தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில், 2026-27ஆம் ஆண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கையை இன்று காலை 10 மணி முதல் சுமார் இரண்டரை மணி நேரம் நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாக விமர்சித்தார்.
அப்போது பேசிய அவர், தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து, அவற்றை புதிய திட்டங்களாக விளம்பரப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். அதேபோலவே இந்த நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளதாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது அளிக்கப்பட்ட எந்த முக்கிய வாக்குறுதியும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும் கூறினார். இதனால் தமிழக மக்களுக்கு இந்த பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை என்றும், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பெயர்களை மட்டும் மாற்றி இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்தார். மடிக்கணினி திட்டத்தை “வெற்றி மடிக்கணினி திட்டம்”, கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை “வெற்றி வீடு கட்டும் திட்டம்” என பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தவெக அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டிற்கு “பூஜ்ஜியம் மார்க்” வழங்கலாம் என்றும், தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்ட எந்த திட்டமும் இதில் இடம்பெறவில்லை என்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
“மாற்றம், மாற்றம்” என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை என்றும், திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில்தான் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதை சுட்டிக்காட்டிய அவர், திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதற்காகவா அந்த ஆலோசனை நடைபெற்றது என்று கேள்வி எழுப்பினார்.
பட்ஜெட்டில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டை அந்த நிலைக்கு கொண்டு வந்தது திமுக ஆட்சிதான் என்றும், அதை நிதியமைச்சர் மறைமுகமாக ஒப்புக்கொண்டதற்காக திமுக சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்தார். ஒலிம்பிக் சிறப்பு மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என்றும், மடிக்கணினி திட்டம் மற்றும் கலைஞர் வீடு கட்டும் திட்டம் போன்றவற்றின் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை தவெக அரசு குறைத்துள்ளதாகவும், ஆடிப்பெருக்கு நாளில்கூட காவிரியில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் காவிரி நீர்வரத்து குறைந்துள்ளதாகவும் கூறினார்.
சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும் விமர்சித்த அவர், கடந்த ஐந்து வாரங்களில் நான்கு லாக்கப் மரணங்களும், ஐந்து சாதி ஆணவப் படுகொலைகளும் நடந்துள்ளதாக தெரிவித்தார். மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க தவெக அரசால் முடியவில்லை என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
நேற்று முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசியதாகவும், பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாகவும் கைது நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் பதில் அளித்த உதயநிதி தன்னை பட்ஜெட் தாக்கலின் போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தாம் கேள்வி எழுப்புவதைத் தடுக்கவே தன்னை கைது செய்ததாகவும், விவசாயிகள் பிரச்சினைக்காக பேசிய தன்னை காவல்துறை கைது செய்து அலைக்கழித்ததை தமிழக மக்கள் பார்த்ததாகவும் கூறினார். தவெக அரசின் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பவே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தன்னை மட்டுமின்றி திமுகவினர் மற்றும் திமுக GEN Z பிரிவினரையும் கைது செய்து வருவதாகவும், அதிமுக எம்எல்ஏக்களை விலை பேசும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். மின்வெட்டு பிரச்சினை நீடித்து வரும் நிலையில், 3.5 லட்சம் மக்களுக்கு அதிக மின்கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வை எதிர்த்து போராடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்படுவதாகவும் தவெக அரசை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.





