back to top
20.4 C
London
Sunday, September 27, 2026
No menu items!
Homeசினிமாபடம் மறந்தாலும்... பாட்டு மறக்குமா? ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ சொல்லும் 70s இசை நினைவுகள்! -...

படம் மறந்தாலும்… பாட்டு மறக்குமா? ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ சொல்லும் 70s இசை நினைவுகள்! – Kumudam

Date:

Related stories

பதிவை மாற்றிப் போட்டு மாட்டிக்கொண்ட மின்சாரத்துறை.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!

மின்வெட்டு குறித்து அமைச்சரின் விளக்கத்திற்கு முரணாக இருந்த மின்சாரத்துறையின் பதிவு...

ரத்த வெள்ளத்தில் நானி… ‘தி பாரடைஸ்’ எப்படி இருக்கு?

நானியின் அதிரடி ஹீரோயிஸம், ரத்தம் தெறிக்கும் சண்டைகள், இருள் சூழ்ந்த...

ஹார்முஸ் நீரிணைக்கு புதிய பெயர்.. ஈரானை வம்புக்கு இழுத்த டிரம்ப்..!

ஹார்முஸ் நீரிணை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக...
spot_imgspot_img



படம் அவுட்டு… பாட்டு ஹிட்டு! – வி.ராம்ஜி

மெல்லிசை மன்னரின் காலம் என்றிருந்தது போல், இசைஞானியின் காலம் என இன்றுவரை இருப்பது போல், இவர்களுக்கு நடுவே பட்டையைக் கிளப்பிய இசையமைப்பாளர்களின் பட்டியலும் உண்டு. இன்றைக்குத்தான் நூறு கோடிகளில் சம்பளம், முந்நூறு கோடிகளில் படத்தின் செலவுகள் என பிரமாண்டம் கூடியிருக்கின்றன. ஆனால் எழுபதுகளில் மினிமம் கியாரண்டி படங்களாக வந்த படங்கள்தான் தாராளம்; ஏராளம்! ஹிந்திப் படங்களின் இரட்டை இசையமைப்பாளர்கள் சக்கைப்போடு போட்டது போல், நம்மூரில் மெல்லிசை மன்னர்கள் வெற்றிக்கொடி நாட்டியது போல், இரட்டை இசையமைப்பாளர்கள் எழுபதுகளில் தங்களுக்கென இசைக்கோட்டையை கட்டியெழுப்பினார்கள். அவர்கள்தான் சங்கர் கணேஷ்! குறைந்த செலவில் வந்த படங்கள், மிகப்பெரிய வரவேற்பைப் பெறாவிட்டாலும் தலையில் துண்டு போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர்கள் நிறையபேர் இருந்தார்கள். முதலுக்கு மோசமில்லாத படங்களும் மோசமில்லாத படங்களும் நிறையவே வந்தன. அப்படியொரு படம்தான் ‘நீ ஒரு மகாராணி!’

1976ஆம் ஆண்டு வெளியான ‘நீ ஒரு மகாராணி’ என்ற படம் பற்றிக் கேட்டால் நடித்தவர்களைக் கூட மறந்திருப்பார்கள். இயக்குநர்களைக் கூட மறந்திருப்பார்கள். அவ்வளவு ஏன்… இசையமைத்தவர்களின் பெயர்களைக் கூட தப்புத்தப்பாகச் சொல்லுவார்கள். ஆனால் அந்தப் பாட்டுக்கு இன்னும் வயதே ஆகவில்லை. இன்றைக்கும் குழந்தையைப் போல், நம் செவிகளில் தவழ்ந்து, மனதில் நடைபயிலும் பாட்டு. அதுதான்… ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை பருவம் பதினாறு’ என்ற பாடல்!

 
‘மயிலு இருக்கிற அழகுக்கும் அறிவுக்கும் சீமையிலேருந்து கோட்டுசூட்டு போட்டவன் தான் வருவான். இந்த சப்பாணியா வருவான்’ என்று ‘பதினாறு வயதினிலே’ கிராமத்தார் பேசுவது போல், ‘நமக்கும் படம் பண்ணனும்னு ஆசைதான். ஆனா, எம்ஜிஆர், சிவாஜியை வைச்செல்லாம் படம் எடுக்க அம்புட்டு பணம் இல்லீங்களே..’ என வருந்தியவர்களுக்கு, ஆபத்பாந்தன் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்தான் என்பதை, சினிமா வரலாறு சொல்லும்!

 
அறுபதுகளின் நடுவே நடிக்கவந்து, தனக்கென மார்க்கெட் வேல்யூ வைத்திருந்த ஜெய்சங்கர், கர்வத்தை மட்டும் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை. அதேபோல், பீரோவில் கட்டுக்கட்டுகளாக பணம் சேர்க்கவும் ஆசைப்படவில்லை. எழுபதுகளின் நடுவிலும் அப்படியே குணம் மாறாமல் இருந்தார். அதேபோல், ஸ்ரீப்ரியாவின் ஆரம்பப் படங்களில் இதுவொன்று. முதல்படமான ‘அவள் ஒரு தொடர்கதை’யிலேயே டாப் கியர் போட்ட சுஜாதாவுக்கும் ஆரம்பக்கட்ட படங்களில் ஒன்றுதான்! ஆனால் என்ன… அப்போது சுஜாதாவை அதாவது நாயகியை முன்னிறுத்தியே பல படங்கள், வரிசைவரிசையாக வந்தன.

 
சொர்ணம் இயக்கத்தில் வந்த ‘நீ ஒரு மகாராணி’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், பாட்டுக்கச்சேரிக்காரர்களுக்கு அல்வாத்துண்டு. தூக்கமாத்திரை இருக்கிறது. தூக்கம் வராமல் இருப்பதற்கு மாத்திரை உண்டா? விழாக்களில் இரவு பத்துப் பதினொரு மணிக்குத் தொடங்கும் கச்சேரியில் அங்கொருவரும் இங்கொருவருமாக தூங்கி வழிந்தாலோ விழுந்தாலோ… ‘அடுத்த பாடல்… பாடல்… டல்… ல்… எல்லோரும் விரும்பிக் கேட்ட பாடல்…’ என்று இந்தப் பாடலைச் சொன்னதும், தூக்கமும் சரி, துக்கமும் சரி… ஊர் எல்லையைத் தாண்டி ஓடியேபோயிருக்கும்! 

கவிஞர் வாலி எழுதிய பாடல். சங்கர் கணேஷ் இசையமைத்த பாடல். அந்தக்கால எஸ்பிபியின் இன்னும் இளமையான குரல் தவழும் பாடல். கானக்குயில் சுசீலாம்மாவின் பாடல்!

அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை
பருவம் பதினாறு
என்று எஸ்பிபி பாடுவார்.

அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன்
வாழிய பல்லாண்டு
என்று சுசீலாம்மா கொஞ்சுவார்.

 
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே

என்று அந்தக் காதலர்களான ஜெய்சங்கரும் ஸ்ரீப்ரியாவும் கொஞ்சிப் பாடி நடித்தபோது, மேடைக்கு எதிரில் ‘ஹா’என விழிகள் விரிய பாடுவதையும் வாசிப்பதையும் பார்த்துக்கொண்டிருந்த அத்தனைபோரும் அந்த ஐந்துநிமிடம் சொர்க்கத்தில் வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை!

 
கிளார்நெட், புல்லாங்குழல் என உச்சஸ்தாயி எடுக்கும் இந்தி ஸ்டைலில் அமைந்திருக்கும் பாடல் என்று கொண்டாடினார்கள் ரசிகர்கள். ‘நம்மூர்லயும் இதுமாதிரிலாம் போட ஆள் இருக்குல்ல…’ என்று சங்கர் கணேஷைக் கொண்டாடினார்கள். அவர்களை நிறுத்தி, ‘இந்த ரெண்டுபேர்ல யாரு சங்கர், யாரு கணேஷ். லட்ச ரூபாய் பரிசு’ என்று பாண்டிய மன்னனே அறிவித்தாலும், ‘இவர்தான் சங்கர். இல்ல இல்ல… இவர்தான் கணேஷ்’ என்று குழம்பித்தான் போனார்கள். ஆனால் என்ன… இந்த இரட்டை இசையமைப்பாளர்களின் பாடல்களைக் கொண்டாடித் தீர்த்தார்கள் சினிமா ரசிகர்கள். இவர்களின் ஆயிரம் தேன் துளிகளில் ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’யும் ஒரு துளி தேன்!

வாலைப் பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம் எதுவென அறிந்தது நெஞ்சம்

என்று படபடவெனப்பாடிக் கொஞ்சி வேகமெடுப்பார் எஸ்பிபி.

போகப் போக புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனக்கென்ன அதிசயம் இதுவென விளக்கிடு கொஞ்சம்

என்று சுசீலாம்மாவும் இளமை மாறாமல் கூடுதல் சுவை சேர்த்து மயக்குவார்.

இன்பத்தில் நீயும் நானும் ஊமை இல்லையோ என்று பாலு பாட… மிச்சங்கள் என்னென்ன நாளை என்று கூறவில்லையோ என்று சுசீலாம்மா குழைய… ஜெய்சங்கர், ஸ்ரீப்ரியா இதேபோல் ஏராளமான படங்களில் ஜோடி போட்டதை மக்கள் வரவேற்றார்கள். ஜெய்சங்கர் – ஜெயசித்ரா போல்,ஜெய்சங்கர் – ஸ்ரீப்ரியா ஜோடியும் செம ஜோடி என கொண்டாடப்பட்டது.

மீனிருக்கும் கண்ணில் நான் இருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை ஏற்றுக் கொள்வாயோ
‘கண்ணு மீன் மாதிரி இருக்கு. அந்தக் கண்ணில் நான் இருந்து நீந்தட்டுமா? என்று வாலி வார்த்தையில் காதல் சேர்ப்பார்.

நினைவிருக்கும் நெஞ்சில் நானிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை ஏந்திக் கொள்வாயோ
வெற்றிலையில் சுண்ணாம்பு தடவுவது போல் அடுத்து காதலுடன் காமத்தையும் தடவிக் கொடுத்திருப்பார் வாலி.

அச்சத்தை ஆசை வந்து வெல்லக்கூடாதோ
அம்மம்மா நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ…

எழுபதுகளில், பொங்கல் விழா, கபடி விழா, கோயில் திருவிழா, அப்புறம் தொடர்ந்து 24 மணி நேரமும் ஏழெட்டு நாட்கள் ஒரு வட்டப்பகுதியில் சைக்கிளை விட்டு இறங்காமல், சைக்கிள் ஓட்டி சாதிக்கும் விழா…, கல்யாண, காதுகுத்து, வளைகாப்பு விசேஷங்கள்… என பாகுபாடு இல்லாமல், ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை பருவம் பதினாறு’ பாடல் அங்கிங்கெனாதபடி, எல்லா விசேஷங்களிலும் நீக்கமற ஒலித்துக்கொண்டே இருக்கும்!

 
எனக்கு எட்டு வயதிருக்கும்போது, ‘அவள் ஒரு பச்சைக்குழந்தை’ பாடல் எனக்குப் பரிச்சயமானது. இப்போதும் இந்தப் பாடலை ஒருஎட்டு கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். டைம் மிஷினில் ஏறி, அந்த டிராயர் வயசுக்குக் கொஞ்சம் போய், உலாத்திட்டு வருகிற சுகத்தை இந்தப் பாடல் கொடுக்கும்! உங்களுக்கும் டைம் மிஷினில் ஒரு டூர் சென்று, உங்கள் பால்யத்தின் சடுகுடுவுடன் வாழ்ந்துட்டு வரணுமா? இந்தப் பாடலைக் கேளுங்கள்; டைம் மிஷினில் ஏறுங்கள்!



Source link

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here