கமலுக்கும் பாலசந்தருக்கும் சாபமெல்லாம் கொடுத்தாள். ஆனால், ஜேசுதாஸின் குரலும் கண்ணதாசன் வரிகளும் கமலின் நடிப்பும் பாலசந்தர் இயக்கமும் எம் எஸ்வியின் இசையும் சாபத்துக்கெல்லாம் விமோசனமாக அமைந்தது. அதுதான் ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ பாட்டு!
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன? உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு எனக்கது புரிந்தது இன்று
படத்தில், பேரழகனாக இருப்பார் கமல். வகிடு எடுத்த பழைய கமலும் அந்தப் பெரிய மூக்குக் கண்ணாடியும் இன்னும் அழகு சேர்க்கும். இரவில் நிலவிருக்கு, உறவினில் சுகம் இருக்கு, மனைவிக்கு கனவு இருக்கு, அந்தக் கனவு புரிந்தது எனக்கு என்று அடுத்தவரின் மனைவிக்கு ‘ரூட்’ விடுகிற கமலுக்குத் துணையாக, மெல்லிசை மன்னர், கண்ணதாசன், ஜேசுதாஸ் என மூவரும் துணை நிற்பார்கள். ‘நீ ஜமாய் ராசா’ என்று சொல்வது போல இருக்கும். ஆனால்…
பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்
என்கிற வரிகளில், ‘நீதிடா, நியாயம்டா, நேர்மைடா’ என்று உணரவைப்பார். ஆனால் ஹீரோ, க்ளைமாக்ஸில்தான் உணருவார்; தெளிவார். ‘கணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும்’ என்ற வரிகளில், கண்ணதாசன் தாம்பத்யத்தின் மேன்மை சொல்லி, மேலோங்கி நிற்கிறார்.
கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாபம் அருகினில் இருந்தென்ன லாபம்?
என்று அந்த மனைவியின் மனவலிகளையும் உணர்த்துகிறார். இப்படி அடுத்தவரின் உணர்வுகளை மதிப்பதாக ‘அல்வா’ கொடுக்கிற சத்யராஜ்கள் மாதிரியான உலகத்தில்தானே, நாமும் இருந்துதொலைக்க வேண்டியிருக்கிறது!
பாடலுக்கு நடுவே, அந்தப் பெண்ணை மயக்குவதற்காக, ரேடியோ அறிவிப்பு போல், கமல் குறும்பு செய்வார். அது பாலசந்தரின் ஸ்டைல். ‘இந்தப் பாடலை விரும்பிக் கேட்ட நேயர்கள் என்று பல பெயர்களைச் சொல்லுவார். கடைசியாக, சாந்தோம் விஸ்வநாதன்’ என்று முடிப்பார். சென்னை மயிலாப்பூரில் சாந்தோம் என்ற பகுதி இருப்பதும் அந்த சாந்தோம் பகுதியில், மெயின் ரோட்டில் பயணித்தால், மிகப்பெரிய பலகையில் ‘மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்’ என்று இருக்கிற வீட்டையும் பார்த்திருக்கிறீர்கள்தானே!
கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு, டூவீலர் இல்லாமல் இருந்த எனக்கு, என் மனைவி ’யமஹா ரே’ வாங்கித் தந்து, மாதத்தவணைக் கட்டிக்கொண்டிருக்கிறாள். அந்த வண்டியின் முன்பகுதியில், நான் எழுதியிருந்த ஸ்டிக்கரை நிறையபேர் கூர்ந்து பார்ப்பார்கள்.
சிலர், ‘அப்படீன்னா என்ன சார்?’ என்று கேட்பார்கள். உடனே நான் ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த…’ என்று நிறுத்துவேன். உடனே கேட்ட பலரும் ‘வரம்’ என்று ஜேசுதாஸ் குரலில், கமல் ஸ்டைலில் பாடுவார்கள். ‘அதுதான் அர்த்தம்’ என்று நான் சொல்லுவேன். இப்போதும் என் ‘யமஹா ரே’ வண்டியில் இருக்கிற அந்த வாசகம்… ‘வரம் தந்த பரிசு!’ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற பாடலை இன்றைக்குக் கேட்டுப்பாருங்கள். இந்தப் பாடலைக் கேட்பதும் கூட வரம்தான்!





